அத்தியாயம்: 55, பாடம்: 17, ஹதீஸ் எண்: 5298

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ وَكَانَ لَهُ سَاحِرٌ فَلَمَّا كَبِرَ قَالَ لِلْمَلِكِ إِنِّي قَدْ كَبِرْتُ فَابْعَثْ إِلَىَّ غُلاَمًا أُعَلِّمْهُ السِّحْرَ ‏.‏ فَبَعَثَ إِلَيْهِ غُلاَمًا يُعَلِّمُهُ فَكَانَ فِي طَرِيقِهِ إِذَا سَلَكَ رَاهِبٌ فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلاَمَهُ فَأَعْجَبَهُ فَكَانَ إِذَا أَتَى السَّاحِرَ مَرَّ بِالرَّاهِبِ وَقَعَدَ إِلَيْهِ فَإِذَا أَتَى السَّاحِرَ ضَرَبَهُ فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ فَقَالَ إِذَا خَشِيتَ السَّاحِرَ فَقُلْ حَبَسَنِي أَهْلِي ‏.‏ وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ حَبَسَنِي السَّاحِرُ ‏.‏ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسَتِ النَّاسَ فَقَالَ الْيَوْمَ أَعْلَمُ آلسَّاحِرُ أَفْضَلُ أَمِ الرَّاهِبُ أَفْضَلُ فَأَخَذَ حَجَرًا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ النَّاسُ ‏.‏ فَرَمَاهَا فَقَتَلَهَا وَمَضَى النَّاسُ فَأَتَى الرَّاهِبَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ الرَّاهِبُ أَىْ بُنَىَّ أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ مِنِّي ‏.‏ قَدْ بَلَغَ مِنْ أَمْرِكَ مَا أَرَى وَإِنَّكَ سَتُبْتَلَى فَإِنِ ابْتُلِيتَ فَلاَ تَدُلَّ عَلَىَّ ‏.‏ وَكَانَ الْغُلاَمُ يُبْرِئُ الأَكْمَهَ وَالأَبْرَصَ وَيُدَاوِي النَّاسَ مِنْ سَائِرِ الأَدْوَاءِ فَسَمِعَ جَلِيسٌ لِلْمَلِكِ كَانَ قَدْ عَمِيَ فَأَتَاهُ بِهَدَايَا كَثِيرَةٍ فَقَالَ مَا هَا هُنَا لَكَ أَجْمَعُ إِنْ أَنْتَ شَفَيْتَنِي فَقَالَ إِنِّي لاَ أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَإِنْ أَنْتَ آمَنْتَ بِاللَّهِ دَعَوْتُ اللَّهَ فَشَفَاكَ ‏.‏ فَآمَنَ بِاللَّهِ فَشَفَاهُ اللَّهُ فَأَتَى الْمَلِكَ فَجَلَسَ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ فَقَالَ لَهُ الْمَلِكُ مَنْ رَدَّ عَلَيْكَ بَصَرَكَ قَالَ رَبِّي ‏.‏ قَالَ وَلَكَ رَبٌّ غَيْرِي قَالَ رَبِّي وَرَبُّكَ اللَّهُ ‏.‏ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الْغُلاَمِ فَجِيءَ بِالْغُلاَمِ فَقَالَ لَهُ الْمَلِكُ أَىْ بُنَىَّ قَدْ بَلَغَ مِنْ سِحْرِكَ مَا تُبْرِئُ الأَكْمَهَ وَالأَبْرَصَ وَتَفْعَلُ وَتَفْعَلُ ‏.‏ فَقَالَ إِنِّي لاَ أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ ‏.‏ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ فَجِيءَ بِالرَّاهِبِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ ‏.‏ فَأَبَى فَدَعَا بِالْمِئْشَارِ فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِجَلِيسِ الْمَلِكِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ ‏.‏ فَأَبَى فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِالْغُلاَمِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ ‏.‏ فَأَبَى فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا فَاصْعَدُوا بِهِ الْجَبَلَ فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلاَّ فَاطْرَحُوهُ فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ ‏.‏ فَرَجَفَ بِهِمُ الْجَبَلُ فَسَقَطُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ ‏.‏ فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ فَتَوَسَّطُوا بِهِ الْبَحْرَ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلاَّ فَاقْذِفُوهُ ‏.‏ فَذَهَبُوا بِهِ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ ‏.‏ فَانْكَفَأَتْ بِهِمُ السَّفِينَةُ فَغَرِقُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ ‏.‏ فَقَالَ لِلْمَلِكِ إِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا آمُرُكَ بِهِ ‏.‏ قَالَ وَمَا هُوَ قَالَ تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِي ثُمَّ ضَعِ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ ثُمَّ قُلْ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلاَمِ ‏.‏ ثُمَّ ارْمِنِي فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي ‏.‏ فَجَمَعَ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَصَلَبَهُ عَلَى جِذْعٍ ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلاَمِ ‏.‏ ثُمَّ رَمَاهُ فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ فَوَضَعَ يَدَهُ فِي صُدْغِهِ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ فَقَالَ النَّاسُ آمَنَّا بِرَبِّ الْغُلاَمِ آمَنَّا بِرَبِّ الْغُلاَمِ آمَنَّا بِرَبِّ الْغُلاَمِ ‏.‏ فَأُتِيَ الْمَلِكُ فَقِيلَ لَهُ أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ قَدْ وَاللَّهِ نَزَلَ بِكَ حَذَرُكَ قَدْ آمَنَ النَّاسُ ‏.‏ فَأَمَرَ بِالأُخْدُودِ فِي أَفْوَاهِ السِّكَكِ فَخُدَّتْ وَأَضْرَمَ النِّيرَانَ وَقَالَ مَنْ لَمْ يَرْجِعْ عَنْ دِينِهِ فَأَحْمُوهُ فِيهَا ‏.‏ أَوْ قِيلَ لَهُ اقْتَحِمْ ‏.‏ فَفَعَلُوا حَتَّى جَاءَتِ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا فَقَالَ لَهَا الْغُلاَمُ يَا أُمَّهِ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

