அத்தியாயம்: 50, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4910

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ إِذَا اسْتَيْقَظَ عَلَى بَعِيرِهِ قَدْ أَضَلَّهُ بِأَرْضِ فَلاَةٍ ‏”‏ ‏‏


وَحَدَّثَنِيهِ أَحْمَدُ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏‏

“வறண்ட பாலைவனத்தில் தொலைந்து போய்விட்ட தமது ஒட்டகத்தை, உறங்கியெழும்போது கண்டுபிடித்தவரைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 50, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4909

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، – وَهُوَ عَمُّهُ – قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلاَةٍ فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَأَيِسَ مِنْهَا فَأَتَى شَجَرَةً فَاضْطَجَعَ فِي ظِلِّهَا قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا قَائِمَةً عِنْدَهُ فَأَخَذَ بِخِطَامِهَا ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ اللَّهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ ‏.‏ أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ ‏”‏ ‏

“உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடிவிட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.

தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாத அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், “இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்” என்று தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார். இவரைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 50, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4908

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَجَعْفَرُ بْنُ حُمَيْدٍ، قَالَ جَعْفَرٌ حَدَّثَنَا وَقَالَ يَحْيَى أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنْ إِيَادٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ كَيْفَ تَقُولُونَ بِفَرَحِ رَجُلٍ انْفَلَتَتْ مِنْهُ رَاحِلَتُهُ تَجُرُّ زِمَامَهَا بِأَرْضٍ قَفْرٍ لَيْسَ بِهَا طَعَامٌ وَلاَ شَرَابٌ وَعَلَيْهَا لَهُ طَعَامٌ وَشَرَابٌ فَطَلَبَهَا حَتَّى شَقَّ عَلَيْهِ ثُمَّ مَرَّتْ بِجِذْلِ شَجَرَةٍ فَتَعَلَّقَ زِمَامُهَا فَوَجَدَهَا مُتَعَلِّقَةً بِهِ ‏”‏ ‏.‏ قُلْنَا شَدِيدًا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَمَا وَاللَّهِ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ مِنَ الرَّجُلِ بِرَاحِلَتِهِ ‏”‏ ‏

قَالَ جَعْفَرٌ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادٍ عَنْ أَبِيهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எங்களிடம்), “ஒருவர் உணவோ நீரோ கிடைக்காத வறண்ட பாலைவனத்தில் (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தபோது, அவரது ஒட்டகம் தனது கடிவாளத்தை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது. அவரின் உணவும் பானமும் அதிலிருந்தன. அவர் அதைத் தேடிப் புறப்பட்டார். அதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். (ஓடிப்போன) அந்த ஒட்டகம் ஒரு மரத்தைக் கடந்தபோது அதன் கடிவாளம் அந்த மரத்தின் வேரில் மாட்டிக்கொண்டது. அதில் சிக்கிக்கொண்டு இருந்தபோது அவர் அதைக் கண்டார். அப்போது அவர் அடையும் மகிழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், “மிகவும் அதிகமாக (மகிழ்ச்சி அடைந்திருப்பார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தனது ஒட்டகத்தைக் கண்ட அவர் அடையும் மகிழ்ச்சியைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகின்றான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 50, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4907

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو يُونُسَ، عَنْ سِمَاكٍ، قَالَ خَطَبَ النُّعْمَانُ بْنُ بَشِيرٍ فَقَالَ ‏ :‏ ‏

“‏ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ رَجُلٍ حَمَلَ زَادَهُ وَمَزَادَهُ عَلَى بَعِيرٍ ثُمَّ سَارَ حَتَّى كَانَ بِفَلاَةٍ مِنَ الأَرْضِ فَأَدْرَكَتْهُ الْقَائِلَةُ فَنَزَلَ فَقَالَ تَحْتَ شَجَرَةٍ فَغَلَبَتْهُ عَيْنُهُ وَانْسَلَّ بَعِيرُهُ فَاسْتَيْقَظَ فَسَعَى شَرَفًا فَلَمْ يَرَ شَيْئًا ثُمَّ سَعَى شَرَفًا ثَانِيًا فَلَمْ يَرَ شَيْئًا ثُمَّ سَعَى شَرَفًا ثَالِثًا فَلَمْ يَرَ شَيْئًا فَأَقْبَلَ حَتَّى أَتَى مَكَانَهُ الَّذِي قَالَ فِيهِ فَبَيْنَمَا هُوَ قَاعِدٌ إِذْ جَاءَهُ بَعِيرُهُ يَمْشِي حَتَّى وَضَعَ خِطَامَهُ فِي يَدِهِ فَلَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ الْعَبْدِ مِنْ هَذَا حِينَ وَجَدَ بَعِيرَهُ عَلَى حَالِهِ ‏”‏ ‏


قَالَ سِمَاكٌ فَزَعَمَ الشَّعْبِيُّ أَنَّ النُّعْمَانَ رَفَعَ هَذَا الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَمَّا أَنَا فَلَمْ أَسْمَعْهُ

நுஅமான் பின் பஷீர் (ரலி) உரையாற்றும்போது கூறினார்கள்:

“ஒருவர் தமது ஒட்டகத்தில் தமது பயண உணவையும் தோல் பையையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தார். வறண்ட பாலைவனத்தில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, மதிய ஓய்வு நேரம் வரவே, அவர் இறங்கி, ஒரு மரத்தின் கீழ் தம்மையும் அறியாமல் உறங்கிவிட்டார். அப்போது அவரது ஒட்டகம் தப்பியோடிவிட்டது. அவர் விழித்தெழுந்தபோது (ஒட்டகத்தைக் காணாததால்) ஓடிப்போய் ஒரு குன்றின் மேலேறிப் பார்த்தார். எதையும் அவர் காணவில்லை. பிறகு மற்றொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். அங்கும் காணவில்லை. பிறகு வேறொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். எதையும் காணவில்லை.

