حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ :
نَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي – قَالَ – فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى – قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ – ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ – قَالَ – فَقَالَ أَبِي وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ “ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ ”
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، ح وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَشُكَّا فِي إِلْقَاءِ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என் தந்தை (புஸ்ரு பின் அபீபுஸ்ரு-ரலி) அவர்களிடம் (ஒருமுறை விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் ‘வத்பா’ எனும் ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள்.
பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள்.
(இதைக் கூறியபோது அறிவிப்பாளர், தம் ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்து சைகை செய்தார்)
பிறகு ஒரு பானம் கொண்டுவரப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதையும் அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்படத் தயாரானபோது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும், வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும் (இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் வழங்குவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!)” எனப் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஸ்ரு (ரலி)
குறிப்பு :
‘வத்பா’ என்பது, பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்படும் பலகாரமாகும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “இரு விரல்களுக்கிடையே கொட்டையை வைத்திருந்தார்கள்’ என்பது ஹதீஸிலேயே உள்ளதாகும் என்பது இன்ஷா அல்லாஹ், என் கருத்தாகும்” என்று (ஐயத்துடன்) கூறினார்கள்.
இப்னு அபீஅதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு விரல்களுக்கிடையே பேரீச்சம் பழக் கொட்டைகளை வைத்திருந்(துவிட்டுப் பிறகு வீசியெறிந்)தார்கள்” என்பது ஐயத்திற்கிடமின்றி (ஹதீஸில் உள்ளதாகவே) இடம்பெற்றுள்ளது.