அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2134

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِيٍّ الْقَيْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هِشَامٍ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَجْعَلَهَا عُمْرَةً وَنَحِلَّ قَالَ وَكَانَ مَعَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً

நாங்கள் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமானவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவுக்கு) வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொண்டு, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு உத்தரவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பலிப் பிராணி இருந்ததால் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ள அவர்களால் இயலவில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2133

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ نَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏قَدِمْتُ ‏ ‏مَكَّةَ ‏ ‏مُتَمَتِّعًا ‏ ‏بِعُمْرَةٍ قَبْلَ ‏ ‏التَّرْوِيَةِ ‏ ‏بِأَرْبَعَةِ أَيَّامٍ فَقَالَ النَّاسُ تَصِيرُ حَجَّتُكَ الْآنَ مَكِّيَّةً فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏فَاسْتَفْتَيْتُهُ ‏ ‏فَقَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّهُ حَجَّ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مَعَهُ وَقَدْ ‏ ‏أَهَلُّوا ‏ ‏بِالْحَجِّ ‏ ‏مُفْرَدًا ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ فَطُوفُوا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَقَصِّرُوا وَأَقِيمُوا حَلَالًا حَتَّى إِذَا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏فَأَهِلُّوا ‏ ‏بِالْحَجِّ وَاجْعَلُوا الَّتِي قَدِمْتُمْ بِهَا ‏ ‏مُتْعَةً ‏ ‏قَالُوا كَيْفَ نَجْعَلُهَا ‏ ‏مُتْعَةً ‏ ‏وَقَدْ سَمَّيْنَا الْحَجَّ قَالَ افْعَلُوا مَا آمُرُكُمْ بِهِ فَإِنِّي لَوْلَا أَنِّي سُقْتُ ‏ ‏الْهَدْيَ ‏ ‏لَفَعَلْتُ مِثْلَ الَّذِي أَمَرْتُكُمْ بِهِ وَلَكِنْ لَا يَحِلُّ مِنِّي حَرَامٌ ” ‏حَتَّى يَبْلُغَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَحِلَّهُ “‏ ‏‏فَفَعَلُوا

நான் துல்ஹஜ் பிறை எட்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்னால் உம்ராவிற்குப் பின் ஹஜ் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். அப்போது மக்கள், “(இப்படி உம்ராவிற்குப் பின் ஹஜ் செய்தால்) உமது ஹஜ் தற்போது மக்காவாசிகளின் ஹஜ்ஜாக மாறிவிடுகிறது (குறைந்த நன்மையே உமக்குக் கிடைக்கும்)” என்று கூறினர். நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது தொடர்பாக விளக்கம் கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்ஸாரி (ரலி) என்னிடம் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்த ஆண்டில் நானும் அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். அப்போது (அவர்களுடன் வந்த) மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்கு மட்டும் முஹ்ரிமாகி இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் தோழர்களிடம்), “நீங்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா-மர்வா இடையே ஓடிவிட்டு, தலைமுடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்னால் (ஹஜ்ஜுக்கு எனச்) செய்துவந்த இஹ்ராமை (உம்ராவை நிறைவு செய்து ஹஜ்ஜுக்குச் செய்யும்) ‘தமத்துஉ’ ஆக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ் எனக் குறிப்பிட்ட இஹ்ராமை எவ்வாறு உம்ராவாக ஆக்கிக் கொள்வது?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் கட்டளை இடுவதைச் செய்யுங்கள். ஏனெனில், நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வரவில்லையாயின், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்றே நானும் செய்திருப்பேன். பலிப் பிராணி(யைக் கொண்டுவந்ததால் அது) உரிய இடத்தை அடைவதற்கு முன் (பலியிடும்வரை) நான் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது (2:196)” என்றார்கள். உடனே தோழர்கள் அவ்வாறே செய்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூஷிஹாப் மூஸா பின் நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2132

