حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ مَرَرْنَا بِأَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ وَعَلَيْهِ بُرْدٌ وَعَلَى غُلاَمِهِ مِثْلُهُ فَقُلْنَا يَا أَبَا ذَرٍّ لَوْ جَمَعْتَ بَيْنَهُمَا كَانَتْ حُلَّةً فَقَالَ :
إِنَّهُ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنْ إِخْوَانِي كَلاَمٌ وَكَانَتْ أَمُّهُ أَعْجَمِيَّةً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ فَشَكَانِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَقِيتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ” يَا أَبَا ذَرٍّ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ ” قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ سَبَّ الرِّجَالَ سَبُّوا أَبَاهُ وَأُمُّهُ قَالَ ”يَا أَبَا ذَرٍّ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ هُمْ إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ”
وَحَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي حَدِيثِ زُهَيْرٍ وَأَبِي مُعَاوِيَةَ بَعْدَ قَوْلِهِ ” إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ ” . قَالَ قُلْتُ عَلَى حَالِ سَاعَتِي مِنَ الْكِبَرِ قَالَ ” نَعَمْ ” . وَفِي رِوَايَةِ أَبِي مُعَاوِيَةَ ” نَعَمْ عَلَى حَالِ سَاعَتِكَ مِنَ الْكِبَرِ ” . وَفِي حَدِيثِ عِيسَى ” فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيَبِعْهُ ” . وَفِي حَدِيثِ زُهَيْرٍ ” فَلْيُعِنْهُ عَلَيْهِ ” . وَلَيْسَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ ” فَلْيَبِعْهُ ” . وَلاَ ” فَلْيُعِنْهُ ” انْتَهَى عِنْدَ قَوْلِهِ ” وَلاَ يُكَلِّفْهُ مَا يَغْلِبُهُ ”
நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ரபதா எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்துகொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி):
எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அவரின் தாய் அரபி அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் மிச்சமுள்ளவராகவே இருக்கின்றீர்” என்று சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்றவரை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவது இயல்புதானே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் மிச்சமுள்ளவராகவே இருக்கின்றீர்” என்று கூறிவிட்டு, “அவர்கள் (பணியாளர்கள்) உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களோடு நீங்களும் ஒத்து உழையுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக மஅரூர் பின் ஸுவைத் (ரஹ்)
குறிப்பு :
ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) மற்றும் அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில் “நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் மிச்சமுள்ளவராகவே (இன்னும்) இருக்கின்றீர்” என்பதற்குப் பின் “நான் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக் கால கட்டத்திலுமா (அறியாமைக் காலக் கலாசாரம் கொண்டவனாய் உள்ளேன்)?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) “ஆம்” என்று கூறினார்கள் என அபூதர் (ரலி) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில் (இன்னும் சற்றுக் கூடுதலாக) “ஆம். நீர் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்திலும் (அறியாமைக் காலக் கலாசாரம் கொண்டவராய் இருக்கின்றீர்)” என்று நபி (ஸல்) கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்திவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) அவரை விற்றுவிடட்டும்” என்று இடம்பெற்றுள்ளது. ஸுஹைர் (ரஹ்) வழி அறிவிப்பில் “அப்பணியில் அவருக்கு ஒத்துழைக்கட்டும்” என இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பு, “அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்தாதீர்கள்” என்பதோடு முடிவடைந்துவிடுகிறது. “அவரை விற்று விடட்டும்” என்பதோ, “அவருக்கு ஒத்துழைக்கட்டும்” என்பதோ இடம் பெறவில்லை.