و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ مُجَاهِدٍ قَالَ
دَخَلْتُ أَنَا وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ الْمَسْجِدَ فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ جَالِسٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ وَالنَّاسُ يُصَلُّونَ الضُّحَى فِي الْمَسْجِدِ فَسَأَلْنَاهُ عَنْ صَلَاتِهِمْ فَقَالَ بِدْعَةٌ فَقَالَ لَهُ عُرْوَةُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ كَمْ اعْتَمَرَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَرْبَعَ عُمَرٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ فَكَرِهْنَا أَنْ نُكَذِّبَهُ وَنَرُدَّ عَلَيْهِ وَسَمِعْنَا اسْتِنَانَ عَائِشَةَ فِي الْحُجْرَةِ فَقَالَ عُرْوَةُ أَلَا تَسْمَعِينَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِلَى مَا يَقُولُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فَقَالَتْ وَمَا يَقُولُ قَالَ يَقُولُ اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ عُمَرٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا وَهُوَ مَعَهُ وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ
நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களின் அறைச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் நேர(ளுஹா)த் தொழுகை தொழுது கொண்டிருந்தனர்.
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் அந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “இது புதிய நடைமுறை (பித்அத்)” என்றார்கள். பிறகு அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான்கு உம்ராக்கள் செய்தார்கள்; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள். நாங்கள் அவர்களது சொல்லைப் பொய்யாக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை. இதற்கிடையே அறையினுள் ஆயிஷா (ரலி) பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்), “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் சொல்வதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி), “அவர் என்ன சொல்கின்றார்?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது என்று சொல்கின்றார்” என்று உர்வா (ரஹ்) கூறினார்கள். ஆயிஷா (ரலி), “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்ராச் செய்யும்போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார் (இப்போது மறந்துவிட்டார் போலும்!). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருபோதும் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்ததே இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)
குறிப்பு : ளுஹாத் தொழுகை பித்அத் அல்ல; அதைக் கூட்டாகத் தொழுவது பித்அத் எனும் பொருளில் இப்னு உமர் (ரலி) கூறியுள்ளார்கள்.