حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَأَلْفَاظُهُمْ، مُتَقَارِبَةٌ قَالَ إِسْحَاقُ وَعَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، – أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :
دَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقَالَتْ أَعَلِمْتَ أَنَّ أَبَاكَ غَيْرُ مُسْتَخْلِفٍ قَالَ قُلْتُ مَا كَانَ لِيَفْعَلَ . قَالَتْ إِنَّهُ فَاعِلٌ . قَالَ فَحَلَفْتُ أَنِّي أُكَلِّمُهُ فِي ذَلِكَ فَسَكَتُّ حَتَّى غَدَوْتُ وَلَمْ أُكَلِّمْهُ – قَالَ – فَكُنْتُ كَأَنَّمَا أَحْمِلُ بِيَمِينِي جَبَلاً حَتَّى رَجَعْتُ فَدَخَلْتُ عَلَيْهِ فَسَأَلَنِي عَنْ حَالِ النَّاسِ وَأَنَا أُخْبِرُهُ – قَالَ – ثُمَّ قُلْتُ لَهُ إِنِّي سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ مَقَالَةً فَآلَيْتُ أَنْ أَقُولَهَا لَكَ زَعَمُوا أَنَّكَ غَيْرُ مُسْتَخْلِفٍ وَإِنَّهُ لَوْ كَانَ لَكَ رَاعِي إِبِلٍ أَوْ رَاعِي غَنَمٍ ثُمَّ جَاءَكَ وَتَرَكَهَا رَأَيْتَ أَنْ قَدْ ضَيَّعَ فَرِعَايَةُ النَّاسِ أَشَدُّ قَالَ فَوَافَقَهُ قَوْلِي فَوَضَعَ رَأْسَهُ سَاعَةً ثُمَّ رَفَعَهُ إِلَىَّ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَحْفَظُ دِينَهُ وَإِنِّي لَئِنْ لاَ أَسْتَخْلِفْ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسْتَخْلِفْ وَإِنْ أَسْتَخْلِفْ فَإِنَّ أَبَا بَكْرٍ قَدِ اسْتَخْلَفَ . قَالَ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ ذَكَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ فَعَلِمْتُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَعْدِلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَدًا وَأَنَّهُ غَيْرُ مُسْتَخْلِفٍ
நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர், “உனக்குத் தெரியுமா? உன்னுடைய தந்தை தமக்குப் பின் வேறு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள்” என்று கூறினார். நான் “அவ்வாறு அவர்கள் விடக்கூடாது” என்று கூறினேன். அதற்கு அவர், “(இல்லை) அவ்வாறுதான் செய்வார்கள்” என்றார். நான், “இது தொடர்பாக அவர்களிடம் நான் பேசுவேன்” எனச் சத்தியமிட்டேன்.
பிறகு காலைவரை அமைதியாக இருந்து விட்டேன். (இது தொடர்பாக) என் தந்தையிடம் நான் பேசவில்லை. (நான் செய்த சத்தியம்) எனது வலக் கையில் ஒரு மலையை சுமந்துகொண்டிருந்ததைப் போன்று இருந்தது. திரும்ப அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்களின் நிலை குறித்து என்னிடம் விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
பிறகு அவர்களிடம், “மக்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதை நான் கேள்விப்பட்டேன். அதைத் உங்களிடம் நான் சொல்வேன் எனச் சத்தியம் செய்துவிட்டேன். நீங்கள் உங்களுக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டீர்கள் எனப் பேசிக்கொண்டனர். (உங்கள்) ஒட்டகத்தையோ ஆட்டையோ மேய்க்கின்ற ஒருவன் உங்களுக்கு இருந்து, அவன் அவற்றை (மேய்க்கப்போன இடத்திலேயே) விட்டுவிட்டு, பின்னர் உங்களிடம் வந்தால், அவன் (அவற்றைப்) பாழாக்கிவிட்டான் என்றே நீங்கள் கருதுவீர்கள். அப்படியானால், மக்களை மேய்ப்பது அதைவிடக் கடினமானது (அல்லவா?)” என்று நான் கேட்டேன்.
அப்போது எனது கருத்துக்கு என் தந்தை உடன்பட்டார்கள். தமது தலையைச் சிறிது நேரம் தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தலையை என் பக்கமாக உயர்த்தி, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பாதுகாப்பான். நான் எனக்குப் பின் ஓர் ஆட்சித் தலைவரை நியமிக்காவிட்டால் (அது தவறல்ல. ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கவில்லை. நான் எனக்குப் பின் யாரையேனும் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதுவும் தவறாகாது. ஏனெனில்,) அபூபக்ரு (ரலி) தமக்குப் பின் (என்னை) ஆட்சித் தலைவராக நியமித்தார்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ரு (ரலி) அவர்களையும் நினைவு கூர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிகராக யாரையும் ஆக்கமாட்டார்கள்; தமக்குப் பின் யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என நான் புரிந்துகொண்டேன்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)