அத்தியாயம்: 44, பாடம்: 19, ஹதீஸ் எண்: 4478

حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ الْفَرَجِ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “‏ أُرِيتُ الْجَنَّةَ فَرَأَيْتُ امْرَأَةَ أَبِي طَلْحَةَ ثُمَّ سَمِعْتُ خَشْخَشَةً أَمَامِي فَإِذَا بِلاَلٌ ‏”‏

“எனக்கு(க் கனவில்) சொர்க்கம் காட்டப்பட்டது. அங்கு நான் அபூதல்ஹா அவர்களின் மனைவி (உம்மு ஸுலைம்) இருக்கக் கண்டேன். பிறகு எனக்கு முன்னால் மெல்லிய காலடி ஓசையைச் செவியுற்றேன். அங்கு (யார் என்று பார்த்தபோது) பிலால் இருந்தார்“ என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 19, ஹதீஸ் எண்: 4477

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا بِشْرٌ، – يَعْنِي ابْنَ السَّرِيِّ – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْفَةً فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذِهِ الْغُمَيْصَاءُ بِنْتُ مِلْحَانَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ ‏”‏

“நான் (கனவில்) சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு காலடியோசை ஒன்றைக் கேட்டு, “இவர் யார்?” என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், “இவர்தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த்தி மில்ஹான்” என்று பதிலளித்தனர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

உம்முஸுலைம் (ரலி) அவர்களின் இயற்பெயர் ருமைஸா (பின்த்தி மில்ஹான் அந்-நஜ்ஜாரிய்யா) என்பதாகும். ருமைஸாவுக்கு வேறு சில பெயர்களும் உண்டு: ஃகுமைஸா, ஸஹ்லா, ருமைலா, ருமைத்தா, மலிக்கா ஆகிய பெயர்களும் அவருக்கு இருந்தன. என்றாலும், வரலாற்றில் புகழ்பெற்று நிலைத்துப்போன பெயர், உம்முஸுலைம் என்பதாகும்.

அத்தியாயம்: 44, பாடம்: 19, ஹதீஸ் எண்: 4476

حَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَنَسٍ قَالَ :‏

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَدْخُلُ عَلَى أَحَدٍ مِنَ النِّسَاءِ إِلاَّ عَلَى أَزْوَاجِهِ إِلاَّ أُمِّ سُلَيْمٍ فَإِنَّهُ كَانَ يَدْخُلُ عَلَيْهَا فَقِيلَ لَهُ فِي ذَلِكَ فَقَالَ ‏ “‏ إِنِّي أَرْحَمُهَا قُتِلَ أَخُوهَا مَعِي ‏”‏

உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் இல்லத்தைத் தவிர நபி (ஸல்) தம் மனைவியரல்லாத வேறெந்த (அந்நியப்) பெண்களின் இல்லங்களுக்கும் செல்லமாட்டார்கள். என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) இல்லத்திற்கு மட்டுமே செல்வார்கள்.

நபியவர்களிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, “நான் உம்மு ஸுலைமிடம் பரிவு காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் – ரலி) என்னு(டைய பிரசாரப் படையினரு)டன் இருந்தபோது, (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொல்லப்பட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)