حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنَا بَهْزٌ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَا جَمِيعًا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ وَهَذَا حَدِيثُ بَهْزٍ قَالَ:
لَمَّا انْقَضَتْ عِدَّةُ زَيْنَبَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِزَيْدٍ فَاذْكُرْهَا عَلَيَّ قَالَ فَانْطَلَقَ زَيْدٌ حَتَّى أَتَاهَا وَهِيَ تُخَمِّرُ عَجِينَهَا قَالَ فَلَمَّا رَأَيْتُهَا عَظُمَتْ فِي صَدْرِي حَتَّى مَا أَسْتَطِيعُ أَنْ أَنْظُرَ إِلَيْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَهَا فَوَلَّيْتُهَا ظَهْرِي وَنَكَصْتُ عَلَى عَقِبِي فَقُلْتُ يَا زَيْنَبُ أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُكِ قَالَتْ مَا أَنَا بِصَانِعَةٍ شَيْئًا حَتَّى أُوَامِرَ رَبِّي فَقَامَتْ إِلَى مَسْجِدِهَا وَنَزَلَ الْقُرْآنُ وَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ عَلَيْهَا بِغَيْرِ إِذْنٍ قَالَ فَقَالَ وَلَقَدْ رَأَيْتُنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْعَمَنَا الْخُبْزَ وَاللَّحْمَ حِينَ امْتَدَّ النَّهَارُ فَخَرَجَ النَّاسُ وَبَقِيَ رِجَالٌ يَتَحَدَّثُونَ فِي الْبَيْتِ بَعْدَ الطَّعَامِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاتَّبَعْتُهُ فَجَعَلَ يَتَتَبَّعُ حُجَرَ نِسَائِهِ يُسَلِّمُ عَلَيْهِنَّ وَيَقُلْنَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ قَالَ فَمَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ أَنَّ الْقَوْمَ قَدْ خَرَجُوا أَوْ أَخْبَرَنِي قَالَ فَانْطَلَقَ حَتَّى دَخَلَ الْبَيْتَ فَذَهَبْتُ أَدْخُلُ مَعَهُ فَأَلْقَى السِّتْرَ بَيْنِي وَبَيْنَهُ وَنَزَلَ الْحِجَابُ قَالَ وَوُعِظَ الْقَوْمُ بِمَا وُعِظُوا بِهِ
زَادَ ابْنُ رَافِعٍ فِي حَدِيثِهِ لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ إِلَى قَوْلِهِ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنْ الْحَقِّ
ஸைனப் (ரலி) அவர்களுடைய (கணவர் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) மணவிலக்குச் செய்ததையடுத்து) காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைத் (ரலி) அவர்களிடம், “ஸைனபிடம் என்னை(மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள். எனவே, ஸைத் (ரலி) ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.
ஸைத் (ரலி) கூறுகின்றார்கள்:
ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவரை (மணந்துகொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம்.
எனவே, அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, “ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உன்னை மணக்க விரும்புவதை) உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பிவைத்துள்ளார்கள்” என்றேன். அதற்கு அவர், “நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார்.
அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது. (அதில், “(நபியே! ஸைத், தம் மனைவியான ஸைனபை விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், உமக்கு நாம் அவரை மண முடித்து வைத்தோம் என்று அல்லாஹ் அறிவித்தான்.) அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கு வந்து அனுமதி பெறாமலேயே ஸைனபின் இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.
அனஸ் (ரலி) கூறுகின்றார்கள்: பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நண்பகல் வேளையில் எங்களுக்கு ரொட்டியும் இறைச்சியும் (மணவிருந்தாக) உண்ணக் கொடுத்தது எனக்கு நினைவில் உள்ளது.
அப்போது மக்கள் (விருந்து) உண்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். சிலர் மட்டும் உண்ட பின்பும் அவ்வீட்டிலேயே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெளியில் புறப்பட்டுச் சென்றார்கள். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் தம் துணைவியரின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறலானார்கள். அப்போது துணைவியர், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் (புது) மனைவியை எவ்வாறு கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். பிறகு (பேசிக் கொண்டேயிருந்த) மக்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டனர் என்ற செய்தியை நான் அவர்களிடம் தெரிவித்தேனா, அவர்கள் (வஹீ மூலம் அறிந்து) என்னிடம் தெரிவித்தார்களா என்று எனக்குச் சரியாக நினைவில்லை. அந்த வீட்டிற்குச் சென்று நுழைந்தார்கள். அவர்களுடன் நானும் நுழையப் போனேன். அப்போது அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டுவிட்டார்கள். அப்போது ஹிஜாப் பற்றிய இறைவசனமும் அருளப்பெற்று, மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அறிவுரை கிடைத்தது.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
குறிப்பு :
முஹம்மத் பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்குக் காத்து) இருக்க வேண்டாம்” என்று தொடங்கும் (33:53ஆவது) வசனமே ஹிஜாப் பற்றிய அந்த வசனமாகும் என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது.