அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3993

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، ح

وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ خُلُقًا وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ – قَالَ أَحْسِبُهُ قَالَ – كَانَ فَطِيمًا – قَالَ – فَكَانَ إِذَا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَآهُ قَالَ ‏ “‏ أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ ‏”‏ ‏.‏ قَالَ فَكَانَ يَلْعَبُ بِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிலேயே மிகவும் நற்குணம் வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். எனக்கு (என் தாய் வழியில்) ‘அபூஉமைர்’ எனப்படும் பால்குடி மறந்த ஒரு சகோதரர் இருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எங்கள் வீட்டுக்கு) வந்தால் என் சகோதரரைப் பார்த்து, “அபூஉமைர்! பாடும் (உனது) சின்னக் குருவி என்ன செய்கிறது?” என்று கேட்பார்கள். என் சகோதரர் அந்தக் குருவியுடன் விளையாடிக்கொண்டிருப்பார்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3992

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدٌ، – وَهُوَ ابْنُ مُطَرِّفٍ أَبُو غَسَّانَ – حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ :‏

أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ وُلِدَ فَوَضَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى فَخِذِهِ وَأَبُو أُسَيْدٍ جَالِسٌ فَلَهِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِشَىْءٍ بَيْنَ يَدَيْهِ فَأَمَرَ أَبُو أُسَيْدٍ بِابْنِهِ فَاحْتُمِلَ مِنْ عَلَى فَخِذِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْلَبُوهُ فَاسْتَفَاقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَيْنَ الصَّبِيُّ ‏”‏ ‏.‏ فَقَالَ أَبُو أُسَيْدٍ أَقْلَبْنَاهُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ ‏”‏ مَا اسْمُهُ ‏”‏ ‏.‏ قَالَ فُلاَنٌ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ لاَ وَلَكِنِ اسْمُهُ الْمُنْذِرُ ‏”‏ ‏.‏ فَسَمَّاهُ يَوْمَئِذٍ الْمُنْذِرَ ‏

அபூஉஸைத் மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்களுக்கு மகன் பிறந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அக்குழந்தையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள்.

அப்போது அபூஉஸைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். எதேச்சையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நிகழ்ந்த (நிகழ்வு) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. எனவே, அபூஉஸைத் (ரலி) தம் மகனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எடுத்துவருமாறு கூற, அவ்வாறே குழந்தையை அவர்களது மடியிலிருந்து எடுத்து, (வீட்டுக்குக்) கொடுத்தனுப்பிவிட்டனர்.

சிறிது நேரத்தில் முந்தைய நிலைக்குத் திரும்பிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அந்தக் குழந்தை எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஉஸைத் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! குழந்தையை(வீட்டுக்கு)க் கொடுத்தனுப்பிவிட்டோம்” என்று கூறினார்கள். அப்போது, “அக்குழந்தையின் பெயரென்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, “இன்ன பெயர், அல்லாஹ்வின் தூதரே!“ என அபூஉஸைத் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அப்பெயரை விரும்பாததால்), “இல்லை, (இனி) அவர் பெயர் ‘அல்முன்திர்’ (எச்சரித்து நல்வழிப் படுத்துபவர்) ஆகும்” என்று கூறினார்கள். அல்முன்திர் என்று அக்குழந்தைக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அன்றைக்குப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3991

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

جِئْنَا بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُحَنِّكُهُ فَطَلَبْنَا تَمْرَةً فَعَزَّ عَلَيْنَا طَلَبُهَا ‏‏

நாங்கள் (அஸ்மாவின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை, அவரது வாயில் பேரீச்சம் பழத்தை மென்று தடவுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அப்போது பேரீச்சம் பழம் ஒன்றைத் தேடினோம். அது கிடைப்பதற்குள் பெரும் பாடாகிவிட்டது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3990

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، – يَعْنِي ابْنَ عُرْوَةَ – عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيُبَرِّكُ عَلَيْهِمْ وَيُحَنِّكُهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில், குழந்தைகள் கொண்டுவரப்படுவதுண்டு. அப்போது அந்தக் குழந்தைகளுக்காக அவர்கள் அருள்வளம் (பரக்கத்) வேண்டிப் பிராத்திப்பார்கள். பேரீச்சம் பழத்தை மென்று, அதைக் குழந்தையின் வாயில் தடவிவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3989

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ، أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ قَالَتْ :‏

فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ، فَأَتَيْتُ الْمَدِينَةَ فَنَزَلْتُ بِقُبَاءٍ فَوَلَدْتُهُ بِقُبَاءٍ ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَوَضَعَهُ فِي حَجْرِهِ ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا ثُمَّ تَفَلَ فِي فِيهِ فَكَانَ أَوَّلَ شَىْءٍ دَخَلَ جَوْفَهُ رِيقُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ حَنَّكَهُ بِالتَّمْرَةِ ثُمَّ دَعَا لَهُ وَبَرَّكَ عَلَيْهِ وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الإِسْلاَمِ ‏.‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا هَاجَرَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ حُبْلَى بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ أَبِي أُسَامَةَ ‏.‏

மக்காவில் (என் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை நான் கருவுற்றேன். நிறை மாத கர்ப்பினியாக நான் (புலம்பெயர்ந்து) மதீனாவுக்குச் செல்லும் வழியில் ‘குபா’வில் தங்கினேன். ‘குபா’விலேயே நான் குழந்தையைப் பெற்றெடுத்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (குழந்தையைக் கொண்டு) சென்று அவர்களது மடியில் வைத்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதை மென்று, குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் உணவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது.

பிறகு (மீண்டும்) அந்தப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் தடவினார்கள். பின்னர் குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். அதற்காக அருள்வளம் (பரக்கத்) வேண்டினார்கள். (என் குழந்தை) அப்துல்லாஹ்தான் இஸ்லாமிய மீளெழுச்சியின்போது (முஹாஜிர்களுக்குப்) பிறந்த முதல் குழந்தை ஆவார்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)


குறிப்பு :

அலீ பின் முஸ்ஹிர் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் (என் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரைக் கருவுற்றிருந்த நிலையில் நாடு துறந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) செய்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்  சென்றேன் …” என ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3988

حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا شُعَيْبٌ، – يَعْنِي ابْنَ إِسْحَاقَ – أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، وَفَاطِمَةُ بِنْتُ الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُمَا قَالاَ :‏

خَرَجَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ حِينَ هَاجَرَتْ وَهِيَ حُبْلَى بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ فَقَدِمَتْ قُبَاءً فَنُفِسَتْ بِعَبْدِ اللَّهِ بِقُبَاءٍ ثُمَّ خَرَجَتْ حِينَ نُفِسَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيُحَنِّكَهُ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا فَوَضَعَهُ فِي حَجْرِهِ ثُمَّ دَعَا بِتَمْرَةٍ قَالَ قَالَتْ عَائِشَةُ فَمَكَثْنَا سَاعَةً نَلْتَمِسُهَا قَبْلَ أَنْ نَجِدَهَا فَمَضَغَهَا ثُمَّ بَصَقَهَا فِي فِيهِ فَإِنَّ أَوَّلَ شَىْءٍ دَخَلَ بَطْنَهُ لَرِيقُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَتْ أَسْمَاءُ ثُمَّ مَسَحَهُ وَصَلَّى عَلَيْهِ وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ ثُمَّ جَاءَ وَهُوَ ابْنُ سَبْعِ سِنِينَ أَوْ ثَمَانٍ لِيُبَايِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَهُ بِذَلِكَ الزُّبَيْرُ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَآهُ مُقْبِلاً إِلَيْهِ ثُمَّ بَايَعَهُ ‏.‏

அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி) புலம்பெயர்ந்து (மதீனாவுக்குச்) சென்றபோது, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களைக் கருவுற்றிருந்தார்கள். அவர்கள் ‘குபா’ வந்தடைந்தபோது, அங்கு அப்துல்லாஹ்வைப் பெற்றெடுத்தார்கள். குழந்தை பிறந்தவுடன் பேரீச்சம் பழத்தை மென்று, அதைக் குழந்தையின் வாயில் தடவுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து குழந்தையை வாங்கி, தமது மடியில் வைத்தார்கள். பிறகு பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) (இது தொடர்பாகப் பின்வருமாறு) கூறினார்கள்: பேரீச்சம் பழம் கிடைக்காமல் நாங்கள் சிறிது நேரம் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பேரீச்சம் பழம் கிடைத்ததும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாயிலிட்டு மென்றார்கள். பிறகு குழந்தையின் வாயில் அதை உமிழ்ந்தார்கள். குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற முதல் பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ்நீராகத்தான் இருந்தது.

அஸ்மா (ரலி) கூறுகின்றார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  குழந்தையைத் தடவிக்கொடுத்து, குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு அதற்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு ஏழு அல்லது எட்டு வயதானபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பிரார்த்தனை வேண்டி) உறுதிப் பிரமாணம் செய்தவற்காக அவர்களிடம் வந்தார். அவ்வாறு செல்லுமாறு (தந்தை) ஸுபைர் (ரலி) அப்துல்லாஹ்வுக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) தம்மை நோக்கி வருவதைக் கண்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்துவிட்டு உறுதிமொழி வாங்கினார்கள்.

அறிவிப்பளர்கள் : அன்னை ஆயிஷா (ரலி), அஸ்மா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), ஃபாத்திமா பின்த்தி அல்முன்திர் பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3987

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

وُلِدَ لِي غُلاَمٌ فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَمَّاهُ إِبْرَاهِيمَ وَحَنَّكَهُ بِتَمْرَةٍ ‏

எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அக்குழந்தைக்கு ‘இப்ராஹீம்’ எனப் பெயர் சூட்டி, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3986

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كَانَ ابْنٌ لأَبِي طَلْحَةَ يَشْتَكِي فَخَرَجَ أَبُو طَلْحَةَ فَقُبِضَ الصَّبِيُّ فَلَمَّا رَجَعَ أَبُو طَلْحَةَ قَالَ مَا فَعَلَ ابْنِي قَالَتْ أُمُّ سُلَيْمٍ هُوَ أَسْكَنُ مِمَّا كَانَ ‏.‏ فَقَرَّبَتْ إِلَيْهِ الْعَشَاءَ فَتَعَشَّى ثُمَّ أَصَابَ مِنْهَا فَلَمَّا فَرَغَ قَالَتْ وَارُوا الصَّبِيَّ ‏.‏ فَلَمَّا أَصْبَحَ أَبُو طَلْحَةَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ ‏”‏ أَعْرَسْتُمُ اللَّيْلَةَ ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ قَالَ ‏”‏ اللَّهُمَّ بَارِكْ لَهُمَا ‏”‏ ‏.‏ فَوَلَدَتْ غُلاَمًا فَقَالَ لِي أَبُو طَلْحَةَ احْمِلْهُ حَتَّى تَأْتِيَ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏ فَأَتَى بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَبَعَثَتْ مَعَهُ بِتَمَرَاتٍ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَمَعَهُ شَىْءٌ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ تَمَرَاتٌ ‏.‏ فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَضَغَهَا ثُمَّ أَخَذَهَا مِنْ فِيهِ فَجَعَلَهَا فِي فِي الصَّبِيِّ ثُمَّ حَنَّكَهُ وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ ‏‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، بِهَذِهِ الْقِصَّةِ نَحْوَ حَدِيثِ يَزِيدَ ‏

அபூ தல்ஹா (ரலி) அவர்களின் குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தது. அபூதல்ஹா (ரலி) (வெளியூருக்குச்) சென்றிருந்தபோது, அக்குழந்தை இறந்துவிட்டது. அபூதல்ஹா (ரலி) திரும்பி வந்து (என் தாய் உம்மு ஸுலைமிடம்) “என் குழந்தை என்ன செய்கின்றான்?” என்று கேட்டார்கள்.

