அத்தியாயம்: 44, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4521

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، – وَاللَّفْظُ لِقُتَيْبَةَ – حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ قَالَ :‏

كُنْتُ جَالِسًا فِي حَلْقَةٍ فِي مَسْجِدِ الْمَدِينَةِ – قَالَ – وَفِيهَا شَيْخٌ حَسَنُ الْهَيْئَةِ وَهُوَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ – قَالَ – فَجَعَلَ يُحَدِّثُهُمْ حَدِيثًا حَسَنًا – قَالَ – فَلَمَّا قَامَ قَالَ الْقَوْمُ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا ‏.‏ قَالَ فَقُلْتُ وَاللَّهِ لأَتْبَعَنَّهُ فَلأَعْلَمَنَّ مَكَانَ بَيْتِهِ ‏.‏ قَالَ فَتَبِعْتُهُ فَانْطَلَقَ حَتَّى كَادَ أَنْ يَخْرُجَ مِنَ الْمَدِينَةِ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ – قَالَ – فَاسْتَأْذَنْتُ عَلَيْهِ فَأَذِنَ لِي فَقَالَ مَا حَاجَتُكَ يَا ابْنَ أَخِي قَالَ فَقُلْتُ لَهُ سَمِعْتُ الْقَوْمَ يَقُولُونَ لَكَ لَمَّا قُمْتَ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا ‏.‏ فَأَعْجَبَنِي أَنْ أَكُونَ مَعَكَ قَالَ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْجَنَّةِ وَسَأُحَدِّثُكَ مِمَّ قَالُوا ذَاكَ إِنِّي بَيْنَمَا أَنَا نَائِمٌ إِذْ أَتَانِي رَجُلٌ فَقَالَ لِي قُمْ ‏.‏ فَأَخَذَ بِيَدِي فَانْطَلَقْتُ مَعَهُ – قَالَ – فَإِذَا أَنَا بِجَوَادَّ عَنْ شِمَالِي – قَالَ – فَأَخَذْتُ لآخُذَ فِيهَا فَقَالَ لِي لاَ تَأْخُذْ فِيهَا فَإِنَّهَا طُرُقُ أَصْحَابِ الشِّمَالِ – قَالَ – فَإِذَا جَوَادُّ مَنْهَجٌ عَلَى يَمِيِنِي فَقَالَ لِي خُذْ هَا هُنَا ‏.‏ فَأَتَى بِي جَبَلاً فَقَالَ لِي اصْعَدْ – قَالَ – فَجَعَلْتُ إِذَا أَرَدْتُ أَنْ أَصْعَدَ خَرَرْتُ عَلَى اسْتِي – قَالَ – حَتَّى فَعَلْتُ ذَلِكَ مِرَارًا – قَالَ – ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى أَتَى بِي عَمُودًا رَأْسُهُ فِي السَّمَاءِ وَأَسْفَلُهُ فِي الأَرْضِ فِي أَعْلاَهُ حَلْقَةٌ فَقَالَ لِيَ ‏.‏ اصْعَدْ فَوْقَ هَذَا ‏.‏ قَالَ قُلْتُ كَيْفَ أَصْعَدُ هَذَا وَرَأْسُهُ فِي السَّمَاءِ – قَالَ – فَأَخَذَ بِيَدِي فَزَجَلَ بِي – قَالَ – فَإِذَا أَنَا مُتَعَلِّقٌ بِالْحَلْقَةِ – قَالَ – ثُمَّ ضَرَبَ الْعَمُودَ فَخَرَّ – قَالَ – وَبَقِيتُ مُتَعَلِّقًا بِالْحَلْقَةِ حَتَّى أَصْبَحْتُ – قَالَ – فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَصَصْتُهَا عَلَيْهِ فَقَالَ ‏ “‏ أَمَّا الطُّرُقُ الَّتِي رَأَيْتَ عَنْ يَسَارِكَ فَهِيَ طُرُقُ أَصْحَابِ الشِّمَالِ – قَالَ – وَأَمَّا الطُّرُقُ الَّتِي رَأَيْتَ عَنْ يَمِينِكَ فَهِيَ طُرُقُ أَصْحَابِ الْيَمِينِ وَأَمَّا الْجَبَلُ فَهُوَ مَنْزِلُ الشُّهَدَاءِ وَلَنْ تَنَالَهُ وَأَمَّا الْعَمُودُ فَهُوَ عَمُودُ الإِسْلاَمِ وَأَمَّا الْعُرْوَةُ فَهِيَ عُرْوَةُ الإِسْلاَمِ وَلَنْ تَزَالَ مُتَمَسِّكًا بِهَا حَتَّى تَمُوتَ ‏”‏ ‏

நான் மதீனாவின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வட்ட(மாக மக்கள் வீற்றிருந்த) அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அங்கு அழகிய தோற்றத்துடன் முதியவர் ஒருவர் இருந்தார். அவர், அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி).

