அத்தியாயம்: 55, பாடம்: 19, ஹதீஸ் எண்: 5300

حَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ :‏ ‏

جَاءَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ إِلَى أَبِي فِي مَنْزِلِهِ فَاشْتَرَى مِنْهُ رَحْلاً فَقَالَ لِعَازِبٍ ابْعَثْ مَعِيَ ابْنَكَ يَحْمِلْهُ مَعِي إِلَى مَنْزِلِي فَقَالَ لِي أَبِي احْمِلْهُ ‏.‏ فَحَمَلْتُهُ وَخَرَجَ أَبِي مَعَهُ يَنْتَقِدُ ثَمَنَهُ فَقَالَ لَهُ أَبِي يَا أَبَا بَكْرٍ حَدِّثْنِي كَيْفَ صَنَعْتُمَا لَيْلَةَ سَرَيْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ أَسْرَيْنَا لَيْلَتَنَا كُلَّهَا حَتَّى قَامَ قَائِمُ الظَّهِيرَةِ وَخَلاَ الطَّرِيقُ فَلاَ يَمُرُّ فِيهِ أَحَدٌ حَتَّى رُفِعَتْ لَنَا صَخْرَةٌ طَوِيلَةٌ لَهَا ظِلٌّ لَمْ تَأْتِ عَلَيْهِ الشَّمْسُ بَعْدُ فَنَزَلْنَا عِنْدَهَا فَأَتَيْتُ الصَّخْرَةَ فَسَوَّيْتُ بِيَدِي مَكَانًا يَنَامُ فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ظِلِّهَا ثُمَّ بَسَطْتُ عَلَيْهِ فَرْوَةً ثُمَّ قُلْتُ نَمْ يَا رَسُولَ اللَّهِ وَأَنَا أَنْفُضُ لَكَ مَا حَوْلَكَ فَنَامَ وَخَرَجْتُ أَنْفُضُ مَا حَوْلَهُ فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ مُقْبِلٍ بِغَنَمِهِ إِلَى الصَّخْرَةِ يُرِيدُ مِنْهَا الَّذِي أَرَدْنَا فَلَقِيتُهُ فَقُلْتُ لِمَنْ أَنْتَ يَا غُلاَمُ فَقَالَ لِرَجُلٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ قُلْتُ أَفِي غَنَمِكَ لَبَنٌ قَالَ نَعَمْ ‏.‏ قُلْتُ أَفَتَحْلُبُ لِي قَالَ نَعَمْ ‏.‏ فَأَخَذَ شَاةً فَقُلْتُ لَهُ انْفُضِ الضَّرْعَ مِنَ الشَّعَرِ وَالتُّرَابِ وَالْقَذَى – قَالَ فَرَأَيْتُ الْبَرَاءَ يَضْرِبُ بِيَدِهِ عَلَى الأُخْرَى يَنْفُضُ – فَحَلَبَ لِي فِي قَعْبٍ مَعَهُ كُثْبَةً مِنْ لَبَنٍ قَالَ وَمَعِي إِدَاوَةٌ أَرْتَوِي فِيهَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لِيَشْرَبَ مِنْهَا وَيَتَوَضَّأَ – قَالَ – فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَكَرِهْتُ أَنْ أُوقِظَهُ مِنْ نَوْمِهِ فَوَافَقْتُهُ اسْتَيْقَظَ فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ مِنَ الْمَاءِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ اشْرَبْ مِنْ هَذَا اللَّبَنِ – قَالَ – فَشَرِبَ حَتَّى رَضِيتُ ثُمَّ قَالَ ‏”‏ أَلَمْ يَأْنِ لِلرَّحِيلِ ‏”‏ ‏.‏ قُلْتُ بَلَى ‏.‏ قَالَ فَارْتَحَلْنَا بَعْدَ مَا زَالَتِ الشَّمْسُ وَاتَّبَعَنَا سُرَاقَةُ بْنُ مَالِكٍ – قَالَ – وَنَحْنُ فِي جَلَدٍ مِنَ الأَرْضِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُتِينَا فَقَالَ ‏”‏ لاَ تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ‏”‏ ‏.‏ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَارْتَطَمَتْ فَرَسُهُ إِلَى بَطْنِهَا أُرَى فَقَالَ إِنِّي قَدْ عَلِمْتُ أَنَّكُمَا قَدْ دَعَوْتُمَا عَلَىَّ فَادْعُوَا لِي فَاللَّهُ لَكُمَا أَنْ أَرُدَّ عَنْكُمَا الطَّلَبَ ‏.‏ فَدَعَا اللَّهَ فَنَجَى فَرَجَعَ لاَ يَلْقَى أَحَدًا إِلاَّ قَالَ قَدْ كَفَيْتُكُمْ مَا هَا هُنَا فَلاَ يَلْقَى أَحَدًا إِلاَّ رَدَّهُ – قَالَ – وَوَفَى لَنَا


وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، ح وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، كِلاَهُمَا عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ أَبِي رَحْلاً بِثَلاَثَةَ عَشَرَ دِرْهَمًا وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ زُهَيْرٍ عَنْ أَبِي إِسْحَاقَ وَقَالَ فِي حَدِيثِهِ مِنْ رِوَايَةِ عُثْمَانَ بْنِ عُمَرَ فَلَمَّا دَنَا دَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَاخَ فَرَسُهُ فِي الأَرْضِ إِلَى بَطْنِهِ وَوَثَبَ عَنْهُ وَقَالَ يَا مُحَمَّدُ قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُخَلِّصَنِي مِمَّا أَنَا فِيهِ وَلَكَ عَلَىَّ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِي وَهَذِهِ كِنَانَتِي فَخُذْ سَهْمًا مِنْهَا فَإِنَّكَ سَتَمُرُّ عَلَى إِبِلِي وَغِلْمَانِي بِمَكَانِ كَذَا وَكَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ قَالَ ‏”‏ لاَ حَاجَةَ لِي فِي إِبِلِكَ ‏”‏ ‏.‏ فَقَدِمْنَا الْمَدِينَةَ لَيْلاً فَتَنَازَعُوا أَيُّهُمْ يَنْزِلُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَنْزِلُ عَلَى بَنِي النَّجَّارِ أَخْوَالِ عَبْدِ الْمُطَّلِبِ أُكْرِمُهُمْ بِذَلِكَ ‏”‏ ‏.‏ فَصَعِدَ الرِّجَالُ وَالنِّسَاءُ فَوْقَ الْبُيُوتِ وَتَفَرَّقَ الْغِلْمَانُ وَالْخَدَمُ فِي الطُّرُقِ يُنَادُونَ يَا مُحَمَّدُ يَا رَسُولَ اللَّهِ يَا مُحَمَّدُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏

அபூபக்ரு (ரலி), என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ்) அவர்களது வீட்டிற்கு வந்து, அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகச் சேணத்தை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிடம், “இதை என் வீடுவரை சுமந்துவர உங்கள் மகனை என்னுடன் அனுப்புங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

என் தந்தை என்னிடம், “இதைச் சுமந்து செல்” என்று சொன்னார்கள். அவ்வாறே அதை நான் சுமந்து சென்றேன். அபூபக்ரு (ரலி) அவர்களுடன் அதன் விலையைப் பெற்றுக்கொள்வதற்காக என் தந்தையும் வந்தார்கள்.

அப்போது அபூபக்ரு (ரலி) அவர்களிடம் என் தந்தை, “அபூபக்ரே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத்) சென்றபோது, இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என்பதை எனக்கு அறிவியுங்கள்?” என்று கேட்டார்கள். அப்போது அபூபக்ரு (ரலி) கூறினார்கள்:

ஆம் (அறிவிக்கிறேன்): நாங்கள் (மூன்று நாள்கள் ’ஸவ்ரு’க் குகையில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறி) அந்த இரவு முழுவதும் பயணம் செய்து, (அடுத்த நாளின்) நண்பகல் நேரமும் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் தொடாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. நாங்கள் அங்கு இறங்கினோம்.

நான் அந்தப் பாறையை நோக்கிச் சென்று என் கையால் ஓரிடத்தை, அதன் நிழலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறங்குவதற்காகச் சமப்படுத்தினேன். பிறகு அந்த இடத்தில் ஒரு தோல் விரிப்பை விரித்தேன். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்துக்கொள்வேன்; நீங்கள் (நிம்மதியாக) உறங்குங்கள்” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள்.

அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் அந்தப் பாறையை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். நாங்கள் வந்த நோக்கத்துடனேயே அவனும் (நிழல் தேடி) வந்தான்.

அப்போது அவனை நான் எதிர்கொண்டு, “நீ யாருடைய பணியாள், இளைஞரே?” என்று கேட்டேன். அவன், “இந்த (மக்கா) நகரவாசிகளில் (இன்ன பெயருடைய) ஒருவரின் பணியாள்” என்று பதிலளித்தான். நான் “உன் ஆடுகளிடம் பால் இருக்கின்றதா?” என்று கேட்டேன். அவன் “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தான்.

“அவ்வாறாயின், எனக்காகப் பால் கற(ந்து கொடு)ப்பாயா?” என்று கேட்டேன். அவன் “ஆம் (கொடுப்பேன்)” என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், “மண், முடி, தூசு ஆகிய வற்றிலிருந்து (ஆட்டின்) மடியை உதறி (சுத்தப்படுத்தி)க்கொள்” என்று சொன்னேன்.

((இதைக் கூறும்போது, ”(பராஉ பின் ஆஸிப் (ரலி) தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக்காட்டுவதை நான் கண்டேன்” என அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) தெரிவித்தார்கள்))

பிறகு அந்த இடையன் தன்னிடமிருந்த ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் ஒரு தோல் பாத்திரம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நீர் புகட்டவும், அவர்கள் நீர் அருந்தி, உளுச் செய்யவும் (அது பயன்பட்டது). (அதை நான் என்னுடன் கொண்டுவந்திருந்தேன்)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்,) அவர்களிடம் நான் சென்ற நேரமும் அவர்கள் (தூக்கத்திலிருந்து) எழுந்த நேரமும் ஒன்றாக அமைந்துவிட்டது.

நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) நீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் அதன் அடிப்பகுதி குளிரும்வரை (அதன் அடர்த்தி நீங்கும்வரை) ஊற்றினேன். பிறகு நான், “அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பாலைப் பருகுங்கள்” என்று சொன்னேன். நான் திருப்தியடையும்வரை அவர்கள் பருகினார்கள். பிறகு, “(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (வந்துவிட்டது)” என்று சொன்னேன்.

சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களை (மக்கா இணை வைப்பாளர்களில் ஒருவராயிருந்த) ஸுராக்கா பின் மாலிக் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்.

நாங்கள் பூமியின் ஓர் இறுகிய பகுதியில் இருந்தோம். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளால்) நாம் பின்தொடரப்படுகிறோம்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று சொன்னார்கள். பிறகு ஸுராக்காவுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள். உடனே ஸுராக்காவுடன் அவரது குதிரை தனது வயிறுவரை பூமியில் புதைந்துவிட்டது.

உடனே ஸுராக்கா, “நீங்கள் இருவரும் எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டீர்கள் என்று நான் அறிந்துகொண்டேன். ஆகவே, எனக்காக (இந்தத் தண்டனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; உங்களைத் தேடி வருபவர்களை நான் (திசை)திருப்பி அனுப்பிவிடுவேன் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சி” என்று சொன்னார்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுராக்காவுக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவர் (அந்தத் தண்டனையிலிருந்து) தப்பினார். அப்போதிருந்து அவர் தம்மைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், “உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை” என்று கூறாமல் விடவில்லை. மேலும், (எங்களைத் தேடிவந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பி அனுப்பாமல் அவர் இருக்கவில்லை. அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

அறிவிப்பாளர் : அபூபக்ரு (ரலி) வழியாக பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

இஸ்ராயீல் (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூபக்ரு (ரலி), என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ்) அவர்களிடமிருந்து பதிமூன்று திர்ஹங்களுக்கு ஒட்டகச் சேணமொன்றை விலைக்கு வாங்கினார்கள் …” என்று ஆரம்பமாகின்றது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், உஸ்மான் பின் உமர் (ரஹ்) வழி அறிவிப்பில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது:

ஸுராக்கா (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை) நெருங்கியபோது, அவருக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள். உடனே அவரது குதிரை வயிறுவரை பூமிக்குள் புதைந்துவிட்டது. ஸுராக்கா குதிரையிலிருந்து குதித்து, “முஹம்மதே! இது உங்களுடைய வேலைதான் என்று நான் அறிந்துகொண்டேன். (நான் சிக்கிக்கொண்டிருக்கும்) இந்த நிலையிலிருந்து என்னை விடுவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

எனக்குப் பின்னால் (உங்களைத் தேடிவர) இருப்போரிடமிருந்து உங்களை (காட்டிக் கொடுக்காமல்) நான் மறைத்துவிடுவதற்கு உங்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கின்றேன். இதோ எனது அம்புக் கூடு. இதிலிருந்து நீங்கள்  (என் வாக்குறுதிக்கு அடையாளமாக) அம்பை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எனது ஒட்டகத்தையும் என் அடிமைகளையும் இன்னின்ன இடத்தில் கடந்து செல்வீர்கள். அப்போது உங்களுக்குத் தேவையானதை அதிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது ஒட்டகத்திலிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை” என்று கூறிவிட்டார்கள்.

பிறகு நாங்கள் இரவு நேரத்தில் மதீனாவுக்கு வந்தோம். அப்போது மதீனாவாசிகள், தங்களில் யாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்குவது என்ற விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(என் பாட்டனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் தாய்மாமன்களான ’பனுந் நஜ்ஜார்’ குலத்தாரிடம் நான் தங்கிக்கொள்கிறேன். இதன் மூலம் அவர்களைக் கௌரவப்படுத்துவேன்” என்று கூறினார்கள்.

அப்போது ஆண்களும் பெண்களும் (தம் வீடுகளுக்கு மேலே ஏறி(ப் பார்த்துக்கொண்டிருந்த)னர். சிறுவர்களும் பணியாட்களும் (மதீனாவின்) தெருக்களில் “முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே! முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிக்கொண்டு (மகிழ்ச்சியுடன்) கலைந்து சென்றனர்.