حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ، كَتَبَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ خَمْسِ، خِلاَلٍ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ:
لَوْلاَ أَنْ أَكْتُمَ، عِلْمًا مَا كَتَبْتُ إِلَيْهِ . كَتَبَ إِلَيْهِ نَجْدَةُ أَمَّا بَعْدُ فَأَخْبِرْنِي هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْزُو بِالنِّسَاءِ وَهَلْ كَانَ يَضْرِبُ لَهُنَّ بِسَهْمٍ وَهَلْ كَانَ يَقْتُلُ الصِّبْيَانَ وَمَتَى يَنْقَضِي يُتْمُ الْيَتِيمِ وَعَنِ الْخُمْسِ لِمَنْ هُوَ فَكَتَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ كَتَبْتَ تَسْأَلُنِي هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْزُو بِالنِّسَاءِ وَقَدْ كَانَ يَغْزُو بِهِنَّ فَيُدَاوِينَ الْجَرْحَى وَيُحْذَيْنَ مِنَ الْغَنِيمَةِ وَأَمَّا بِسَهْمٍ فَلَمْ يَضْرِبْ لَهُنَّ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَقْتُلُ الصِّبْيَانَ فَلاَ تَقْتُلِ الصِّبْيَانَ وَكَتَبْتَ تَسْأَلُنِي مَتَى يَنْقَضِي يُتْمُ الْيَتِيمِ فَلَعَمْرِي إِنَّ الرَّجُلَ لَتَنْبُتُ لِحْيَتُهُ وَإِنَّهُ لَضَعِيفُ الأَخْذِ لِنَفْسِهِ ضَعِيفُ الْعَطَاءِ مِنْهَا فَإِذَا أَخَذَ لِنَفْسِهِ مِنْ صَالِحِ مَا يَأْخُذُ النَّاسُ فَقَدْ ذَهَبَ عَنْهُ الْيُتْمُ وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنِ الْخُمْسِ لِمَنْ هُوَ وَإِنَّا كُنَّا نَقُولُ هُوَ لَنَا . فَأَبَى عَلَيْنَا قَوْمُنَا ذَاكَ .
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ حَاتِمِ بْنِ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ كَتَبَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ خِلاَلٍ، . بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِ حَاتِمٍ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَقْتُلُ الصِّبْيَانَ فَلاَ تَقْتُلِ الصِّبْيَانَ إِلاَّ أَنْ تَكُونَ تَعْلَمُ مَا عَلِمَ الْخَضِرُ مِنَ الصَّبِيِّ الَّذِي قَتَلَ . وَزَادَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ عَنْ حَاتِمٍ وَتُمَيِّزَ الْمُؤْمِنَ فَتَقْتُلَ الْكَافِرَ وَتَدَعَ الْمُؤْمِنَ
நஜ்தா பின் ஆமிர் என்ற (காரிஜிய்யா) ஒருவர், ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு எழுதியிருந்தார்:
இறைவாழ்த்துக்குப் பின்! அறப்போர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் கலந்துகொண்டார்களா?
அவ்வாறு கலந்துகொண்ட பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) போர் வெற்றிச் செல்வத்தில் பங்கு கொடுத்தார்களா?
(போரில்) எதிரிகளின் குழந்தைகளைக் கொன்றார்களா?
அநாதை எனும் பட்டம் எந்தப் பருவத்தில் முற்றுப்பெறும்?
போரில் கைப்பற்றப்படும் செல்வங் களில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதி யாருக்குரியது? இந்த ஐந்து விஷயங்கள் குறித்து எனக்கு அறிவியுங்கள்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்” என்று கூறி(அவருக்குப் பின்வருமாறு பதில் எழுதி)னார்கள்.
நீர் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்துகொண்டார்களா? எனக் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர் வெற்றிச் செல்வத்திலிருந்து சிறிதளவு அப்பெண்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) போர் வெற்றிச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை.
போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.
மேலும் நீர், அநாதை எனும் பட்டம் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறுகிறது? எனக் கேட்டிருந்தீர். என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! சிலருக்குத் தாடிகூட முளைத்துவிடும். ஆனால், தமக்குரிய ஒன்றைப் பெறுவதிலும் தமக்குரிய ஒன்றைக் கொடுப்பதிலும் பலவீனத்துடனேயே அவர்கள் இருப்பர். (ஒன்றைப் பெறும்போது) மற்றவர்களைப் போன்று சரியான பொருளைப் பெறுகின்ற பக்குவத்தை ஒருவன் அடைந்துவிட்டால் அவனைவிட்டு அநாதை எனும் பட்டம் நீங்கிவிடும்.
மேலும் நீர் என்னிடம், போர் வெற்றிச் செல்வத்தில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) யாருக்குரியது? எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் அது எங்களுக்கே உரியது எனக் கூறிவந்தோம். ஆனால், எங்கள் (பனூ உமைய்யா) மக்களே அதை எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர். (ஆகவே, குமுஸ் நிதி ஆட்சியாளராக வரும் அனைவரின் குடும்பத்தாருக்கும் உரியதாகும்) என்று அக்கடிதம் அமைந்திருந்தது.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்)
குறிப்பு :
ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) வழி அறிவிப்பு, “நஜ்தா என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு(ஐந்து விஷயங்கள் குறித்துக் கேட்டு)க் கடிதம் எழுதினார்” என்று ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். ‘களிர்’ (அலை), தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்துகொண்டதைப் போன்று நீரும் அறிந்தால் தவிர (அது உம்மால் இயலாத காரியமாகும்)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.
ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) வழியாக இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அறிவிப்பதில் “இறைநம்பிக்கையாளரை நீர் பாகுபடுத்தி அறிந்துகொள்ள முடிந்தால் தவிர. அப்போது தான் இறைமறுப்பாளனைக் கொல்வதற்கும் இறைநம்பிக்கையாளரை விட்டுவிடுவதற்கும் உமக்கு முடியும் (ஆனால், சிறுவன் பிற்காலத்தில் எப்படி மாறுவான் என்பதை, ‘களிரை’ப் போன்று அறிந்துகொள்ள உம்மால் முடியாது)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.