حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَخْبَرَهُ :
أَنَّ مَرْوَانَ قَالَ اذْهَبْ يَا رَافِعُ – لِبَوَّابِهِ – إِلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْ لَئِنْ كَانَ كُلُّ امْرِئٍ مِنَّا فَرِحَ بِمَا أَتَى وَأَحَبَّ أَنْ يُحْمَدَ بِمَا لَمْ يَفْعَلْ مُعَذَّبًا لَنُعَذَّبَنَّ أَجْمَعُونَ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ مَا لَكُمْ وَلِهَذِهِ الآيَةِ إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي أَهْلِ الْكِتَابِ . ثُمَّ تَلاَ ابْنُ عَبَّاسٍ { وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلاَ تَكْتُمُونَهُ} هَذِهِ الآيَةَ وَتَلاَ ابْنُ عَبَّاسٍ { لاَ تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا} وَقَالَ ابْنُ عَبَّاسٍ سَأَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ فَكَتَمُوهُ إِيَّاهُ وَأَخْبَرُوهُ بِغَيْرِهِ فَخَرَجُوا قَدْ أَرَوْهُ أَنْ قَدْ أَخْبَرُوهُ بِمَا سَأَلَهُمْ عَنْهُ وَاسْتَحْمَدُوا بِذَلِكَ إِلَيْهِ وَفَرِحُوا بِمَا أَتَوْا مِنْ كِتْمَانِهِمْ إِيَّاهُ مَا سَأَلَهُمْ عَنْهُ
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தம் காவலரிடம், “ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, ‘தாம் செய்தவை குறித்து மகிழ்ச்சியடைகின்ற, தாம் செய்யாத (நற்)செயல்களுக்காக (சாதனைகளுக்காகப்) புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின், நாம் அனைவருமே நிச்சயமாக வேதனை செய்யப்பட வேண்டிவருமே!’ என்று (நான் வினவியதாகக்) கேள்” என்று சொன்னார்.
(அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) “உங்களுக்கு இந்த வசனம் தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? இந்த வசனம் வேதக்காரர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு, “வேதம் வழங்கப்பெற்றோரிடம் நீங்கள் மக்களுக்கு அ(ந்த வேதத்)தை நிச்சயமாகத் தெளிவுபடுத்திவிட வேண்டும்; அதை நீங்கள் மறைக்கக் கூடாது என அல்லாஹ் உறுதிமொழி பெற்றதை (நபியே!) எண்ணிப்பார்ப்பீராக” எனும் (3:187) வசனத்தை ஓதினார்கள்.
பிறகு “தாம் செய்த(தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும் தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று (நபியே!) ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்” எனும் (3:188) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.
மேலும், “நபி (ஸல்) (யூதர்களை அழைத்து) அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதை மறைத்துவிட்டு, (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) கேட்டதற்குச் சரியான தகவலைத் தந்துவிட்டதைப் போன்று காட்டிக்கொண்டும், அதற்காக நபி (ஸல்) அவர்களிடம் பாராட்டை எதிர்பார்ப்பதைப் போன்றும், நபி (ஸல்) கேட்டதைப் பற்றிச் சொல்லாமல் தாம் மறைத்துவிட்டதைக் குறித்து மகிழ்ச்சியடைந்துகொண்டும் புறப்பட்டுச் சென்றனர். (அப்போதுதான் மேற்கண்ட (3:188ஆவது) வசனம் அருளப்பெற்றது)” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)