உங்களுக்கு முன்னர் (ஒரு காலத்தில்) அரசன் ஒருவன் வாழ்ந்தான். அவனிடம் (குறி சொல்லும்) சூனியக்காரன் ஒருவன் இருந்தான். அந்தச் சூனியக்காரன் முதுமையடைந்தபோது அரசனிடம், “நான் முதுமையடைந்துவிட்டேன். (என்னோடு இந்தச் சூனியக் கலை அழிந்துவிடக் கூடாது.) எனவே, சிறுவன் ஒருவனை அனுப்புங்கள். அவனுக்கு நான் சூனியக் கலையை கற்றுத் தருகிறேன்” என்று சொன்னான். அவ்வாறே, அக்கல்வியை அவன் கற்றுத் தருவதற்காகச் சிறுவன் ஒருவனை அவனிடம் அரசன் அனுப்பினான்.

சிறுவன் சூனியக்காரனிடம் செல்லும் வழியில் துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று அமர்ந்து அவருடைய அறிவுரைகளைச் சிறுவன் கேட்கலானான். அது அவனை ஈர்த்தது; அவன் சூனியக்காரனிடம் செல்லும் போதெல்லாம் அந்தத் துறவியிடம் சென்று அமர்ந்துகொள்வான். பிறகு சூனியக்காரனிடம் (தாமதமாகச்) செல்லும்போது அவனைச் சூனியக்காரன் அடிப்பான். இது பற்றி அச் சிறுவன் துறவியிடம் முறையிட்டான்.

அப்போது அந்தத் துறவி சூனியக்காரனைப் பற்றி நீ அஞ்சினால் அவனிடம், “என் வீட்டார் என்னைத் தடுத்துவிட்டனர் (அதனால் தான் தாமதம்) என்று கூறிவிடு; நீ உன் வீட்டாரைப் பற்றி அஞ்சினால், சூனியக்காரன் என்னைத் தடுத்துவிட்டான் (அதனால்தான் தாமதம்) என்று கூறிவிடு” என்று (யோசனை) கூறினார். அவ்வாறே அச்சிறுவன் செய்துகொண்டிருந்தான்.

இந்நிலையில், (ஒரு நாள் அச்சிறுவன் செல்லும்போது) மிகப் பெரிய மிருகம் ஒன்றை எதிர்கொண்டான். அது மக்களை(ச் செல்லவிடாமல்) தடுத்துக்கொண்டிருந்தது. அப்போது அச்சிறுவன், “இன்று நான் அந்தச் சூனியக்காரன் சிறந்தவனா? அந்தத் துறவி சிறந்தவரா என்று அறியப்போகிறேன்” என்று கூறிவிட்டு, ஒரு கல்லை எடுத்து, “இறைவா! அந்தத் துறவியின் நிலை அந்தச் சூனியக்காரனின் நிலையைவிட உனக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தால், இந்த மிருகத்தைக் கொன்று மக்களைச் செல்லவிடு” என்று கூறி, அந்த மிருகத்தை நோக்கி (கல்லை) எறிந்து, அதைக் கொன்றான். மக்களும் (அச்சமின்றி) நடந்துசென்றனர்.

பிறகு அந்தத் துறவியிடம் சென்று நடந்ததை அவரிடம் தெரிவித்தான். அப்போது அந்தத் துறவி, “அருமை மகனே! நீ இன்று என்னைவிடச் சிறந்தவனாகிவிட்டாய்! உன் தகுதியை நான் இப்போது (கண்கூடாகப்) பார்க்கும் நிலைக்கு நீ வந்துவிட்டாய். இனி நீ சோதனைக்குள்ளாக்கப்படுவாய். அவ்வாறு நீ சோதனைக்குள்ளாக்கப்படும்போது  என்னைப் பற்றித் தெரிவித்துவிடாதே!” என்று கூறினார்.

அச்சிறுவன் பிறவிக் குருடருக்கும் தொழு நோயாளிகளுக்கும் நிவாரணம் வழங்கினான். இதர நோய்களிலிருந்தும் மக்களுக்கு நிவாரணம் அளித்தான். இதை அரசனின் அவையிலிருந்த ஒருவர் கேள்விப்பட்டார். அவர் (கண்பார்வையற்ற) குருடராக இருந்தார். அவர் ஏராளமான அன்பளிப்புகளுடன் அச்சிறுவனிடம் சென்று, “நீ எனது இந்த நோயைக் குணப்படுத்திவிட்டால், என்னிடமுள்ள இந்தப் பொருட்கள் அனைத்தும் உனக்கே உரியன” என்று கூறினார்.

அதற்கு அச்சிறுவன், “நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை; அல்லாஹ்வே நிவாரணமளிக்கின்றான். நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நான் (உங்களுக்காக) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன். அவன் உங்களுக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினான்.

அவ்வாறே அக்குருடர் இறைநம்பிக்கை கொண்டபோது, அவருக்கு அல்லாஹ் நிவாரணமளித்தான். பிறகு அவர் வழக்கம் போல அரசனிடம் சென்று அமர்ந்தபோது அவரிடம் அந்த அரசர், “உமது பார்வையை உமக்குத் திருப்பிக்கொடுத்தவர் யார்?” என்று கேட்டான்.

அவர், “என் இறைவன்” என்று பதிலளித்தார். அதற்கு அரசன், “உனக்கு என்னையன்றி வேறு இறைவன் உண்டா?” என்று கேட்டான். அதற்கு அவர், “என் இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ்தான்” என்று சொன்னார்.

உடனே அவரைப் பிடித்து, அந்தச் சிறுவனைப் பற்றி அவர் சொல்லும்வரை அரசன்  வேதனை செய்துகொண்டேயிருந்தான். பிறகு அந்தச் சிறுவன் கொண்டுவரப்பட்டான். அப்போது அரசன், “குழந்தாய்! நீ சூனியக் கலையால் பிறவிக் குருடரையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தி இன்னின்னவாறு செய்யுமளவுக்குச் சென்றுவிட்டாய்” என்று கூறினான்.

அதற்கு அச்சிறுவன், “நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை. அல்லாஹ்வே நிவாரணமளிக்கின்றான்” என்று கூறினான். பிறகு அச்சிறுவன் அந்தத் துறவியைப் பற்றித் தெரிவிக்கும்வரை அச்சிறுவனையும் அரசன் வேதனைப்படுத்தலானான்.

பிறகு அந்தத் துறவியும் கொண்டுவரப்பட்டார். அவரிடம், “உமது (புதிய) மார்க்கத்திலிருந்து நீர் திரும்பி விடும்” என்று கூறப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஆகவே, ரம்பம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி, அவரது உச்சந்தலையில் வைத்து, அவரது உடலை இரண்டாகப் பிளந்தான் அரசன். அவர் இரண்டு துண்டாகி விழுந்தார்.

பிறகு அரசனின் அவையில் இருந்த அந்த (முன்னால் குருடராயிர்ந்த) மனிதர் கொண்டுவரப்பட்டு, “நீ உனது (புதிய) மார்க்கத்திலிருந்து திரும்பிவிடு!” என்று கூறப்பட்டது. அவரும் மறுத்துவிட்டார். எனவே, அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து இரண்டாகப் பிளந்தான் அரசன். அவரும் இரு துண்டுகளாகி விழுந்தார்.

பின்னர் அச்சிறுவன் கொண்டுவரப்பட்டான். அவனிடமும் “நீ உனது (புதிய) மார்க்கத்திலிருந்து திரும்பிவிடு” என்று சொல்லப்பட்டது. அவன் மறுத்துவிட்டான். உடனே அவனைத் தம் ஆட்கள் சிலரிடம் ஒப்படைத்து, “இவனை இன்ன இன்ன மலைக்குக் கொண்டுசெல்லுங்கள். மலை உச்சிக்கு இவனைக் கொண்டு சென்றதும் (அவனிடம் அவனது ஓரிறைக் கொள்கையைக் கைவிடுமாறு கூறுங்கள்) அவன் தனது மார்க்க்ததிலிருந்து திரும்பிவிட்டால் சரி. இல்லையேல், அவனை மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்” என்று அரசன் கூறினான்.

