அத்தியாயம்: 54, பாடம்: 19, ஹதீஸ் எண்: 5184

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ، أَخْبَرَنِي الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ :‏

خَرَجْنَا حُجَّاجًا أَوْ عُمَّارًا وَمَعَنَا ابْنُ صَائِدٍ – قَالَ – فَنَزَلْنَا مَنْزِلاً فَتَفَرَّقَ النَّاسُ وَبَقِيتُ أَنَا وَهُوَ فَاسْتَوْحَشْتُ مِنْهُ وَحْشَةً شَدِيدَةً مِمَّا يُقَالُ عَلَيْهِ – قَالَ – وَجَاءَ بِمَتَاعِهِ فَوَضَعَهُ مَعَ مَتَاعِي ‏.‏ فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ فَلَوْ وَضَعْتَهُ تَحْتَ تِلْكَ الشَّجَرَةِ – قَالَ – فَفَعَلَ – قَالَ – فَرُفِعَتْ لَنَا غَنَمٌ فَانْطَلَقَ فَجَاءَ بِعُسٍّ فَقَالَ اشْرَبْ أَبَا سَعِيدٍ ‏.‏ فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ وَاللَّبَنُ حَارٌّ ‏.‏ مَا بِي إِلاَّ أَنِّي أَكْرَهُ أَنْ أَشْرَبَ عَنْ يَدِهِ – أَوْ قَالَ آخُذَ عَنْ يَدِهِ – فَقَالَ أَبَا سَعِيدٍ لَقَدْ هَمَمْتُ أَنْ آخُذَ حَبْلاً فَأُعَلِّقَهُ بِشَجَرَةٍ ثُمَّ أَخْتَنِقَ مِمَّا يَقُولُ لِيَ النَّاسُ يَا أَبَا سَعِيدٍ مَنْ خَفِيَ عَلَيْهِ حَدِيثُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا خَفِيَ عَلَيْكُمْ مَعْشَرَ الأَنْصَارِ أَلَسْتَ مِنْ أَعْلَمِ النَّاسِ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هُوَ كَافِرٌ ‏”‏ ‏.‏ وَأَنَا مُسْلِمٌ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هُوَ عَقِيمٌ لاَ يُولَدُ لَهُ ‏”‏ ‏.‏ وَقَدْ تَرَكْتُ وَلَدِي بِالْمَدِينَةِ أَوَ لَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ يَدْخُلُ الْمَدِينَةَ وَلاَ مَكَّةَ ‏”‏ ‏.‏ وَقَدْ أَقْبَلْتُ مِنَ الْمَدِينَةِ وَأَنَا أُرِيدُ مَكَّةَ قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ حَتَّى كِدْتُ أَنْ أَعْذِرَهُ ‏.‏ ثُمَّ قَالَ أَمَا وَاللَّهِ إِنِّي لأَعْرِفُهُ وَأَعْرِفُ مَوْلِدَهُ وَأَيْنَ هُوَ الآنَ ‏.‏ قَالَ قُلْتُ لَهُ تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ ‏

நாங்கள் ஹஜ்ஜுக்கு, அல்லது உம்ராவுக்குச் சென்றோம். எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான். (வழியில்) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம். (ஓய்வெடுப்பதற்காக) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம். அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன். அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான்.

அப்போது நான், “வெயில் கடுமையாக உள்ளது. அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே” என்றேன். அவ்வாறே அவன் செய்தான். அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது. உடனே அவன் சென்று, ஒரு பெரிய கோப்பை (நிறைய பால்) உடன் என்னிடம் வந்து, “அபூஸயீதே! பருகுவீராக” என்றான். நான், “வெயிலும் கடுமையாக உள்ளது. பாலும் சூடாக உள்ளது“ என்று -அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல், அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல்- சொன்னேன்.

அவன், “அபூஸயீதே! நான் ஒரு கயிற்றை எடுத்துவந்து அதை ஒரு மரத்தில் மாட்டி தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைத்தேன். என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம். அபூஸயீதே! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும், அன்ஸாரிகளே! உங்களுக்குத் தெரியாமல் போகாது.

(அபூஸயீதே!) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களில் ஒருவரல்லவா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அவன் (தஜ்ஜால்) இறைமறுப்பாளன்’ என்று சொல்லவில்லையா? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அவன் (தஜ்ஜால்) குழந்தை பாக்கியமற்ற மலடன்’ என்று கூற வில்லையா? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டுவந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழைய முடியாது’ என்று கூறவில்லையா? நானோ, மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கின்றேன்” என்று சொன்னான்.

இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன். பிறகு அவன், “அறிந்துகொள்க: அல்லாஹ் வின் மீதாணையாக! தஜ்ஜாலை நான் அறிவேன். அவனது பிறப்பையும், இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன்” என்று  (வழக்கம்போல் குழாப்பமாகக்) கூறினான். அப்போது நான் “காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும்” என்று கூறி(சபித்து)விட்டேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

Share this Hadith: