அத்தியாயம்: 45, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4605

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ :‏

كَانَ جُرَيْجٌ يَتَعَبَّدُ فِي صَوْمَعَةٍ فَجَاءَتْ أُمُّهُ ‏.‏ قَالَ حُمَيْدٌ فَوَصَفَ لَنَا أَبُو رَافِعٍ صِفَةَ أَبِي هُرَيْرَةَ لِصِفَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُمَّهُ حِينَ دَعَتْهُ كَيْفَ جَعَلَتْ كَفَّهَا فَوْقَ حَاجِبِهَا ثُمَّ رَفَعَتْ رَأْسَهَا إِلَيْهِ تَدْعُوهُ فَقَالَتْ يَا جُرَيْجُ أَنَا أُمُّكَ كَلِّمْنِي ‏.‏ فَصَادَفَتْهُ يُصَلِّي فَقَالَ اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي ‏.‏ فَاخْتَارَ صَلاَتَهُ فَرَجَعَتْ ثُمَّ عَادَتْ فِي الثَّانِيَةِ فَقَالَتْ يَا جُرَيْجُ أَنَا أُمُّكَ فَكَلِّمْنِي ‏.‏ قَالَ اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي ‏.‏ فَاخْتَارَ صَلاَتَهُ فَقَالَتِ اللَّهُمَّ إِنَّ هَذَا جُرَيْجٌ وَهُوَ ابْنِي وَإِنِّي كَلَّمْتُهُ فَأَبَى أَنْ يُكَلِّمَنِي اللَّهُمَّ فَلاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ الْمُومِسَاتِ ‏.‏ قَالَ وَلَوْ دَعَتْ عَلَيْهِ أَنْ يُفْتَنَ لَفُتِنَ ‏.‏ قَالَ وَكَانَ رَاعِي ضَأْنٍ يَأْوِي إِلَى دَيْرِهِ – قَالَ – فَخَرَجَتِ امْرَأَةٌ مِنَ الْقَرْيَةِ فَوَقَعَ عَلَيْهَا الرَّاعِي فَحَمَلَتْ فَوَلَدَتْ غُلاَمًا فَقِيلَ لَهَا مَا هَذَا قَالَتْ مِنْ صَاحِبِ هَذَا الدَّيْرِ ‏.‏ قَالَ فَجَاءُوا بِفُئُوسِهِمْ وَمَسَاحِيهِمْ فَنَادَوْهُ فَصَادَفُوهُ يُصَلِّي فَلَمْ يُكَلِّمْهُمْ – قَالَ – فَأَخَذُوا يَهْدِمُونَ دَيْرَهُ فَلَمَّا رَأَى ذَلِكَ نَزَلَ إِلَيْهِمْ فَقَالُوا لَهُ سَلْ هَذِهِ – قَالَ – فَتَبَسَّمَ ثُمَّ مَسَحَ رَأْسَ الصَّبِيِّ فَقَالَ مَنْ أَبُوكَ قَالَ أَبِي رَاعِي الضَّأْنِ ‏.‏ فَلَمَّا سَمِعُوا ذَلِكَ مِنْهُ قَالُوا نَبْنِي مَا هَدَمْنَا مِنْ دَيْرِكَ بِالذَّهَبِ وَالْفِضَّةِ ‏.‏ قَالَ لاَ وَلَكِنْ أَعِيدُوهُ تُرَابًا كَمَا كَانَ ثُمَّ عَلاَهُ

ஜுரைஜ் எனும் ((பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த நல்லவர்) ஒருவர் தமது ஆசிரமத்தில் (இறைவனை) வழிபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அவருடைய தாயார் வந்(து அவரை அழைத்)தார்.

ஜுரைஜை அவருடைய தாயார் அழைத்த முறையையும், அப்போது அவர் தமது புருவத்துக்கு மேலே கையை எப்படி வைத்திருந்தார்; பிறகு ஜுரைஜை நோக்கித் தமது தலையை உயர்த்தி எப்படி அழைத்தார் என்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சைகை செய்துகாட்டினார்கள். ((இதை இறுதியாக அறிவிக்கும் ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்), “இதை அறிவிக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சைகை செய்துகாட்டியது போன்றே அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) சைகை செய்துகாட்டினார்கள். அறிவிப்பாளர் அபூ ராஃபிஉ (ரஹ்) அவர்களும் அவ்வாறே சைகை செய்துகாட்டினார்கள்”  எனக் குறிப்பிடுகின்றார்)).

ஜுரைஜின் தாயார், “ஜுரைஜே! நான் உன்னுடைய தாய் (அழைக்கின்றேன்); என்னிடம் பேசு” என்று கூறினார். அப்போது ஜுரைஜ் தொழுதுகொண்டிருப்பதைத் தாயார் கண்டார். உடனே ஜுரைஜ், “இறைவா! என் தாயா? எனது தொழுகையா? (எதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்?)” என்று (தனக்குள்) கேட்டுவிட்டு, தொழுகையையே தேர்ந்தெடுத்தார். உடனே அவருடைய தாயார் திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு மறுபடியும் அவரை அழைத்தார். “ஜுரைஜே! நான் உன் தாய் (அழைக்கின்றேன்); என்னிடம் பேசு” என்று கூறினார். அப்போது(ம் தொழுதுகொண்டிருந்த) ஜுரைஜ், “இறைவா! என் தாயா? எனது தொழுகையா?” என்று (தனக்குள்) கேட்டுவிட்டு, மீண்டும் தொழுகையையே தேர்ந்தெடுத்தார்.

அப்போது அவருடைய தாயார், “இறைவா! இதோ என் மகன் ஜுரைஜிடம் நான் பேசினேன். அவன் என்னிடம் பேச மறுத்துவிட்டான். இறைவா! விபச்சாரிகளை அவனுக்குக்  காட்டாமல் அவனுக்கு நீ மரணத்தைத் தந்துவிடாதே” என்று பிரார்த்தித்தார்.

ஜுரைஜுக்கெதிராக அவருடைய தாயார், தன் மகன் வேறு சோதனைக்குள்ளாக்கப் படவேண்டும் என்று பிரார்த்திருந்தால், அவ்வாறே அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருப்பார். (ஆனால், விபசாரிகளைக் கண்ணில் படவைக்கும் குறைந்தபட்ச சோதனையையே அவருடைய தாயார் வேண்டினார்).

ஆடு மேய்க்கும் இடையன் ஒருவன் ஜுரைஜின் ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். (இந்நிலையில் ஒரு நாள்) அந்தக் கிராமத்திலிருந்து (விபச்சாரியான) பெண்ணொருத்தி வந்தாள். அவளுடன் அந்த இடையன் விபச்சாரத்தில் ஈடுபட்டான். பிறகு அவள் கர்ப்பமுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவளிடம் “இது எவரால் பிறந்த குழந்தை?” என்று கேட்கப்பட்டது. “இதோ இந்த ஆசிரமத்தில் இருப்பவரால்தான்” என்று அவள் கூறினாள்.

உடனே மக்கள் (வெகுண்டெழுந்து) கோடரிகளையும் மண்வெட்டிகளையும் எடுத்துக்கொண்டு வந்து ஜுரைஜை அழைத்தனர். அப்போது அவர் தொழுதுகொண்டிருந்ததால் அவர்களிடம் அவர் பேசவில்லை. உடனே (கோபம் கொண்ட) அம்மக்கள் அவருடைய ஆசிரமத்தைத் தகர்க்கலாயினர்.

இதைக் கண்ட ஜுரைஜ் (தம் ஆசிரமத்திலிருந்து) இறங்கி வந்தார். மக்கள், “இதோ இவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேள்” என்று கூறினர். ஜுரைஜ் புன்னகைத்துவிட்டு, அந்த (விபச்சாரியின்) குழந்தையின் தலையை தடவிக் கொடுத்தார்.

பிறகு “உன் தந்தை யார்?” என்று கேட்டார். (பேசும் வயதை அடையாதிருந்த) அக்குழந்தை, “(இன்ன) ஆட்டிடையன்தான் என் தந்தை” என்று கூறியது.

இதை அக்குழந்தையிடமிருந்து செவியுற்ற அம்மக்கள், (தமது தவறை உணர்ந்து) “நாங்கள் இடித்துத் தகர்த்த உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தாலும் வெள்ளியாலும் கட்டித்தருகின்றோம்” என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ், “வேண்டாம்; முன்பிருந்ததைப் போன்று மீண்டும் மண்ணால் கட்டித்தாருங்கள் (அதுவே போதும்)” என்று கூறிவிட்டு, மேலே ஏறிச் சென்றுவிட்டார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: