அத்தியாயம்: 54, பாடம்: 23, ஹதீஸ் எண்: 5206

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، قَالَ سَمِعْتُ يَعْقُوبَ بْنَ عَاصِمِ بْنِ عُرْوَةَ بْنِ مَسْعُودٍ الثَّقَفِيَّ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو :‏ ‏

وَجَاءَهُ رَجُلٌ فَقَالَ مَا هَذَا الْحَدِيثُ الَّذِي تُحَدِّثُ بِهِ تَقُولُ إِنَّ السَّاعَةَ تَقُومُ إِلَى كَذَا وَكَذَا ‏.‏ فَقَالَ سُبْحَانَ اللَّهِ – أَوْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَوْ كَلِمَةً نَحْوَهُمَا – لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أُحَدِّثَ أَحَدًا شَيْئًا أَبَدًا إِنَّمَا قُلْتُ إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدَ قَلِيلٍ أَمْرًا عَظِيمًا يُحَرَّقُ الْبَيْتُ وَيَكُونُ، وَيَكُونُ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَخْرُجُ الدَّجَّالُ فِي أُمَّتِي فَيَمْكُثُ أَرْبَعِينَ – لاَ أَدْرِي أَرْبَعِينَ يَوْمًا أَوْ أَرْبَعِينَ شَهْرًا أَوْ أَرْبَعِينَ عَامًا – فَيَبْعَثُ اللَّهُ عِيسَى ابْنَ مَرْيَمَ كَأَنَّهُ عُرْوَةُ بْنُ مَسْعُودٍ فَيَطْلُبُهُ فَيُهْلِكُهُ ثُمَّ يَمْكُثُ النَّاسُ سَبْعَ سِنِينَ لَيْسَ بَيْنَ اثْنَيْنِ عَدَاوَةٌ ثُمَّ يُرْسِلُ اللَّهُ رِيحًا بَارِدَةً مِنْ قِبَلِ الشَّأْمِ فَلاَ يَبْقَى عَلَى وَجْهِ الأَرْضِ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ أَوْ إِيمَانٍ إِلاَّ قَبَضَتْهُ حَتَّى لَوْ أَنَّ أَحَدَكُمْ دَخَلَ فِي كَبَدِ جَبَلٍ لَدَخَلَتْهُ عَلَيْهِ حَتَّى تَقْبِضَهُ ‏”‏ ‏.‏ قَالَ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ فَيَبْقَى شِرَارُ النَّاسِ فِي خِفَّةِ الطَّيْرِ وَأَحْلاَمِ السِّبَاعِ لاَ يَعْرِفُونَ مَعْرُوفًا وَلاَ يُنْكِرُونَ مُنْكَرًا فَيَتَمَثَّلُ لَهُمُ الشَّيْطَانُ فَيَقُولُ أَلاَ تَسْتَجِيبُونَ فَيَقُولُونَ فَمَا تَأْمُرُنَا فَيَأْمُرُهُمْ بِعِبَادَةِ الأَوْثَانِ وَهُمْ فِي ذَلِكَ دَارٌّ رِزْقُهُمْ حَسَنٌ عَيْشُهُمْ ثُمَّ يُنْفَخُ فِي الصُّورِ فَلاَ يَسْمَعُهُ أَحَدٌ إِلاَّ أَصْغَى لِيتًا وَرَفَعَ لِيتًا – قَالَ – وَأَوَّلُ مَنْ يَسْمَعُهُ رَجُلٌ يَلُوطُ حَوْضَ إِبِلِهِ – قَالَ – فَيَصْعَقُ وَيَصْعَقُ النَّاسُ ثُمَّ يُرْسِلُ اللَّهُ – أَوْ قَالَ يُنْزِلُ اللَّهُ – مَطَرًا كَأَنَّهُ الطَّلُّ أَوِ الظِّلُّ – نُعْمَانُ الشَّاكُّ – فَتَنْبُتُ مِنْهُ أَجْسَادُ النَّاسِ ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ ثُمَّ يُقَالُ يَا أَيُّهَا النَّاسُ هَلُمَّ إِلَى رَبِّكُمْ ‏.‏ وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ – قَالَ – ثُمَّ يُقَالُ أَخْرِجُوا بَعْثَ النَّارِ فَيُقَالُ مِنْ كَمْ فَيُقَالُ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ – قَالَ – فَذَاكَ يَوْمَ يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا وَذَلِكَ يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ ‏”‏ ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ قَالَ سَمِعْتُ يَعْقُوبَ بْنَ عَاصِمِ بْنِ عُرْوَةَ بْنِ مَسْعُودٍ، قَالَ سَمِعْتُ رَجُلاً، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو إِنَّكَ تَقُولُ إِنَّ السَّاعَةَ تَقُومُ إِلَى كَذَا وَكَذَا فَقَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أُحَدِّثَكُمْ بِشَىْءٍ إِنَّمَا قُلْتُ إِنَّكُمْ تَرَوْنَ بَعْدَ قَلِيلٍ أَمْرًا عَظِيمًا ‏.‏ فَكَانَ حَرِيقَ الْبَيْتِ – قَالَ شُعْبَةُ هَذَا أَوْ نَحْوَهُ – قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَخْرُجُ الدَّجَّالُ فِي أُمَّتِي ‏”‏ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ وَقَالَ فِي حَدِيثِهِ ‏”‏ فَلاَ يَبْقَى أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ إِلاَّ قَبَضَتْهُ ‏”‏ ‏.‏ قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنِي شُعْبَةُ بِهَذَا الْحَدِيثِ مَرَّاتٍ وَعَرَضْتُهُ عَلَيْهِ ‏.‏

