அத்தியாயம்: 43, பாடம்: 41, ஹதீஸ் எண்: 4357

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ النَّبِيُّ عَلَيْهِ السَّلاَمُ قَطُّ إِلاَّ ثَلاَثَ كَذَبَاتٍ ثِنْتَيْنِ فِي ذَاتِ اللَّهِ قَوْلُهُ ‏{‏ إِنِّي سَقِيمٌ‏}‏ ‏

‏ وَقَوْلُهُ ‏{‏ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا‏}

‏ وَوَاحِدَةً فِي شَأْنِ سَارَةَ فَإِنَّهُ قَدِمَ أَرْضَ جَبَّارٍ وَمَعَهُ سَارَةُ وَكَانَتْ أَحْسَنَ النَّاسِ فَقَالَ لَهَا إِنَّ هَذَا الْجَبَّارَ إِنْ يَعْلَمْ أَنَّكِ امْرَأَتِي يَغْلِبْنِي عَلَيْكِ فَإِنْ سَأَلَكِ فَأَخْبِرِيهِ أَنَّكِ أُخْتِي فَإِنَّكِ أُخْتِي فِي الإِسْلاَمِ فَإِنِّي لاَ أَعْلَمُ فِي الأَرْضِ مُسْلِمًا غَيْرِي وَغَيْرَكِ فَلَمَّا دَخَلَ أَرْضَهُ رَآهَا بَعْضُ أَهْلِ الْجَبَّارِ أَتَاهُ فَقَالَ لَهُ لَقَدْ قَدِمَ أَرْضَكَ امْرَأَةٌ لاَ يَنْبَغِي لَهَا أَنْ تَكُونَ إِلاَّ لَكَ ‏.‏ فَأَرْسَلَ إِلَيْهَا فَأُتِيَ بِهَا فَقَامَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ إِلَى الصَّلاَةِ فَلَمَّا دَخَلَتْ عَلَيْهِ لَمْ يَتَمَالَكْ أَنْ بَسَطَ يَدَهُ إِلَيْهَا فَقُبِضَتْ يَدُهُ قَبْضَةً شَدِيدَةً فَقَالَ لَهَا ادْعِي اللَّهَ أَنْ يُطْلِقَ يَدِي وَلاَ أَضُرُّكِ ‏.‏ فَفَعَلَتْ فَعَادَ فَقُبِضَتْ أَشَدَّ مِنَ الْقَبْضَةِ الأُولَى فَقَالَ لَهَا مِثْلَ ذَلِكَ فَفَعَلَتْ فَعَادَ فَقُبِضَتْ أَشَدَّ مِنَ الْقَبْضَتَيْنِ الأُولَيَيْنِ فَقَالَ ادْعِي اللَّهَ أَنْ يُطْلِقَ يَدِي فَلَكِ اللَّهَ أَنْ لاَ أَضُرَّكِ ‏.‏ فَفَعَلَتْ وَأُطْلِقَتْ يَدُهُ وَدَعَا الَّذِي جَاءَ بِهَا فَقَالَ لَهُ إِنَّكَ إِنَّمَا أَتَيْتَنِي بِشَيْطَانٍ وَلَمْ تَأْتِنِي بِإِنْسَانٍ فَأَخْرِجْهَا مِنْ أَرْضِي وَأَعْطِهَا هَاجَرَ ‏.‏ قَالَ فَأَقْبَلَتْ تَمْشِي فَلَمَّا رَآهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ انْصَرَفَ فَقَالَ لَهَا مَهْيَمْ قَالَتْ خَيْرًا كَفَّ اللَّهُ يَدَ الْفَاجِرِ وَأَخْدَمَ خَادِمًا ‏


قَالَ أَبُو هُرَيْرَةَ فَتِلْكَ أُمُّكُمْ يَا بَنِي مَاءِ السَّمَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:

