அத்தியாயம்: 43, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4277

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنِي هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ قَالَ :‏ ‏

كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَادٍ حَسَنُ الصَّوْتِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏رُوَيْدًا يَا أَنْجَشَةُ لاَ تَكْسِرِ الْقَوَارِيرَ ‏”‏ ‏.‏ يَعْنِي ضَعَفَةَ النِّسَاءِ


وَحَدَّثَنَاهُ ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ حَادٍ حَسَنُ الصَّوْتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அன்ஜஷா எனும்) அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் இருந்தார். (அவர் ஒரு முறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க, பாடிக்கொண்டிருந்தபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நிதானம், அன்ஜஷா! கண்ணாடிக் குடுவைகளை -அதாவது மென்மையான பெண்களை- உடைத்துவிடாதே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

அபூதாவூத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்“ எனும் குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 43, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4276

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ح

وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا التَّيْمِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏ ‏

كَانَتْ أُمُّ سُلَيْمٍ مَعَ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُنَّ يَسُوقُ بِهِنَّ سَوَّاقٌ فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَىْ أَنْجَشَةُ رُوَيْدًا سَوْقَكَ بِالْقَوَارِيرِ ‏”‏

நபி (ஸல்) அவர்களின் துணைவியருடன் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) (ஒரு பயணத்தில்) இருந்தார்கள். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகங்களை ஒட்டகவோட்டி ஒருவர் (பாட்டுப்பாடி விரைவாக) ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) (அந்த ஒட்டகவோட்டியிடம்), “அன்ஜஷா! மெதுவாக ஓட்டிச் செல். கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4275

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، كِلاَهُمَا عَنِ ابْنِ عُلَيَّةَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَى عَلَى أَزْوَاجِهِ وَسَوَّاقٌ يَسُوقُ بِهِنَّ يُقَالُ لَهُ أَنْجَشَةُ فَقَالَ ‏ “‏ وَيْحَكَ يَا أَنْجَشَةُ رُوَيْدًا سَوْقَكَ بِالْقَوَارِيرِ ‏”‏ ‏.‏ قَالَ قَالَ أَبُو قِلاَبَةَ تَكَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَلِمَةٍ لَوْ تَكَلَّمَ بِهَا بَعْضُكُمْ لَعِبْتُمُوهَا عَلَيْهِ ‏

நபி (ஸல்) (ஒரு பயணத்தில்) தம் துணைவியரிடம் வந்தார்கள். அப்போது ‘அன்ஜஷா’ எனும் ஒட்டகவோட்டி ஒருவர், துணைவியர் அமர்ந்திருந்த ஒட்டகங்களை (பாட்டுப்பாடி விரைவாக) ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்), “கேடுகெட்ட அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) (இராக்வாசிகளிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இங்கு) ஒரு வார்த்தையைக் கூறியுள்ளார்கள். அதையே உங்களில் ஒருவர் சொல்லியிருந்தால், அதற்காக அவரை நீங்கள் கேலி செய்திருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

(இராக்வாசிகள், பிறரைக் கேலி பேசுவதில் ஆர்வமுடையவர்கள். பெண்களை, கண்ணாடிக் குடுவைகளுக்கு உவமையாக்கி நபி (ஸல்) கூறியதுபோல் வேறு யாராவது உவமித்திருந்தால் அவர்களை இராக்கியர்கள் தம் கேலியினால் உண்டு, இல்லை என்றாக்கியிருப்பார்கள். யதார்த்தத்தில் “பெண்கள் என்போர், கண்ணாடிக் குடுவைகள்போல் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய மென்மையானவர்கள்“ எனும் ஆழமான பொருள் நிறைந்த உவமையை இராக்கியர் உய்த்துணர மாட்டார்கள் – தக்மிலா & ஃபத்ஹு).

அத்தியாயம்: 43, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4274

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو كَامِلٍ جَمِيعًا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ قَالَ أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ قَالَ :‏ ‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ وَغُلاَمٌ أَسْوَدُ يُقَالُ لَهُ أَنْجَشَةُ يَحْدُو فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَا أَنْجَشَةُ رُوَيْدَكَ سَوْقًا بِالْقَوَارِيرِ ‏”‏‏


وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ، وَأَبُو كَامِلٍ قَالُوا حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، بِنَحْوِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் கறுப்பர் இனத்தவரான அவர்களுடைய பணியாள் ‘அன்ஜஷா’ என்பவரும் இருந்தார். அவர் பாட்டுப் பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து)கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே” என்று (பெண்களை, கண்ணாடிக் குடுவைகளுக்கு உவமித்துச்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)