و حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا أَبُو الْأَشْهَبِ حَدَّثَنَا خُلَيْدٌ الْعَصَرِيُّ عَنْ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ قَالَ
كُنْتُ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ فَمَرَّ أَبُو ذَرٍّ وَهُوَ يَقُولُ بَشِّرْ الْكَانِزِينَ بِكَيٍّ فِي ظُهُورِهِمْ يَخْرُجُ مِنْ جُنُوبِهِمْ وَبِكَيٍّ مِنْ قِبَلِ أَقْفَائِهِمْ يَخْرُجُ مِنْ جِبَاهِهِمْ قَالَ ثُمَّ تَنَحَّى فَقَعَدَ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا أَبُو ذَرٍّ قَالَ فَقُمْتُ إِلَيْهِ فَقُلْتُ مَا شَيْءٌ سَمِعْتُكَ تَقُولُ قُبَيْلُ قَالَ مَا قُلْتُ إِلَّا شَيْئًا قَدْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّهِمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قُلْتُ مَا تَقُولُ فِي هَذَا الْعَطَاءِ قَالَ خُذْهُ فَإِنَّ فِيهِ الْيَوْمَ مَعُونَةً فَإِذَا كَانَ ثَمَنًا لِدِينِكَ فَدَعْهُ
நான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி), “(ஸகாத் கொடுக்காமல்) செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு(ப் பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி(!) கூறுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து விலகிப்போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். மக்கள் “இவர்தாம் அபூதர் (ரலி)” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவரிடம் சென்று, “சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக்கொண்டிருந்தீர்களே அது என்ன?” என்று கேட்டேன். அதற்கு, “அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைத் தவிர வேறெதையும் நான் கூறவில்லை” என்றார்கள். நான், “(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும் இந்த) நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி), “அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின், அதை விட்டுவிடுங்கள் (பெற்றுக்கொள்ளாதீர்கள்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ((அபூதர் (ரலி) வழியாக)) அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்)