  1. “எனக்குக் காய்ச்சல்!” என்று (இணைவைக்கும் திருவிழாவுக்கு மக்கள் அவர்களை அழைத்தபோது அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.
  2. (பெரிய சிலையைத் தவிர்த்து, எல்லாச் சிலைகளையும் உடைத்துவிட்டு, பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்ட பின், “இப்படிச் செய்தவர் யார்?“ என்று மக்கள் கேட்டபோது) “இவற்றுள் பெரியதான சிலைதான் இதைச் செய்தது” என்று கூறியது.
  3. இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும் (அதன் விவரம் வருமாறு:)

இப்ராஹீம் (அலை) (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா (அலை) மக்களிலேயே மிகவும் அழகிய பெண்ணாக இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) சாரா அவர்களிடம், “இந்தக் கொடுங்கோல் மன்னன், நீ என் துணைவி என அறிந்து கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் “சகோதரி” என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை” என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மன்னனுக்கு வேண்டியவர்களில் ஒருவன் சாரா அவர்களைப் பார்த்து விட்டு மன்னனிடம் சென்று, “(மன்னா!) உங்கள் நாட்டுக்குப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். உங்களுக்குரியவளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தகாது” என்று சொன்னான். ஆகவே, மன்னன், சாரா அவர்களிடம் ஆளனுப்பினான். சாரா அவனிடம் கொண்டுவரப்பட்டார்கள்.

அப்போது இப்ராஹீம் (அலை) தொழுவதற்காக நின்றுகொண்டார்கள். சாரா மன்னனிடம் சென்றபோது, அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சாராவை நோக்கித் தனது கையை நீட்டினான். உடனே அவனது கை (வலிப்பு நோயால்) கடுமையாக இழுத்துக்கொண்டது. உடனே அவன் சாரா அவர்களிடம், “அல்லாஹ்விடம் (என் கைகளை) விடுவிக்கும்படி எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கிழைக்கமாட்டேன்” என்று சொன்னான்.

அவ்வாறே அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவன் குணமடைந்ததும்) மீண்டும் அவன் (அவர்களை நோக்கிக்) கையை நீட்டினான். அப்போது முன்பைவிடக் கடுமையாக அவனுடைய கை இழுத்துக்கொண்டது. அவன் முன்பு போன்றே மீண்டும் (பிரார்த்திக்கும்படி) கூறினான். அவ்வாறே சாராவும் பிரார்த்தித்தார்கள்.

(குணமடைந்ததும்) மறுபடியும் அவன் கையை நீட்டியபோது முந்தைய இரு தடவைகள் இழுத்துக்கொண்டதைவிட மிகக் கடுமையாக அவனது கை இழுத்துக்கொண்டது. அப்போது அவன் “எனது கையை விடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். உனக்கு அல்லாஹ்வே சாட்சி. (இனி) உனக்கு நான் தீங்கிழைக்கமாட்டேன்” என்று கூறினான்.

அவ்வாறே சாரா அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவனது கை விடுவிக்கப்பட்டது. சாராவை அழைத்து வந்தவனை மன்னன் அழைத்து, “நீ ஒரு மனுஷியை என்னிடம் கொண்டுவரவில்லை. ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டுவந்துள்ளாய். இவளை எனது நாட்டிலிருந்து வெளியேற்றி விடு. இவளுக்கு ஹாஜர் எனும் (அடிமைப்) பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்துவிடு!” என்று கூறினான்.

சாரா தம்மை நோக்கி நடந்துவருவதை இப்ராஹீம் (அலை) கண்டபோது (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள். அவரிடம் “என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். சாரா அவர்கள், “நல்லதே நடந்தது. அத் தீயவனின் கையை இறைவன் தடுத்துவிட்டான். ஒரு பணியாளரையும் கொடுத்தான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“மாஉஸ் ஸமாஉ (வான் மழை) குலத்தாரே! அவர்தான் உங்கள் தாயார் (ஹாஜர்)” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

Share this Hadith:

Leave a Comment