அவ்வாறே அவர்கள் அச்சிறுவனை மலை உச்சிக்குக் கொண்டுசென்றனர். அப்போது அச் சிறுவன், “இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று” என்று பிரார்த்தித்தான். அப்போது அந்த மலை குலுங்கியது. அவர்கள் அனைவரும் மலையிலிருந்து கீழே விழுந்துவிட்டனர்.

பிறகு அச்சிறுவன் அரசனை நோக்கி நடந்துவந்தான். அவனிடம் அரசன், “உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?” என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், “அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்” என்று சொன்னான்.

பிறகு அச்சிறுவனைத் தம் ஆட்களில் வேறு சிலரிடம் ஒப்படைத்து, “இவனை மரக்கலமொன்றில் ஏற்றி, நடுக்கடலுக்குக் கொண்டுசெல்லுங்கள். இவன் தனது மார்க்கத்திலிருந்து திரும்பி விட்டால் சரி. இல்லையேல், இவனைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்” என்று அரசன் உத்தரவிட்டான்.

அவ்வாறே அவர்கள் கொண்டுசென்றபோது அச்சிறுவன், “இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று” என்று பிரார்த்தித்தான். மரக்கலம் அதிலிருந்தவர்களுடன் சேர்ந்து கவிழ்ந்தது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர். பிறகு அச்சிறுவன் (மட்டும்) அரசனை நோக்கி நடந்துவந்தான்.

சிறுவனைக் கண்ட அரசன், “உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?” என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், “அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்” என்று கூறிவிட்டு, அரசனைப் பார்த்து, “நான் சொல்கிறபடி நீ நடந்துகொள்ளாத வரை என்னை உன்னால் கொல்ல முடியாது” என்று கூறினான்.

“அது என்ன?” என்று அரசன் கேட்டான். அதற்கு அச்சிறுவன், “நீ மக்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் ஒன்றுதிரட்டு. என்னைச் சிலுவையில் அறைந்துவிடு. பிறகு என் அம்புக்கூட்டிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து, வில்லில் பொருத்தி பிறகு, “இச் சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்!” என்று கூறி, (என்னை நோக்கி) அந்த அம்பைப் பாய்ச்சு. இவ்வாறு நீ செய்தால், உன்னால் என்னைக் கொல்ல முடியும்” என்று கூறினான்.

அவ்வாறே மக்களைத் திறந்த வெளியொன்றில் அரசன் ஒன்றுதிரட்டினான். சிறுவனைச் சிலுவையில் அறைந்தான். பிறகு அச்சிறுவனின் அம்புக்கூட்டிலிருந்து அம்பொன்றை எடுத்து வில்லில் பொருத்தி, “இச்சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்” என்று கூறி, அந்தச் சிறுவனை நோக்கி அம்பை எய்தான்.

அந்த அம்பு சிறுவனின் நெற்றிப் பொட்டில் பாய்ந்தது. அச்சிறுவன் அம்பு பாய்ந்த நெற்றிப் பொட்டில் கையை வைத்துக்கொண்டே இறந்துபோனான்.

அதைக் கண்ட மக்கள், “நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம்; நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம், நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினர்.

பிறகு அரசனிடம் வந்து, “(அரசரே!) நீர் எதை அஞ்சிக்கொண்டிருந்தீரோ அதை நேரடியாகப் பார்த்துவிட்டீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் அஞ்சியது நடந்தேவிட்டது. மக்கள் அனைவரும் (அச்சிறுவனின் இறைவன்மீது) நம்பிக்கை கொண்டுவிட்டனர்” என்று கூறப்பட்டது.

உடனே அந்த அரசன் தெரு முனைகளில் அகழ் தோண்டுமாறு உத்தரவிட்டான். அவ்வாறே தோண்டப்பட்டதும் அதில் நெருப்பு மூட்டினான்.

பிறகு “யார் (தாம் ஏற்றுக்கொண்ட அந்த ஓரிறை) மார்க்கத்திலிருந்து திரும்பிவரவில்லையோ அவர்களை இதில்  எரித்துவிடுங்கள்; அல்லது தூக்கிப் போட்டுவிடுங்கள்” என்று உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தனர்.

இறுதியாக ஒரு பெண் வந்தாள். அவளுடன் அவளுடைய குழந்தை ஒன்றும் இருந்தது. அ(ந்தத் தீக்குண்டத்)தில் விழ அவள் தயங்கினாள். அப்போது அந்தக் குழந்தை, “அம்மா! (மனத்தைத் திடப்படுத்தி) பொறுமையுடன் இரு! ஏனெனில், நீ சத்தியத்தில் இருக்கின்றாய்” என்று சொன்னது.

அறிவிப்பாளர் : ஸுஹைப் (ரலி)


குறிப்பு :

பார்க்க : அல் குர்ஆன் 85:8

Share this Hadith: