அத்தியாயம்: 54, பாடம்: 21, ஹதீஸ் எண்: 5203

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، مِنْ أَهْلِ مَرْوَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ قَيْسِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي الْوَدَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَخْرُجُ الدَّجَّالُ فَيَتَوَجَّهُ قِبَلَهُ رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ فَتَلْقَاهُ الْمَسَالِحُ مَسَالِحُ الدَّجَّالِ فَيَقُولُونَ لَهُ أَيْنَ تَعْمِدُ فَيَقُولُ أَعْمِدُ إِلَى هَذَا الَّذِي خَرَجَ – قَالَ – فَيَقُولُونَ لَهُ أَوَمَا تُؤْمِنُ بِرَبِّنَا فَيَقُولُ مَا بِرَبِّنَا خَفَاءٌ ‏.‏ فَيَقُولُونَ اقْتُلُوهُ ‏.‏ فَيَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ أَلَيْسَ قَدْ نَهَاكُمْ رَبُّكُمْ أَنْ تَقْتُلُوا أَحَدًا دُونَهُ – قَالَ – فَيَنْطَلِقُونَ بِهِ إِلَى الدَّجَّالِ فَإِذَا رَآهُ الْمُؤْمِنُ قَالَ يَا أَيُّهَا النَّاسُ هَذَا الدَّجَّالُ الَّذِي ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَيَأْمُرُ الدَّجَّالُ بِهِ فَيُشَبَّحُ فَيَقُولُ خُذُوهُ وَشُجُّوهُ ‏.‏ فَيُوسَعُ ظَهْرُهُ وَبَطْنُهُ ضَرْبًا – قَالَ – فَيَقُولُ أَوَمَا تُؤْمِنُ بِي قَالَ فَيَقُولُ أَنْتَ الْمَسِيحُ الْكَذَّابُ – قَالَ – فَيُؤْمَرُ بِهِ فَيُؤْشَرُ بِالْمِئْشَارِ مِنْ مَفْرِقِهِ حَتَّى يُفَرَّقَ بَيْنَ رِجْلَيْهِ – قَالَ – ثُمَّ يَمْشِي الدَّجَّالُ بَيْنَ الْقِطْعَتَيْنِ ثُمَّ يَقُولُ لَهُ قُمْ ‏.‏ فَيَسْتَوِي قَائِمًا – قَالَ – ثُمَّ يَقُولُ لَهُ أَتُؤْمِنُ بِي فَيَقُولُ مَا ازْدَدْتُ فِيكَ إِلاَّ بَصِيرَةً – قَالَ – ثُمَّ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لاَ يَفْعَلُ بَعْدِي بِأَحَدٍ مِنَ النَّاسِ – قَالَ – فَيَأْخُذُهُ الدَّجَّالُ لِيَذْبَحَهُ فَيُجْعَلَ مَا بَيْنَ رَقَبَتِهِ إِلَى تَرْقُوَتِهِ نُحَاسًا فَلاَ يَسْتَطِيعُ إِلَيْهِ سَبِيلاً – قَالَ – فَيَأْخُذُ بِيَدَيْهِ وَرِجْلَيْهِ فَيَقْذِفُ بِهِ فَيَحْسِبُ النَّاسُ أَنَّمَا قَذَفَهُ إِلَى النَّارِ وَإِنَّمَا أُلْقِيَ فِي الْجَنَّةِ ‏”‏ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَذَا أَعْظَمُ النَّاسِ شَهَادَةً عِنْدَ رَبِّ الْعَالَمِينَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

தஜ்ஜால் வெளிப்பட்டு வரும்போது இறைநம்பிக்கையாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதமேந்திய தஜ்ஜாலின் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு, “எங்கே செல்கின்றாய்?” என்று கேட்பார்கள். அந்த மனிதர், “(இப்போது) வந்திருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கின்றேன்” என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், “நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா?” என்று கேட்பார்கள். அந்த மனிதர், “நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல” என்று கூறுவார். அதற்கு அவர்கள், “இவனைக் கொல்லுங்கள்” என்று கூறுவார்கள்.

அப்போது அவர்கள் தங்களுக்குள், “உங்கள் இறைவன் (தஜ்ஜால்), யாரையும் தானின்றி கொல்லக் கூடாதென உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டுசெல்வார்கள். அந்த இறைநம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, “மக்களே! இவன்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்” என்று சொல்வார்.

உடனே தஜ்ஜாலின் உத்தரவின்பேரில், அவர் பிடித்துக் கொண்டுவரப்பட்டு (தூண்களுக்கிடையே) நிறுத்தப்படுவார். “இவனைப் பிடித்து இவனது தலையைப் பிளந்துவிடுங்கள்” என்று அவன் கட்டளையிடுவான். அப்போது அவர், முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார்.

பிறகு தஜ்ஜால், “என்மீது நீ நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், “நீ பெரும் பொய்யனான ’மஸீஹ்’ ஆவாய்” என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள்வரை தனித் தனியே பிளக்கும்படி கட்டளையிடப்படும். அவ்வாறே செய்து (அவரது உடலை இரு துண்டுகளாக்கியதும்) அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடந்து வருவான்.

பிறகு அந்த உடலைப் பார்த்து, “எழு” என்பான். உடனே அந்த மனிதர் (உயிர் பெற்று) நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம், “என்மீது நம்பிக்கை கொள்கிறாயா?” என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், “உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்துகொண்டேன்” என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், “மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என நம்பிவிடாதீர்கள்.) இவன் எனக்குப் பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவார்.

உடனே தஜ்ஜால் அவரை அறுப்பதற்காகப் பிடிப்பான். ஆனால், அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எலும்புவரையுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே, அவனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தூக்கியெறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் தூக்கியெறிந்துவிட்டான் என மக்கள் எண்:ணிக்கொள்வார்கள். ஆனால், அவர் சொர்க்கத்தில் வீசப்பட்டிருப்பார்.

“இந்த மனிதர்தாம் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிலேயே மகத்தான உயிர்த்தியாகம் செய்தவர் ஆவார்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

Share this Hadith: