حَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، وَاللَّيْثُ بْنُ سَعْدٍ جَمِيعًا عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ :
أَنَّهُ كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ كَانَ لَهُ حِمَارٌ يَتَرَوَّحُ عَلَيْهِ إِذَا مَلَّ رُكُوبَ الرَّاحِلَةِ وَعِمَامَةٌ يَشُدُّ بِهَا رَأْسَهُ فَبَيْنَا هُوَ يَوْمًا عَلَى ذَلِكَ الْحِمَارِ إِذْ مَرَّ بِهِ أَعْرَابِيٌّ فَقَالَ أَلَسْتَ ابْنَ فُلاَنِ بْنِ فُلاَنٍ قَالَ بَلَى . فَأَعْطَاهُ الْحِمَارَ وَقَالَ ارْكَبْ هَذَا وَالْعِمَامَةَ – قَالَ – اشْدُدْ بِهَا رَأْسَكَ . فَقَالَ لَهُ بَعْضُ أَصْحَابِهِ غَفَرَ اللَّهُ لَكَ أَعْطَيْتَ هَذَا الأَعْرَابِيَّ حِمَارًا كُنْتَ تَرَوَّحُ عَلَيْهِ وَعِمَامَةً كُنْتَ تَشُدُّ بِهَا رَأْسَكَ . فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ إِنَّ مِنْ أَبَرِّ الْبِرِّ صِلَةَ الرَّجُلِ أَهْلَ وُدِّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّيَ ” . وَإِنَّ أَبَاهُ كَانَ صَدِيقًا لِعُمَرَ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதையொன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்துவிட்டால், அக்கழுதைமீது ஓய்வெடுத்துக்கொள்வார்கள். மேலும், தலைப்பாகையொன்றும் அவர்களிடம் இருந்தது. அதை அவர்கள் தமது தலையில் கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் அந்தக் கழுதையில் (பயணம் செய்துகொண்டு) இருந்தபோது, கிராமவாசி ஒருவர் அவர்களைக் கடந்துசென்றார்.
உடனே அவரிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நீங்கள் இன்னவரின் மகனான இன்னவரல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” என்றார். உடனே அப்துல்லாஹ் (ரலி) தமது கழுதையை அக்கிராமவாசியிடம் கொடுத்து “இதில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றார்கள்; தலைப்பாகையைக் கொடுத்து, “இதைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய தோழர்களில் சிலர், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! நீங்கள் ஓய்வெடுப்பதற்காக (மாற்று வாகனமாகப்) பயன்படுத்திவந்த கழுதையை இந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டீர்களே? (பயணத்தின்போது) உங்கள் தலையில் கட்டிக்கொண்டிருந்த தலைப்பாகையையும் கொடுத்துவிட்டீர்களே?” என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒருவர் தம் தந்தை மறைந்தபின் அவருடைய அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தக் கிராமவாசியின் தந்தை (என் தந்தை) உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்)