حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ حَدَّثَنَا ابْنُ هِلَالٍ يَعْنِي حُمَيْدًا قَالَ بَيْنَمَا أَنَا وَصَاحِبٌ لِي نَتَذَاكَرُ حَدِيثًا إِذْ قَالَ أَبُو صَالِحٍ السَّمَّانُ :
أَنَا أُحَدِّثُكَ مَا سَمِعْتُ مِنْ أَبِي سَعِيدٍ وَرَأَيْتُ مِنْهُ قَالَ بَيْنَمَا أَنَا مَعَ أَبِي سَعِيدٍ يُصَلِّي يَوْمَ الْجُمُعَةِ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ إِذْ جَاءَ رَجُلٌ شَابٌّ مِنْ بَنِي أَبِي مُعَيْطٍ أَرَادَ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَدَفَعَ فِي نَحْرِهِ فَنَظَرَ فَلَمْ يَجِدْ مَسَاغًا إِلَّا بَيْنَ يَدَيْ أَبِي سَعِيدٍ فَعَادَ فَدَفَعَ فِي نَحْرِهِ أَشَدَّ مِنْ الدَّفْعَةِ الْأُولَى فَمَثَلَ قَائِمًا فَنَالَ مِنْ أَبِي سَعِيدٍ ثُمَّ زَاحَمَ النَّاسَ فَخَرَجَ فَدَخَلَ عَلَى مَرْوَانَ فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ قَالَ وَدَخَلَ أَبُو سَعِيدٍ عَلَى مَرْوَانَ فَقَالَ لَهُ مَرْوَانُ مَا لَكَ وَلِابْنِ أَخِيكَ جَاءَ يَشْكُوكَ فَقَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْ فِي نَحْرِهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ
நான் ஒரு வெளிக்கிழமையில் அபூஸயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்றுவிடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து, அதன் எதிரே தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூஸயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்து செல்ல முற்பட்டார். உடனே அபூஸயீத் (ரலி) தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் (சுற்றிலும்) பார்த்தார். அபூஸயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்ல முயன்றார். அபூஸயீத் (ரலி) முதல் தடவையைவிடக் கடுமையாகத் தள்ளினார்கள். அந்த இளைஞர் (விலகாமல்) நின்றுகொண்டு அபூஸயீத் (ரலி) அவர்களைச் சாடினார்.
பிறகு மக்களை விலக்கிக் கொண்டு (ஆளுநர்) மர்வான் பின் ஹகம் (ரலி) இடம் சென்று நடந்ததை முறையிட்டார். அபூஸயீத் (ரலி) அவர்களும் மர்வான் (ரலி) இடம் சென்றார்கள். அப்போது, “உங்களுக்கும் உங்கள் சகோதரர் மகனுக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகின்றாரே!” என்று அபூஸயீத் (ரலி) அவர்களிடம் மர்வான் (ரலி) கேட்டார். அதற்கு அபூஸயீத் (ரலி), “மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் சண்டையிட (முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில் அவன் ஷைத்தான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் (ரலி) வழியாக ஸாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்)
குறிப்பு :
நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) ஸாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்), “நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைக் கண்டதையும் அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு ஹதீஸையும் உமக்குக் கூறுகின்றேன்” எனக் கூறிவிட்டு, மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள் என்று ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.