ஆகவே, முன்பு ஓய்வெடுத்த இடத்துக்கே திரும்பிவந்து அமர்ந்துகொண்டார். அப்போது அவரது ஒட்டகம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது வந்து, தனது கடிவாளத்தை அவரது கையில் இட்டது. அவர் தனது ஒட்டகத்தைக் காணும்போது அடைந்த மகிழ்ச்சியைவிட, தன் அடியார் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) வழியாக ஷஅபீ (ரஹ்)


குறிப்பு :

“நுஅமான் (ரலி) அவ்வாறு கூறியதை நான் செவியுற்றதில்லை” என்று ஸிமாக் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 50, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4906

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، – وَاللَّفْظُ لِعُثْمَانَ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ قَالَ :‏ ‏

دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ أَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَحَدَّثَنَا بِحَدِيثَيْنِ حَدِيثًا عَنْ نَفْسِهِ وَحَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ الْمُؤْمِنِ مِنْ رَجُلٍ فِي أَرْضٍ دَوِيَّةٍ مَهْلَكَةٍ مَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَنَامَ فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ فَطَلَبَهَا حَتَّى أَدْرَكَهُ الْعَطَشُ ثُمَّ قَالَ أَرْجِعُ إِلَى مَكَانِي الَّذِي كُنْتُ فِيهِ فَأَنَامُ حَتَّى أَمُوتَ ‏.‏ فَوَضَعَ رَأْسَهُ عَلَى سَاعِدِهِ لِيَمُوتَ فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَاحِلَتُهُ وَعَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَشَرَابُهُ فَاللَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ الْعَبْدِ الْمُؤْمِنِ مِنْ هَذَا بِرَاحِلَتِهِ وَزَادِهِ ‏”‏ ‏‏


وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ قُطْبَةَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ “‏ مِنْ رَجُلٍ بِدَاوِيَّةٍ مِنَ الأَرْضِ ‏”‏

وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ عُمَيْرٍ قَالَ سَمِعْتُ الْحَارِثَ بْنَ سُوَيْدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، حَدِيثَيْنِ أَحَدُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالآخَرُ عَنْ نَفْسِهِ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ الْمُؤْمِنِ ‏”‏ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ ‏‏

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக நான் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் எங்களுக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றைத் தாமாகக் கூறினார்கள்.

மற்றொன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்கள்:

“ஒருவன் (பயணத்தினிடையே ஓய்வெடுப்பதற்காக) ஆபத்துகள் நிறைந்த (வறண்ட) பாலைவனத்தில் (இறங்கி) உறங்கினான். அவனுடன் அவனது வாகன(மான ஒட்டக)மும் அதில் அவனுடைய உணவும் நீரும் இருந்தன. அவன் (உறங்கி) விழித்தெழுந்தபோது, அவனது ஒட்டகம் (தப்பியோடிப்) போயிருந்தது. அவன் அதைத் தேடிச் சென்றதில், அவனுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று சாகும்வரை உறங்கப்போகின்றேன்” என்று (தனக்குள்) கூறியபடி (அங்குத் திரும்பிச் சென்று) தனது கொடுங்கையில் தலை வைத்து உறங்கிப் போனான்.

பிறகு (திடீரென) அவன் விழித்துப் பார்த்தபோது, அவனுக்கருகில் அவனது ஒட்டகம் இருந்தது. அதில் அவனது பயண உணவும் நீரும் இருந்தன. அப்போது அவன் தனது ஒட்டகமும் உணவும் கிடைத்த மகிழ்ச்சியைவிட, இறைநம்பிக்கையுள்ள அடியார் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக ஹாரிஸ் பின் ஸுவைத் (ரஹ்)


குறிப்பு :

யஹ்யா பின் ஆதம் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘வறண்ட பாலைவனம்’ என்பதைக் குறிக்க, ‘தாவியத்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பு, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) இரு ஹதீஸ்களை எனக்குச் சொன்னார்கள். ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகவும் மற்றொன்றைத் தாமாகவும் தெரிவித்தார்கள் …” என ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 50, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4905

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيَّ – عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ أَحَدِكُمْ بِضَالَّتِهِ إِذَا وَجَدَهَا ‏”‏ ‏‏

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ ‏

“காணாமல்போன ஒட்டகத்தைக் கண்டுபிடிக்கும்போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, உங்களில் ஒருவர் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 50, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4904

حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي وَاللَّهِ لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ يَجِدُ ضَالَّتَهُ بِالْفَلاَةِ وَمَنْ تَقَرَّبَ إِلَىَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ إِلَىَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِذَا أَقْبَلَ إِلَىَّ يَمْشِي أَقْبَلْتُ إِلَيْهِ أُهَرْوِلُ ‏”‏ ‏‏

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘என்னைப் பற்றி என் அடியான் எப்படி நினைக்கின்றானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கின்றேன். அவன் என்னை நினைவு கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்‘ என்று கூறினான்.

அல்லாஹ்வின் மீதாணையாக! பாலைவனத்தில் தொலைத்துவிட்ட தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்கும்போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகின்றான்.

‘யார் என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்குகின்றாரோ, நான் அவரிடம் ஒரு முழம் அளவு நெருங்குகின்றேன். யார் என்னிடம் ஒரு முழம் நெருங்குகின்றாரோ, நான் அவரிடம் ஒரு பாகமளவு நெருங்குகின்றேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால், நான் அவரை நோக்கி ஓடிச்செல்கின்றேன்‘ (என்று அல்லாஹ் கூறினான்)” என்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)