உம்மு ஸுலைம் (ரலி) (துக்கத்தை வெளிக் காட்டாமல்) “அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கின்றான்” என்று பதிலளித்துவிட்டு, கணவருக்கு முன்னால் இரவு உணவை வைத்தார்.

அபூதல்ஹா (ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு (அன்றிரவு) மனைவியுடன் உறவு கொண்டார்கள். உறவு கொண்ட பின், உம்மு ஸுலைம் (ரலி) (தம் கணவரிடம்), “குழந்தையை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள்.

(அப்போதுதான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் குழந்தை இறந்துவிட்ட செய்தி தெரிந்தது.) விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நேற்றிரவு உறவில் ஈடுபட்டீர்களா?” என்று கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி), “ஆம்“ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! இந்த இருவருக்கும் வளம் (பரக்கத்) வழங்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர் உம்மு ஸுலைம் (ரலி) ஆண் மகவொன்றைப் பெற்றெடுத்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) என்னிடம், “குழந்தையை எடுத்துக்கொண்டு (நேராக) நபி (ஸல்) அவர்களிடம் செல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன்.

என்னிடம் உம்மு ஸுலைம் (ரலி) கொடுத்தனுப்பிய பேரீச்சம் பழங்கள் சில இருந்தன. நபி (ஸல்) என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, “இக்குழந்தைக்குக் கொடுக்க ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள், “ஆம், பேரீச்சம் பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவற்றை வாங்கி (தமது வாயால்) மென்று, பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவியபின் அக்குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

நபித் தோழர் அனஸ் (ரலி) அவர்களின் தந்தை மாலிக் மரணித்த பின்னர், அபூதல்ஹா (ரலி) எனும் நபித் தோழருக்கு மனைவியானார் அனஸ் (ரலி) அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) (http://www.satyamargam.com/articles/history/thozhiyar/thozhiyar-1/)

அத்தியாயம்: 38, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3985

حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

ذَهَبْتُ بِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيِّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ وُلِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي عَبَاءَةٍ يَهْنَأُ بَعِيرًا لَهُ فَقَالَ ‏”‏ هَلْ مَعَكَ تَمْرٌ ‏”‏ ‏.‏ فَقُلْتُ نَعَمْ ‏.‏ فَنَاوَلْتُهُ تَمَرَاتٍ فَأَلْقَاهُنَّ فِي فِيهِ فَلاَكَهُنَّ ثُمَّ فَغَرَ فَا الصَّبِيِّ فَمَجَّهُ فِي فِيهِ فَجَعَلَ الصَّبِيُّ يَتَلَمَّظُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ حُبُّ الأَنْصَارِ التَّمْرَ ‏”‏ ‏.‏ وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ ‏

அபூதல்ஹா அல்அன்ஸாரீ அவர்களுக்கு (ஆண்) குழந்தை பிறந்தபோது அதை(த் தூக்கிக்கொண்டு) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் நீளங்கி அணிந்து, தமது ஒட்டகத்திற்குத் தார் பூசி(சிகிச்சை அளித்து)க் கொண்டிருந்தார்கள். அவர்கள், “உன்னிடம் பேரீச்சம் பழம் இருக்கிறதா?” என்று கேட்டார்கள்.

நான் “ஆம்“ என்று கூறி, அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் சிலவற்றை எடுத்துக் கொடுத்தேன். அவற்றை வாங்கி அவர்கள் தமது வாயிலிட்டு மென்று, பிறகு குழந்தையின் வாயைத் திறந்து, அதில் சிறிதளவு உமிழ்ந்தார்கள்.

குழந்தை, தன் நாவைச் சுழற்றி அதைச் சுவைக்கலாயிற்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஸாரிகளுக்கு மிகவும் விருப்பமானது பேரீச்சம் பழங்கள் ஆகும்” என்று கூறிவிட்டு, குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

குழந்தை அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா அல்அன்ஸாரீ, அனஸ் (ரலி) அவர்களின் தாய் வழித் தம்பியாவார்.