அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 22

و حَدَّثَنِي ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عِكْرِمَةَ بْنَ خَالِدٍ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏طَاوُسًا ‏ ‏أَنَّ رَجُلًا قَالَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

‏أَلَا ‏ ‏تَغْزُو فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ الْإِسْلَامَ بُنِيَ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَحَجِّ ‏ ‏الْبَيْتِ

ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அறப்போரில் கலந்து கொள்வதில்லையே (ஏன்)?” என்று கேட்டார். அதற்கு, “இஸ்லாம் என்பது ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது என்பதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“எனக்குப் பதினான்கு வயது ஆகியிருக்கும்போது உஹுதுப் போர் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கோரி, மறுக்கப்பட்டேன். பின்னர் நடந்த அகழ்ப் போரின்போது நான் பதினைந்து வயதைக் கடந்து விட்டிருந்ததால் அனுமதிக்கப்பட்டு அகழ்ப் போரில் நான் கலந்து கொண்டேன்” என்று மேற்காணும் ஹதீஸை அறிவிக்கும் அப்துல்லாஹ் இபுனு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமின் 3473ஆவது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 21

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ ‏ ‏الْبَيْتِ ‏ ‏وَصَوْمِ رَمَضَانَ

“இஸ்லாம் ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும், முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 20

و حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ الْعَسْكَرِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ حَدَّثَنَا سَعْدُ بْنُ طَارِقٍ قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ عُبَيْدَةَ السُّلَمِيُّ عَنْ ابْنِ عُمَرَ :‏

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الإسْلامُ عَلَى خَمْسٍ عَلَى أَنْ يُعْبَدَ اللَّهُ وَيُكْفَرَ بِمَا دُونَهُ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ الْبَيْتِ وَصَوْمِ رَمَضَانَ

நபி (ஸல்) கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வை மட்டுமே வழிபட்டு, அவன் அல்லாத அனைத்தையும் நிராகரிப்பது; தொழுகையைக் கடைபிடிப்பது; ஸகாத் செலுத்துவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு:

மேற்காணும் ஹதீஸை எளிதாக விளங்கிக் கொள்வதற்காகத்தான் கடமைகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. பொருள் வளம் நிறைந்த ஒருவர் ஷஃபான் மாதத்தின் இறுதியில் இஸ்லாத்தை ஏற்று விட்டால் முதலிரண்டு அடிப்படைக் கடமைகளான ‘ஏகத்துவக் கொள்கைப் பிரகடனம்’, ‘தொழுகை’ ஆகியவற்றோடு அடுத்து வரும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது மூன்றாவது அடிப்படைக் கடமையாக அவருக்கு அமையும். அவரே சற்றுத் தாமதமாக (ரமளான் கழிந்து) ஷவ்வால் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவினால் அடுத்த இரண்டு மாதங்களில் வரும் ‘ஹஜ்’ அவருக்கு மூன்றாவது கடமையாக அமைந்து, நான்காவதாக அடுத்த ஹிஜ்ரீ ஆண்டின் நோன்பும் ஐந்தாவதாக (ஷவ்வால் மாதத்தில்) ஸகாத்தும் ஐந்தாவது கடமைகளாக மாறி விடும்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 19

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الأحْمَرَ عَنْ أَبِي مَالِكٍ الأشْجَعِيِّ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ ابْنِ عُمَرَ :‏

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الإسْلامُ عَلَى خَمْسَةٍ عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ فَقَالَ رَجُلٌ الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ قَالَ لا صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“இஸ்லாம் ஐந்து (அடிப்படைகள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை:

ஏக இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வது.

தொழுகையைக் கடைப்பிடிப்பது.

ஸகாத் செலுத்துவது.

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

ஹஜ் செய்வது என்று நபி(ஸல்) கூறினார்கள்”.

எனக் குறிப்பிட்டபோது “ஹஜ்ஜும் நோன்பும் (அடுத்தடுத்தா)?” என்று ஒருவர் வினவினார். “இல்லை; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, ஹஜ் செய்வது என்ற(வரிசை)வாறுதான் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்”

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).