அத்தியாயம்: 55, பாடம்: 16, ஹதீஸ் எண்: 5297

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَكْتُبُوا عَنِّي وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ وَحَدِّثُوا عَنِّي وَلاَ حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَىَّ – قَالَ هَمَّامٌ أَحْسِبُهُ قَالَ – مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கின்றவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

ஹம்மாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “திட்டமிட்டுப் பொய்யுரைப்பவர்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) கூறியதாக நான் கருதுகின்றேன் என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 55, பாடம்: 16, ஹதீஸ் எண்: 5296

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا بِهِ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ :‏ ‏

كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ وَيَقُولُ اسْمَعِي يَا رَبَّةَ الْحُجْرَةِ اسْمَعِي يَا رَبَّةَ الْحُجْرَةِ ‏.‏ وَعَائِشَةُ تُصَلِّي فَلَمَّا قَضَتْ صَلاَتَهَا قَالَتْ لِعُرْوَةَ أَلاَ تَسْمَعُ إِلَى هَذَا وَمَقَالَتِهِ آنِفًا إِنَّمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لأَحْصَاهُ

அபூஹுரைரா (ரலி), (ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்கு அருகில் அமர்ந்து கொண்டு) “அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்! அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறியபடி நபிமொழிகளை அறிவிக்கலானார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) தொழுதுகொண்டிருந்தார்கள். தொழுது முடித்ததும் அவர்கள் என்னிடம், “சற்று முன்னர் இவர் அறிவித்த(விதத்)தையும் இவர் கூறியதையும் நீ கேட்கவில்லையா? நபி (ஸல்) ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்றால், அதை (ஒவ்வொரு சொல்லாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணுவாராயின், ஒன்றுவிடாமல் எண்ணிவிடுவார்.” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)