و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ قَالَ
سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي نَاسٍ مَعِي قَالَ أَهْلَلْنَا أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ خَالِصًا وَحْدَهُ قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ فَقَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُبْحَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ فَأَمَرَنَا أَنْ نَحِلَّ قَالَ عَطَاءٌ قَالَ حِلُّوا وَأَصِيبُوا النِّسَاءَ قَالَ عَطَاءٌ وَلَمْ يَعْزِمْ عَلَيْهِمْ وَلَكِنْ أَحَلَّهُنَّ لَهُمْ فَقُلْنَا لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلَّا خَمْسٌ أَمَرَنَا أَنْ نُفْضِيَ إِلَى نِسَائِنَا فَنَأْتِيَ عرَفَةَ تَقْطُرُ مَذَاكِيرُنَا الْمَنِيَّ قَالَ يَقُولُ جَابِرٌ بِيَدِهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى قَوْلِهِ بِيَدِهِ يُحَرِّكُهَا قَالَ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا فَقَالَ قَدْ عَلِمْتُمْ أَنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وَأَصْدَقُكُمْ وَأَبَرُّكُمْ وَلَوْلَا هَدْيِي لَحَلَلْتُ كَمَا تَحِلُّونَ وَلَوْ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ لَمْ أَسُقْ الْهَدْيَ فَحِلُّوا فَحَلَلْنَا وَسَمِعْنَا وَأَطَعْنَا قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ فَقَدِمَ عَلِيٌّ مِنْ سِعَايَتِهِ فَقَالَ بِمَ أَهْلَلْتَ قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا قَالَ وَأَهْدَى لَهُ عَلِيٌّ هَدْيًا فَقَالَ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ يَا رَسُولَ اللَّهِ أَلِعَامِنَا هَذَا أَمْ لِأَبَدٍ فَقَالَ لِأَبَدٍ
நான் மக்கள் சிலருடன் இருந்தபோது, “முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் தனியாக ஹஜ்ஜுக்காக மட்டும் முஹ்ரிமாகி ‘தல்பியா’ சொன்னோம். நபி (ஸல்) துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (ஹஜ்ஜுக்கு முஹ்ரிமானவர்களாக) வந்தார்கள். அப்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள்:
“இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (உங்கள்) மனைவியருடன் கூடி மகிழுங்கள்” என்றார்கள் எனும் தகவலை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூற நான் கேட்டேன். ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடுவதை நபி (ஸல்) கட்டாயமாக்க வில்லை. மாறாக, அதை அனுமதியாகக் கூறினார்கள் என்றே நான் கருதுகின்றேன்.
அப்போது நாங்கள், “நமக்கும் அரஃபாவுக்குமிடையே ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாம் நம் மனைவியருடன் கூடி மகிழ நபி (ஸல்) உத்தரவிடுகிறார்களே! நம் இன உறுப்புகளில் இந்திரியத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அரஃபாவுக்குச் செல்வதா?” என்று (வியப்புடன்) பேசிக் கொண்டோம்.
இதைக் கூறியபோது ஜாபிர் (ரலி) தமது கையை அசைத்து சைகை செய்து காட்டியதை இப்போதும் என் மனக்கண்களால் நான் காண்கின்றேன்.
நாங்கள் பேசிக்கொண்டதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) எங்களிடையே எழுந்து, “நான் உங்களையெல்லாம்விட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவனும், மிகவும் உண்மையானவனும், அதிகமாக நன்மை புரிபவனும் ஆவேன் என்பதை நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால், நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதைப் போன்று நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்.
(ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராச் செய்யலாம் என) நான் பின்னர் அறிந்ததை முன்னரே அறிந்திருந்தால், எனது பலிப் பிராணியை நான் கொண்டு வந்திருக்கமாட்டேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்!” என்றார்கள். நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்.
அப்போது (யமன் நாட்டில்) ஸகாத் வசூலிக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அலீ (ரலி) (ஹஜ்ஜுக்கு) வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்), “நீர் எதற்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னீர்?” என்று கேட்டார்கள். அலீ (ரலி), “நபி (ஸல்) எதற்காக முஹ்ரிமாகியுள்ளாரோ அதற்காகவே முஹ்ரிமாகியுள்ளேன்” என்றார்கள்.
நபி (ஸல்), “நீர் இஹ்ராமிலேயே நீடித்து, (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுவீராக!” என்று கூறினார்கள். அலீ (ரலி) நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்திருந்தார்கள். அப்போது ஸுராக்கா பின் மாலிக் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளும் இச்சலுகை) இவ்வாண்டிற்கு மட்டுமா? எல்லா ஆண்டுக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “(இனி வரும்) எல்லா ஆண்டுகளுக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)