و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ :
لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ [“وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ“] وَرَهْطَكَ مِنْهُمْ الْمُخْلَصِينَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى صَعِدَ الصَّفَا فَهَتَفَ يَا صَبَاحَاهْ فَقَالُوا مَنْ هَذَا الَّذِي يَهْتِفُ قَالُوا مُحَمَّدٌ فَاجْتَمَعُوا إِلَيْهِ فَقَالَ يَا بَنِي فُلَانٍ يَا بَنِي فُلَانٍ يَا بَنِي فُلَانٍ يَا بَنِي عَبْدِ مَنَافٍ يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ فَاجْتَمَعُوا إِلَيْهِ فَقَالَ أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا تَخْرُجُ بِسَفْحِ هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ قَالُوا مَا جَرَّبْنَا عَلَيْكَ كَذِبًا قَالَ فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ قَالَ فَقَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ أَمَا جَمَعْتَنَا إِلَّا لِهَذَا ثُمَّ قَامَ فَنَزَلَتْ هَذِهِ السُّورَةُ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَقَدْ تَبَّ
كَذَا قَرَأَ الْأَعْمَشُ إِلَى آخِرِ السُّورَةِ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ بِهَذَا الْإِسْنَادِ قَالَ صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ الصَّفَا فَقَالَ يَا صَبَاحَاهْ بِنَحْوِ حَدِيثِ أَبِي أُسَامَةَ وَلَمْ يَذْكُرْ نُزُولَ الْآيَةِ ”وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீதேறி, “யா ஸபாஹா! (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!)” என்று உரத்த குரலில் விளித்தார்கள். அப்போது (குறைஷி) மக்கள், “உரத்து விளிப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு “முஹம்மது” என்று (சிலர்) பதிலளித்தனர். மக்கள் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கித் திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே! அப்து மனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே!” என்று அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். தொடர்ந்து, “இந்த மலை அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக எதிரிகளின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் செவியுற்ற அனுபவம் (இதுவரை) எங்களுக்கில்லை. (எனவே, நம்புவோம்)” என்று சொன்னார்கள்.
“அப்படியென்றால், (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் இறைவனின்) கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது, “உனக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்று கூட்டினாயா?” என்று (அவர்களைப் பார்த்துக் குறைஷித் தலைவர்களில் ஒருவனான) அபூலஹப் கேட்டான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (புறப்பட) எழுந்தார்கள். “அழிந்துபடட்டும் அபூலஹபின் இரு கரங்களும்! அவனும் அழியட்டும்” எனும் (111ஆவது) அத்தியாயம் அப்போது அருளப்பட்டது.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
குறிப்பு :
இந்த (111) அத்தியாயத்தின் முதலாவது வசனத்தின் இறுதியை (‘கத்’ எனும் இடைச்சொல்லை இணைத்து) வ “கத்” தப் (அவன் அழிந்தே விட்டான்) என்று (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) ஓதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபூ முஆவியா (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீது ஏறி, ‘யா ஸபாஹா (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!)’ என்று விளித்தார்கள்” என்று ஆரம்பிக்கிறது. ஆனால், “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:214ஆவது) வசனம் அருளப்பட்ட தகவல் அதில் இடம்பெறவில்லை.