அத்தியாயம்: 1, பாடம்: 1.01, ஹதீஸ் எண்: 3

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ غِيَاثٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ وَحُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالا :‏

لَقِينَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَذَكَرْنَا الْقَدَرَ وَمَا يَقُولُونَ فِيهِ فَاقْتَصَّ الْحَدِيثَ كَنَحْوِ حَدِيثِهِمْ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِيهِ شَيْءٌ مِنْ زِيَادَةٍ وَقَدْ نَقَصَ مِنْهُ شَيْئًا

யஹ்யா பின் யஅமர் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோர், “நாங்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த போது) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தோம். அப்போது விதியைப் பற்றியும் அது குறித்து அவர்கள் (மஅபதும் அவர் ஆதரவாளர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டோம்” என்று கூறிவிட்டு, உமர் (ரலி),  நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளபடி அறிவித்தனர். ஆனால், அதில் சற்றுக் கூடுதல்-குறைவு உண்டு.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 1.01, ஹதீஸ் எண்: 2

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالُوا حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ مَطَرٍ الْوَرَّاقِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ قَالَ :‏

لَمَّا تَكَلَّمَ مَعْبَدٌ بِمَا تَكَلَّمَ بِهِ فِي شَأْنِ الْقَدَرِ أَنْكَرْنَا ذَلِكَ قَالَ فَحَجَجْتُ أَنَا وَحُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيُّ حَجَّةً وَسَاقُوا الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ كَهْمَسٍ وَإِسْنَادِهِ وَفِيهِ بَعْضُ زِيَادَةٍ وَنُقْصَانُ أَحْرُفٍ

“மஅபத் என்பார் விதி தொடர்பாக (மாறுபட்ட) கருத்தைத் தெரிவித்த போது அதை நாங்கள் மறுத்தோம். அது, (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஒரு தடவை ஹஜ்ஜுக்குச் சென்ற காலகட்டமாகும்” என்று கூறிவிட்டு,  தொடர்ந்து மேற்கண்ட (முதலாவது) ஹதீஸை அதன் அறிவிப்பாளர் தொடரோடு முழுமையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதில் சிற்சில சொற்களில் கூடுதல் குறைவு உண்டு.

அத்தியாயம்: 1, பாடம்: 1.01, ஹதீஸ் எண்: 1

حَدَّثَنِي أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ كَهْمَسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ ح و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَهَذَا حَدِيثُهُ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا كَهْمَسٌ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ قَالَ:‏ ‏

كَانَ أَوَّلَ مَنْ قَالَ فِي الْقَدَرِ بِالْبَصْرَةِ مَعْبَدٌ الْجُهَنِيُّ فَانْطَلَقْتُ أَنَا وَحُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيُّ حَاجَّيْنِ أَوْ مُعْتَمِرَيْنِ فَقُلْنَا لَوْ لَقِينَا أَحَدًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْنَاهُ عَمَّا يَقُولُ هَؤُلاءِ فِي الْقَدَرِ فَوُفِّقَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ الْخَطَّابِ دَاخِلا الْمَسْجِدَ فَاكْتَنَفْتُهُ أَنَا وَصَاحِبِي أَحَدُنَا عَنْ يَمِينِهِ وَالآخَرُ عَنْ شِمَالِهِ فَظَنَنْتُ أَنَّ صَاحِبِي سَيَكِلُ الْكَلامَ إِلَيَّ فَقُلْتُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّهُ قَدْ ظَهَرَ قِبَلَنَا نَاسٌ يَقْرَءُونَ الْقُرْآنَ وَيَتَقَفَّرُونَ الْعِلْمَ وَذَكَرَ مِنْ شَأْنِهِمْ وَأَنَّهُمْ يَزْعُمُونَ أَنْ لا قَدَرَ وَأَنَّ الأمْرَ أُنُفٌ قَالَ فَإِذَا لَقِيتَ أُولَئِكَ فَأَخْبِرْهُمْ أَنِّي بَرِيءٌ مِنْهُمْ وَأَنَّهُمْ بُرَآءُ مِنِّي وَالَّذِي يَحْلِفُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَوْ أَنَّ لأحَدِهِمْ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فَأَنْفَقَهُ مَا قَبِلَ اللَّهُ مِنْهُ حَتَّى يُؤْمِنَ بِالْقَدَرِ ثُمَّ قَالَ حَدَّثَنِي أَبِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعَرِ لا يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ وَقَالَ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنْ الإسْلامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الإسْلامُ أَنْ تَشْهَدَ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتُقِيمَ الصَّلاةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ إِنْ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلا قَالَ صَدَقْتَ قَالَ فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ قَالَ فَأَخْبِرْنِي عَنْ الإيمَانِ قَالَ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ قَالَ صَدَقْتَ قَالَ فَأَخْبِرْنِي عَنْ الإحْسَانِ قَالَ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ قَالَ فَأَخْبِرْنِي عَنْ السَّاعَةِ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ قَالَ فَأَخْبِرْنِي عَنْ أَمَارَتِهَا قَالَ أَنْ تَلِدَ الأمَةُ رَبَّتَهَا وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ قَالَ ثُمَّ انْطَلَقَ فَلَبِثْتُ مَلِيًّا ثُمَّ قَالَ لِي يَا عُمَرُ أَتَدْرِي مَنْ السَّائِلُ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهُ جِبْرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ

பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் ‘ஹஜ்’ அல்லது ‘உம்ரா’ச் செய்வதற்காக(ப்புனித மக்காவுக்கு)ச் சென்றோம். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்” என்று பேசிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்து கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன்: “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்” என அவர்களது(நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, “ஆனால், அவர்கள் ‘விதி’ என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்” என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்: “இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் சத்தியம் செய்யக்கூடிய அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுது மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறிவிடுங்கள்)”.

பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறினார்கள்: “என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கருப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயண அடையாளம் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் எவருக்கும் அவரை(யார் என)த் தெரியவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர், தம் கைகளைத் தம் தொடைகள் மீது வைத்துக் கொண்ட பிறகு, “முஹம்மதே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்),  “இஸ்லாம் என்பது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் உங்களுக்குச் சென்று வர இயலுமெனில் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், “உண்மை உரைத்தீர்கள்” என்றார்.

கேள்வியும் கேட்டுவிட்டு பதிலை உறுதியும் படுத்துகிறாரே என்று அவரைக் குறித்து நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், “ஈமான்(இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி(ஸல்), “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்” என்றுக் கூறினார்கள். அதற்கும் அவர் “உண்மை உரைத்தீர்கள்” என்றார்.

அடுத்து அவர், “இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி(ஸல்), “அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவது (இஹ்ஸான்) ஆகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

அவர், “எனக்குச் சொல்லுங்கள், யுக முடிவு எப்போது?” என்று மேலும் கேட்க, நபி(ஸல்), “வினவுபவரைவிட வினவப்படுபவர் அறிந்தவர் அல்லர்” என்று விடையளித்தார்கள். மேலும் அவர், “மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்), “ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும் காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்திருந்த ஏழை ஆட்டு இடையர்கள், போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.

பிறகு அவர் சென்று விட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்), “உமரே! கேள்வி கேட்டவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்), “அவர்தாம் (வானவர்)’ஜிப்ரீல்’. உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்தார்” என்றுச் சொன்னார்கள்”.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)


குறிப்பு:

நபித் தோழர்களும் அவர்களுக்குப் பின்வந்தோரும் இந்த முதல் ஹதீஸில் இடம் பெற்றாலும் மூல நிகழ்வில் நேரடித் தொடர்புடையவரும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்ற நபித் தோழருமான உமர் (ரலி) இந்த ஹதீஸை அறிவிப்பதால் இதன் மூல அறிவிப்பாளரான உமர் (ரலி) அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் என இங்குக் குறிப்பிடப்படுகின்றார்.