حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ بِالأَعْمَاقِ أَوْ بِدَابِقَ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنَ الْمَدِينَةِ مِنْ خِيَارِ أَهْلِ الأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتِ الرُّومُ خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ . فَيَقُولُ الْمُسْلِمُونَ لاَ وَاللَّهِ لاَ نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا . فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لاَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ لاَ يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطُنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ فِيهِمُ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ . فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتِ الصَّلاَةُ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لاَنْذَابَ حَتَّى يَهْلِكَ وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ ”
ரோம பைஸாந்தியர், ‘அஃமாக்’ மற்றும் ‘தாபிக்’ ஆகிய இடங்களில் பாளையம் இறங்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கு எதிராக மதீனாவிலிருந்து ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் மதீனத்தவர்களே சிறந்தவர்களாயிருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள், “எங்களுக்கும் (உங்களால்) சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட, (முஸ்லிம்) ரோமர்களுக்குமிடையே நாங்கள் போர் செய்ய எங்களை விட்டுவிடுங்கள்” என்று கூறுவார்கள்.
அப்போது முஸ்லிம்கள், “முடியாது; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் சகோதரர்கள்மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்று சொல்வார்கள்.
ஆகவே, ரோமர்கள் முஸ்லிம்கள்மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் புறமுதுகு காட்டி வெருண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவேமாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த உயிர்த்தியாகிகளாவர்; மூன்றிலொரு பகுதியினர் (ரோமர்களை) வெற்றி கொள்வார்கள். அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக்குள்ளாக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளை வெற்றி கொள்வார்கள்.
அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்கவிட்டுப் போர்ச் செல்வங்களை பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது, அவர்களிடையே ஷைத்தான், “நீங்கள் இங்கு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடையே மஸீஹ் (தஜ்ஜால்) வந்துவிட்டான்” என்று குரலெழுப்புவான்.
உடனே அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். ஆனால், அது பொய்யான செய்தியாயிருக்கும். அவர்கள் ஷாமுக்கு வரும்போது மஸீஹ் (தஜ்ஜால்) வெளிப்படுவான். இந்நிலையில் அவர்கள் போருக்காக ஆயத்தமாகி அணிகளைச் சீர் செய்துகொண்டிருக்கும்போது, தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது மர்யமின் மகன் ஈஸா (அலை) (வானிலிருந்து) இறங்கி வந்து அவர்களுக்குத் தலைமையேற்பார்கள்.
“அவரை அல்லாஹ்வின் விரோதி (தஜ்ஜால்) காணும்போது, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்துபோவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்கூட அவன் தானாகக் கரைந்து அழிந்துவிடுவான். ஆயினும், ஈஸாவின் கரத்தால் அவனை அல்லாஹ் அழிப்பான். அப்போது ஈஸா (அலை) அவர்கள் தமது ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்குக் காட்டுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :.
‘அஃமாக்‘ மற்றும் ‘தாபிக்‘ ஆகியவை, இன்றைய சிரியா நாட்டின் முக்கிய நகரான ‘அலெப்போ‘ (ஹலப்) நகரை அடுத்துள்ள ஊர்களாகும்.
கான்ஸ்டாண்டிநோபிள் என்பது, இன்றைய துருக்கியிலுள்ள இஸ்தன்பூல் நகராகும்.