ஒருவர், அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம் வந்து, “யுகமுடிவு நாளில் இன்னின்னது நிகழும் என நீங்கள் கூறிவரும் ஹதீஸ் என்ன?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), அல்லது “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை), அல்லது இவற்றைப் போன்ற ஒரு (துதிச்) சொல்லைக் கூறிவிட்டு, “நான் யாருக்கும் எந்த ஹதீஸையும் ஒருபோதும் அறிவிக்கக் கூடாது என எண்ணியிருந்தேன். நீங்கள் வெகுவிரைவில் ஒரு மகத்தான நிகழ்ச்சியைக் காண்பீர்கள். இறையில்லம் கஅபா எரிக்கப்படும்! மேலும் இன்னின்னவாறு நடக்கும் என்றே நான் சொன்னேன்” எனக் கூறிவிட்டு,

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

தஜ்ஜால் வெளிப்பட்டு என் சமுதாயத்தாரிடையே வந்து, நாற்பதுவரை தங்கியிருப்பான். (நாற்பது நாட்களா, நாற்பது மாதங்களா, நாற்பது ஆண்டுகளா என்பது எனக்குத் தெரியாது) அப்போது அல்லாஹ், மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களை அனுப்புவான். அவர்கள், (சாயலில்) உர்வா பின் மஸ்ஊத் அவர்களைப் போன்றிருப்பார்கள். அவர்கள் தஜ்ஜாலைத் தேடி வந்து அழிப்பார்கள். பிறகு மக்கள் ஏழாண்டுகள் தங்கியிருப்பார்கள். அப்போது எவருக்குமிடையேயும் பகையுணர்வு இருக்காது.

பிறகு அல்லாஹ் ஷாம் (சிரியா) நாட்டின் திசையிலிருந்து குளிர்ந்த காற்று ஒன்றை அனுப்புவான். அப்போது பூமியின் மீது வாழும், தமது உள்ளத்தில் கடுகு மணியளவு நன்மை, அல்லது இறைநம்பிக்கை உள்ள எவரது உயிரையும் அது கைப்பற்றாமல் விட்டுவைக்காது. எந்த அளவுக்கென்றால், உங்களில் ஒருவர் மலைக்கு நடுவே நுழைந்து விட்டாலும் அங்கும் அது நுழைந்து அவரது உயிரைக் கைப்பற்றும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டேன்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும் குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியமாட்டார்கள். எந்தத் தீமையையும் (செய்ய) மறுக்கவுமாட்டார்கள். அப்போது அவர்களிடையே ஷைத்தான் காட்சியளித்து, “நீங்கள் (எனக்குப்) பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்பான். அந்த மக்கள், “நீ என்ன உத்தரவிடுகிறாய்?” என்று கேட்பார்கள். அப்போது ஷைத்தான், சிலைகளை வழிபடுமாறு உத்தரவிடுவான்.

இவ்வாறு அவர்கள் (சிலைவழிபாடு செய்துகொண்டு) இருக்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் தாராளமானதாய் இருக்கும். அவர்களின் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும். பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும்; மறுபக்கம் உயரும். (சுயநினைவிழந்து மூர்ச்சையாகிவிடுவார்கள்) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து)விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவர்.

பிறகு அல்லாஹ் மழையொன்றை அனுப்புவான் / இறக்குவான்.

உடனே அதன் மூலம் மனிதர்களின் உடல்கள் மீண்டும் முளைக்கும். பிறகு மறுபடியும் ஒரு முறை எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது அவர்கள் அனைவரும் எழுந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகு (மனிதர்களிடம்) “மக்களே! உங்கள் இறைவனிடம் வாருங்கள்” என்றும், (வானவர்களிடம்) “அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்; அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” என்றும் கூறப்படும்.

பிறகு “நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களைவிட்டுத்) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று கூறப்படும். அப்போது “எத்தனை பேரிலிருந்து (எத்தனை பேரை)?” என்று கேட்கப்படும். அதற்கு “(நரகத்திற்குச் செல்லவிருக்கும்) ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை” என்று பதிலளிக்கப்படும். (பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற நாள் அதுதான்; கணைக்கால் திறக்கப்படும் நாளும் அதுதான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக யஅகூப் பின் ஆஸிம் பின் உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ரஹ்)


குறிப்புகள் :

” … பிறகு அல்லாஹ் மழையொன்றை அனுப்புவான் / இறக்குவான். அது, பனித்துளி போன்றோ நிழலைப் போன்றோ இருக்கும்” என்று அறிவிப்பாளர் நுஅமான் ஐயப்பாட்டுடன் அறிவிக்கின்றார்)

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒருவர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம், யுகமுடிவு நாளின்போது இன்னின்னது நடக்கும் என்று நீங்கள் கூறுகின்றீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “உங்களுக்கு எதையும் அறிவிக்கக் கூடாது என்றே நான் எண்ணியிருந்தேன். இதை மட்டும் கூறுகின்றேன்: நீங்கள் சிறிது காலத்திற்குப்பின் மாபெரும் நிகழ்வொன்றைக் காண்பீர்கள். அதில் இறையில்லம் கஅபா தீக்கிரையாகும் என்றோ, அல்லது இது போன்றோ கூறினார்கள்” என ஷுஅபா (ரஹ்) ஐயப்பாட்டுடன் அறிவிக்கின்றார்.

மேலும் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “என் சமுதாயத்தாரிடம் தஜ்ஜால் வருவான்…” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பில், “(ஷாம் திசையிலிருந்து வீசும் அந்தக் குளிர்ந்த காற்று) தம், உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எந்த மனித(ரின் உயி)ரையும் கைப்பற்றாமல் விடாது” என்று உறுதியாக இடம்பெற்றுள்ளது. (கடுகளவு நன்மை அல்லது இறைநம்பிக்கை என்ற ஐயம் இடம்பெறவில்லை)

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) கூறுகின்றார்: “இந்த ஹதீஸை எனக்கு ஷுஅபா (ரஹ்) பல முறை அறிவித்தார்கள். நானும் இதை அவர்களிடம் (திருப்பிச்) சொல்லிக் காட்டியுள்ளேன்.