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏أَهْلَلْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏أَمَرَنَا أَنْ نَحِلَّ وَنَجْعَلَهَا عُمْرَةً فَكَبُرَ ذَلِكَ عَلَيْنَا وَضَاقَتْ بِهِ صُدُورُنَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَا نَدْرِي أَشَيْءٌ بَلَغَهُ مِنْ السَّمَاءِ أَمْ شَيْءٌ مِنْ قِبَلِ النَّاسِ فَقَالَ أَيُّهَا النَّاسُ ‏ ‏أَحِلُّوا فَلَوْلَا ‏ ‏الْهَدْيُ ‏ ‏الَّذِي مَعِي فَعَلْتُ كَمَا فَعَلْتُمْ قَالَ فَأَحْلَلْنَا حَتَّى ‏ ‏وَطِئْنَا ‏ ‏النِّسَاءَ وَفَعَلْنَا مَا يَفْعَلُ الْحَلَالُ حَتَّى إِذَا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏وَجَعَلْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏بِظَهْرٍ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அது எங்களுக்குச் சிரமத்தையும் மன வேதனையும் அளித்தது.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களுக்கு வானிலிருந்து ஏதேனும் செய்தி எட்டியதா, அல்லது மக்களின் தரப்பிலிருந்து போய்ச் சேர்ந்ததா என்று எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில் அவர்கள், “மக்களே! நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். என்னுடன் பலிப் பிராணி இருந்திராவிட்டால் நீங்கள் செய்ததைப் போன்றே நானும் செய்திருப்பேன்” என்றார்கள்.

ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; மனைவியருடன் கூடி மகிழ்ந்தோம். (சாதாரணமாக) இஹ்ராமிலிருந்து விடுபட்டவர் செய்வதையெல்லாம் செய்தோம். துல் ஹஜ் எட்டாவது நாளானபோது, மக்காவிலிருந்து (மினாவை நோக்கிப்) புறப்படும் வேளையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2131

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فِي نَاسٍ مَعِي قَالَ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏أَصْحَابَ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ خَالِصًا وَحْدَهُ قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَقَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صُبْحَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ فَأَمَرَنَا أَنْ نَحِلَّ قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ حِلُّوا وَأَصِيبُوا النِّسَاءَ قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏وَلَمْ يَعْزِمْ ‏ ‏عَلَيْهِمْ وَلَكِنْ أَحَلَّهُنَّ لَهُمْ فَقُلْنَا لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏إِلَّا خَمْسٌ أَمَرَنَا أَنْ ‏ ‏نُفْضِيَ إِلَى نِسَائِنَا ‏ ‏فَنَأْتِيَ ‏ ‏عرَفَةَ ‏ ‏تَقْطُرُ ‏ ‏مَذَاكِيرُنَا الْمَنِيَّ قَالَ يَقُولُ ‏ ‏جَابِرٌ ‏ ‏بِيَدِهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى قَوْلِهِ بِيَدِهِ يُحَرِّكُهَا قَالَ فَقَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِينَا فَقَالَ قَدْ عَلِمْتُمْ ‏ ‏أَنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وَأَصْدَقُكُمْ وَأَبَرُّكُمْ وَلَوْلَا ‏ ‏هَدْيِي ‏ ‏لَحَلَلْتُ كَمَا تَحِلُّونَ وَلَوْ ‏ ‏اسْتَقْبَلْتُ ‏ ‏مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ لَمْ أَسُقْ ‏ ‏الْهَدْيَ ‏ ‏فَحِلُّوا فَحَلَلْنَا وَسَمِعْنَا وَأَطَعْنَا قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَقَدِمَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏مِنْ ‏ ‏سِعَايَتِهِ ‏ ‏فَقَالَ بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَهْدِ ‏ ‏وَامْكُثْ حَرَامًا قَالَ وَأَهْدَى لَهُ ‏ ‏عَلِيٌّ ‏ ‏هَدْيًا ‏ ‏فَقَالَ ‏ ‏سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَلِعَامِنَا هَذَا أَمْ لِأَبَدٍ فَقَالَ لِأَبَدٍ

நான் மக்கள் சிலருடன் இருந்தபோது, “முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் தனியாக ஹஜ்ஜுக்காக மட்டும் முஹ்ரிமாகி ‘தல்பியா’ சொன்னோம். நபி (ஸல்) துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (ஹஜ்ஜுக்கு முஹ்ரிமானவர்களாக) வந்தார்கள். அப்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள்:

“இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (உங்கள்) மனைவியருடன் கூடி மகிழுங்கள்” என்றார்கள் எனும் தகவலை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூற நான் கேட்டேன். ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடுவதை நபி (ஸல்) கட்டாயமாக்க வில்லை. மாறாக, அதை அனுமதியாகக் கூறினார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

அப்போது நாங்கள், “நமக்கும் அரஃபாவுக்குமிடையே ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாம் நம் மனைவியருடன் கூடி மகிழ நபி (ஸல்) உத்தரவிடுகிறார்களே! நம் இன உறுப்புகளில் இந்திரியத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அரஃபாவுக்குச் செல்வதா?” என்று (வியப்புடன்) பேசிக் கொண்டோம்.

இதைக் கூறியபோது ஜாபிர் (ரலி) தமது கையை அசைத்து சைகை செய்து காட்டியதை இப்போதும் என் மனக்கண்களால் நான் காண்கின்றேன்.

நாங்கள் பேசிக்கொண்டதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) எங்களிடையே எழுந்து, “நான் உங்களையெல்லாம்விட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவனும், மிகவும் உண்மையானவனும், அதிகமாக நன்மை புரிபவனும் ஆவேன் என்பதை நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால், நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதைப் போன்று நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்.

(ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராச் செய்யலாம் என) நான் பின்னர் அறிந்ததை முன்னரே அறிந்திருந்தால், எனது பலிப் பிராணியை நான் கொண்டு வந்திருக்கமாட்டேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்!” என்றார்கள். நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்.

அப்போது (யமன் நாட்டில்) ஸகாத் வசூலிக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அலீ (ரலி) (ஹஜ்ஜுக்கு) வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்), “நீர் எதற்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னீர்?” என்று கேட்டார்கள். அலீ (ரலி), “நபி (ஸல்) எதற்காக முஹ்ரிமாகியுள்ளாரோ அதற்காகவே முஹ்ரிமாகியுள்ளேன்” என்றார்கள்.

நபி (ஸல்), “நீர் இஹ்ராமிலேயே நீடித்து, (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுவீராக!” என்று கூறினார்கள். அலீ (ரலி) நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்திருந்தார்கள். அப்போது ஸுராக்கா பின் மாலிக் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளும் இச்சலுகை) இவ்வாண்டிற்கு மட்டுமா? எல்லா ஆண்டுக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “(இனி வரும்) எல்லா ஆண்டுகளுக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2130

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏

‏لَمْ يَطُفْ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا أَصْحَابُهُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏إِلَّا طَوَافًا وَاحِدًا ‏

‏زَادَ فِي حَدِيثِ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏طَوَافَهُ الْأَوَّلَ

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) முஹ்ரிமாகி இருந்ததால் இரண்டுக்கும் சேர்த்து) ஒரேயொரு தடவையே தவிர, ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி (ஸயீ) வரவில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு: முஹம்மது பின் பக்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் “அவர்கள் ஆரம்பத்தில் சுற்றிவந்த (ஒரேயொரு தடவையே தவிர)” என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2129

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏أَمَرَنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَحْلَلْنَا أَنْ نُحْرِمَ إِذَا تَوَجَّهْنَا إِلَى ‏ ‏مِنًى ‏ ‏قَالَ ‏ ‏فَأَهْلَلْنَا ‏ ‏مِنْ ‏ ‏الْأَبْطَحِ

நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (துல்ஹஜ் எட்டாவது நாளில்) மினாவை நோக்கிச் செல்லும் போது (ஹஜ்ஜுக்காக) முஹ்ரிமாகி, தல்பியா சொல்லுமாறு நபி (ஸல்) உத்தரவிட்டார்கள். எனவே, நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘அல்அப்த்தஹ்’ எனுமிடத்தில் (ஹஜ்ஜுக்காக) முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2128

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ مَعَنَا النِّسَاءُ وَالْوِلْدَانُ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏طُفْنَا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالمَرْوَةِ ‏ ‏فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلْيَحْلِلْ قَالَ قُلْنَا أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ قَالَ فَأَتَيْنَا النِّسَاءَ وَلَبِسْنَا الثِّيَابَ وَمَسِسْنَا الطِّيبَ فَلَمَّا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ وَكَفَانَا الطَّوَافُ الْأَوَّلُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي ‏ ‏بَدَنَةٍ

ஹஜ்ஜுக்காக முஹ்ரிம் ஆகி, ‘தல்பியா’ சொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே (ஸயீ) ஓடினோம்.

அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு(ஹலால் ஆகி)க் கொள்ளட்டும்” என்றார்கள். நாங்கள், “எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

ஆகவே, நாங்கள் மனைவியரிடம் கூடி மகிழ்தோம்; (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக் கொண்டோம். துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்தபோது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து முஹ்ரிமாகியிருந்த) நாங்கள் ஏற்கெனவே ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடியதே எங்களுக்குப் போதுமானதாக அமைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2127

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏أَقْبَلْنَا مُهِلِّينَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِحَجٍّ مُفْرَدٍ وَأَقْبَلَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏بِعُمْرَةٍ حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِسَرِفَ ‏ ‏عَرَكَتْ ‏ ‏حَتَّى إِذَا قَدِمْنَا طُفْنَا ‏ ‏بِالْكَعْبَةِ ‏ ‏وَالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يَحِلَّ ‏ ‏مِنَّا مَنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏قَالَ فَقُلْنَا حِلُّ مَاذَا قَالَ الْحِلُّ كُلُّهُ فَوَاقَعْنَا النِّسَاءَ وَتَطَيَّبْنَا بِالطِّيبِ وَلَبِسْنَا ثِيَابَنَا وَلَيْسَ بَيْنَنَا وَبَيْنَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏إِلَّا أَرْبَعُ لَيَالٍ ثُمَّ أَهْلَلْنَا ‏ ‏يَوْمَ التَّرْوِيَةِ ‏ ‏ثُمَّ دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَوَجَدَهَا تَبْكِي فَقَالَ مَا شَأْنُكِ قَالَتْ شَأْنِي أَنِّي قَدْ حِضْتُ وَقَدْ ‏ ‏حَلَّ النَّاسُ ‏ ‏وَلَمْ ‏ ‏أَحْلِلْ ‏ ‏وَلَمْ أَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَالنَّاسُ يَذْهَبُونَ إِلَى الْحَجِّ الْآنَ فَقَالَ ‏ ‏إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ ‏ ‏آدَمَ ‏ ‏فَاغْتَسِلِي ثُمَّ ‏ ‏أَهِلِّي بِالْحَجِّ ‏ ‏فَفَعَلَتْ ‏ ‏وَوَقَفَتْ الْمَوَاقِفَ ‏ ‏حَتَّى إِذَا طَهَرَتْ طَافَتْ ‏ ‏بِالْكَعْبَةِ ‏ ‏وَالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ قَالَ قَدْ حَلَلْتِ مِنْ حَجِّكِ وَعُمْرَتِكِ جَمِيعًا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ فِي نَفْسِي أَنِّي لَمْ أَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى حَجَجْتُ قَالَ فَاذْهَبْ بِهَا يَا ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ ‏ ‏فَأَعْمِرْهَا مِنْ ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏وَذَلِكَ ‏ ‏لَيْلَةَ ‏ ‏الْحَصْبَةِ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏ ‏دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏وَهِيَ تَبْكِي فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏إِلَى آخِرِهِ وَلَمْ يَذْكُرْ مَا قَبْلَ هَذَا مِنْ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏مَطَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فِي حَجَّةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَهَلَّتْ ‏ ‏بِعُمْرَةٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏وَزَادَ فِي الْحَدِيثِ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلًا ‏ ‏سَهْلًا ‏ ‏إِذَا هَوِيَتْ الشَّيْءَ ‏ ‏تَابَعَهَا ‏ ‏عَلَيْهِ فَأَرْسَلَهَا مَعَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏فَأَهَلَّتْ ‏ ‏بِعُمْرَةٍ مِنْ ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏قَالَ ‏ ‏مَطَرٌ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏فَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِذَا حَجَّتْ صَنَعَتْ كَمَا صَنَعَتْ مَعَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் தல்பியா கூறியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவை நோக்கி) வந்தோம். ஆயிஷா (ரலி) உம்ராவிற்காக (முஹ்ரிமாகி) வந்தார்கள். நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘ஸரிஃப்’ எனுமிடத்திற்கு வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் இறையில்லம் கஅபா, ஸஃபா-மர்வா ஆகியவற்றைச் சுற்றினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம், பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.

அப்போது நாங்கள், “(இஹ்ராமிலிருந்து விடுபட்டால் எங்களுக்கு) எதுவெல்லாம் அனுமதிக்கப் பட்டுள்ளது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அனைத்துமே அனுமதிக்கப்படும்” என்றார்கள். ஆகவே, நாங்கள் (எங்கள்) மனைவியருடன் கூடி மகிழ்ந்தோம்; நறுமணம் பூசிக்கொண்டோம்; (வழக்கமான) எங்கள் ஆடைகளை அணிந்துகொண்டோம்.

அன்றைய தினத்திற்கும் அரஃபாவுக்குமிடையே நான்கு இரவுகளே இருந்தன. பின்னர் நாங்கள் ‘தர்வியா’ (துல்ஹஜ் எட்டாம்) நாளில் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது, “உனது பிரச்சினை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “எனது பிரச்சினை என்னவென்றால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருக்க, நான் மட்டும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவுமில்லை. இப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகப் போய்க் கொண்டிருக்கின்றனர்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இ(ந்த மாதவிடாயான)து, ஆதமின் பெண்மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கியதாகும். ஆகவே, நீ குளித்த பின்னர் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி ‘தல்பியா’ சொல்லிக்கொள்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு, தங்க வேண்டிய (புனித) இடங்களில் தங்கினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவையும், ஸஃபா-மர்வாவையும் சுற்றினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ உனது ஹஜ்ஜிலிருந்தும் உம்ராவிலிருந்தும் விடுபட்டு விட்டாய்” என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நான் (உம்ராவுக்காக) இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வராமலேயே ஹஜ் செய்து முடித்துவிட்டேனே எனக் கவலைப்படுகிறேன்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (என் சகோதரரிடம்) “அப்துர் ரஹ்மானே! நீ இவரை ‘தன்யீமி’ற்கு அழைத்துச் சென்று உம்ராச் செய்யவைப்பாயாக!” என்றார்கள். அவர்கள் ‘முஹஸ்ஸபி’ல் தங்கியிருந்த இரவில் இது நடந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்புகள்: இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அழுது கொண்டிருந்தார்கள்…” என்பதிலிருந்து தொடங்குகிறது.

முஆத் இப்னு ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) செய்த ஹஜ்ஜின்போது, ஆயிஷா (ரலி), உம்ராவிற்காக முஹ்ரிமாகினார்கள் …” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. மேலும் அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இதமாக நடந்து கொள்ளும் மனிதராக இருந்தார்கள். ஆயிஷா (ரலி) ஒன்றை ஆசைப்பட்டபோது, அவரது வழியிலேயே அவரை விட்டுவிட்டார்கள். அதனால்தான், அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களை ‘தன்யீமி’ற்கு அனுப்பி, உம்ராவிற்காக தல்பியா கூறச் சொன்னார்கள்” என அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது. மேலும், “… எனவே, ஆயிஷா (ரலி) ஹஜ் செய்யும்போது, நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் செய்ததைப் போன்றே செய்வார்கள்” என்று அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2126

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏عَمْرُو بْنُ أَوْسٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَهُ أَنْ يُرْدِفَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَيُعْمِرَهَا مِنْ ‏ ‏التَّنْعِيمِ

நபி (ஸல்) என்னிடம் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களை எனது வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்காரவைத்து (அழைத்துச் சென்று) ‘தன்யீமி’ல் உம்ராவுக்கு தல்பியா கூறுமாறு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2125

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ ‏ ‏حَدَّثَتْنَا ‏ ‏صَفِيَّةُ بِنْتُ شَيْبَةَ ‏ ‏قَالَتْ ‏

‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَيَرْجِعُ النَّاسُ بِأَجْرَيْنِ وَأَرْجِعُ بِأَجْرٍ ‏ ‏فَأَمَرَ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏أَنْ يَنْطَلِقَ بِهَا إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏قَالَتْ فَأَرْدَفَنِي خَلْفَهُ عَلَى جَمَلٍ لَهُ قَالَتْ فَجَعَلْتُ أَرْفَعُ ‏ ‏خِمَارِي ‏ ‏أَحْسُرُهُ ‏ ‏عَنْ عُنُقِي فَيَضْرِبُ رِجْلِي بِعِلَّةِ الرَّاحِلَةِ قُلْتُ لَهُ وَهَلْ ‏ ‏تَرَى مِنْ أَحَدٍ قَالَتْ فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ ثُمَّ أَقْبَلْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِالْحَصْبَةِ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரு நற்பலன்களுடன் திரும்பிச் செல்ல, நான் மட்டும் (ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றி, அதற்குரிய) ஒரேயொரு நற்பலனுடன் திரும்பிச் செல்வதா?” என்று கேட்டேன்.

எனவே, நபி (ஸல்) (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களிடம் என்னைத் ‘தன்யீமு’க்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அவர் என்னைத் தமது ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்(டு, தன்யீமை நோக்கிப் பயணம் மேற்கொண்)டார்.

அப்போது நான் எனது முகத்திரையை உயர்த்தி, கழுத்து வழியாக அதைக் கழற்றலானேன். உடனே அவர் தமது ஒட்டகத்தை அடிப்பதைப் போல எனது காலில் அடித்தார். நான் அவரிடம், “எவரேனும் என்னைப் பார்க்கின்றனரா?” என்று கேட்டேன். பிறகு நான் (தன்யீமில்) உம்ராவிற்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னேன். (உம்ரா முடிந்த பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்துசேர்ந்தோம். அப்போது அவர்கள் ‘முஹஸ்ஸபி’ல் தங்கியிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)