அவர், மக்களுக்கு அழகிய ஹதீஸ் ஒன்றைக் கூறலானார். பிறகு அவர் எழுந்து சென்றபோது மக்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்!” என்று கூறினர். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களது இல்லத்தை நான் அறிந்துகொள்வேன்” என்று (மனத்துள்) கூறிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்.

அவர்கள் நடந்து, மதீனாவைவிட்டு வெளியேறும் தூரத்திற்குச் சென்று தமது இல்லத்திற்குள் நுழைந்தார்கள். பிறகு நான் (சென்று) அவர்களிடம் உள்ளே நுழைய அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.

பிறகு என்னிடம், “என் சகோதரர் மகனே! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர்களிடம் நான், “நீங்கள் எழுந்து சென்றபோது உங்களைப் பற்றி மக்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்’ என்று கூறியதைக் கேட்டேன். ஆகவே, உங்களுடன் இருப்பதை நான் விரும்பினேன்” என்று சொன்னேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) கூறினார்கள்: சொர்க்கவாசிகளை அல்லாஹ்வே நன்கறிவான். மக்கள் ஏன் இவ்வாறு கூறினர் என உமக்கு நான் தெரிவிக்கிறேன்:

நான் (ஒரு நாள்) உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) ஒருவர் என்னிடம் வந்து, “எழுங்கள்!” என்று சொல்லிவிட்டு, எனது கையைப் பிடித்துக்கொண்டார். அவருடன் நான் நடந்தேன். அப்போது எனக்கு இடப் பக்கத்தில் தெளிவான பல பாதைகளைக் கண்டேன். அதில் நான் செல்ல முயன்றேன். அப்போது அந்த மனிதர் என்னிடம், “அவற்றில் நீங்கள் செல்லாதீர்கள். இவை இடப் புறத்தினவரின் (நரகவாசிகளின்) பாதைகள்” என்று கூறினார்.

எனக்கு வலப் பக்கத்தில் பல நேரான பாதைகள் இருந்தன. அப்போது அந்த மனிதர், “இதில் செல்லுங்கள்” என்று கூறினார். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஒரு மலை அருகே சென்றார். “இதில் ஏறுங்கள்” என்று கூறினார். அதில் நான் ஏற முயன்றபோது மல்லாந்து விழலானேன். இவ்வாறு பல முறை விழுந்தேன்.

பிறகு அவர் என்னை ஒரு தூண் அருகே அழைத்துச் சென்றார். அதன் மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் கீழ்ப்பகுதி தரையில் இருந்தது. அத்தூணுக்கு மேலே வளையம் ஒன்று இருந்தது. அவர் என்னிடம், “இதற்கு மேலே ஏறுங்கள்” என்று கூறினார். நான், “இதில் எப்படி ஏறுவேன்? அதன் மேற்பகுதி வானத்தில் இருக்கிறதே!” என்று கேட்டேன். உடனே அவர் என்னைப் பிடித்து மேலே வீசினார். உடனே நான் அந்த வளையத்தைப் பிடித்துத் தொங்கினேன்.

பிறகு அவர் அந்தத் தூணை அடித்தார். அது கீழே விழுந்துவிட்டது. அப்போதும் நான் அந்த வளையத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தேன். விடிந்தவுடன் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அந்த என் கனவைப் பற்றி அவர்களிடம் விவரித்தேன்.

அப்போது நபி (ஸல்), “உங்களுக்கு இடப் பக்கத்தில் நீங்கள் கண்ட பாதைகள் இடப் புறக்காரர்களின் (நரகவாசிகளின்) பாதைகளாகும். உங்களுக்கு வலப் பக்கத்திலிருந்த பாதைகள் வலப் புறக்காரர்களின் (சொர்க்கவாசிகளின்) பாதைகளாகும். அந்த மலை, உயிர்த் தியாகிகளின் இருப்பிடமாகும். அதை உங்களால் ஒருகாலும் அடைய முடியாது. அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி (வளையம்) இஸ்லாத்தின் பிடியாகும். நீங்கள் இறக்கும்வரை எப்போதும் அதைப் பலமாகப் பற்றிக்கொண்டே இருப்பீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வழியாக கரஷா பின் அல்ஹுர்ரு (ரஹ்)

Share this Hadith: