அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2741

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ ‏ ‏أَخْبَرَهُ ‏

‏أَنَّ ‏ ‏عُوَيْمِرًا الْعَجْلَانِيَّ ‏ ‏جَاءَ إِلَى ‏ ‏عَاصِمِ بْنِ عَدِيٍّ الْأَنْصَارِيِّ ‏ ‏فَقَالَ لَهُ أَرَأَيْتَ يَا ‏ ‏عَاصِمُ ‏ ‏لَوْ أَنَّ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَسَلْ لِي عَنْ ذَلِكَ يَا ‏ ‏عَاصِمُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَرِهَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى ‏ ‏كَبُرَ ‏ ‏عَلَى ‏ ‏عَاصِمٍ ‏ ‏مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا رَجَعَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏إِلَى أَهْلِهِ جَاءَهُ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏عَاصِمُ ‏ ‏مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏لِعُوَيْمِرٍ ‏ ‏لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا قَالَ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏وَاللَّهِ لَا أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا فَأَقْبَلَ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ نَزَلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا قَالَ ‏ ‏سَهْلٌ ‏ ‏فَتَلَاعَنَا ‏ ‏وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا فَرَغَا قَالَ ‏ ‏عُوَيْمِرٌ ‏ ‏كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَكَانَتْ سُنَّةَ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَهْلُ بْنُ سَعْدٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏عُوَيْمِرًا الْأَنْصَارِيَّ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي الْعَجْلَانِ ‏ ‏أَتَى ‏ ‏عَاصِمَ بْنَ عَدِيٍّ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَأَدْرَجَ فِي الْحَدِيثِ قَوْلَهُ ‏ ‏وَكَانَ فِرَاقُهُ إِيَّاهَا بَعْدُ سُنَّةً فِي ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏وَزَادَ فِيهِ قَالَ ‏ ‏سَهْلٌ ‏ ‏فَكَانَتْ حَامِلًا فَكَانَ ابْنُهَا ‏ ‏يُدْعَى ‏ ‏إِلَى أُمِّهِ ثُمَّ جَرَتْ السُّنَّةُ أَنَّهُ يَرِثُهَا وَتَرِثُ مِنْهُ مَا فَرَضَ اللَّهُ لَهَا ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُتَلَاعِنَيْنِ ‏ ‏وَعَنْ السُّنَّةِ فِيهِمَا ‏ ‏عَنْ حَدِيثِ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏أَخِي ‏ ‏بَنِي سَاعِدَةَ ‏ ‏أَنَّ رَجُلًا مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏جَاءَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا وَذَكَرَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَزَادَ فِيهِ ‏ ‏فَتَلَاعَنَا ‏ ‏فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ وَقَالَ فِي الْحَدِيثِ فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَفَارَقَهَا عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاكُمْ التَّفْرِيقُ بَيْنَ كُلِّ ‏ ‏مُتَلَاعِنَيْنِ

உவைமிர் அல்அஜ்லானீ (ரலி), ஆஸிம் பின் அதீ அல்அன்ஸாரி (ரலி) அவர்களிடம் வந்து, “ஆஸிமே! ஒருவன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், பழிவாங்கும் சட்டப்படி (கொலை செய்த) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்? ஆஸிமே! எனக்காக இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) (இது குறித்து)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இத்தகைய) கேள்விகளை விரும்பாமல் அவற்றை அருவருப்பாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குப் பெருத்த மனவேதனை அளித்தன.

ஆஸிம் (ரலி) தம் வீட்டாரிடம் திரும்பிவந்தபோது, அவர்களிடம் உவைமிர் (ரலி) வந்து, “ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) உவைமிரை நோக்கி, “நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (என்னைச் சிக்கலில் மாட்டிவிட்டாய்;) நான் கேட்ட கேள்விகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை” என்றார்கள். அதற்கு உவைமிர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்று,  “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) நீங்கள் (கொலை செய்த) அவனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்துவாரும்” என்றார்கள்.

நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் இருந்தபோது (அவர்கள் வந்து), இருவரும் பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டினர். அவர்கள் லிஆன் செய்து முடித்தபோது, உவைமிர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால், இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி)


குறிப்புகள் :

இஸ்லாமியக் குற்றவியல் சட்டப்படி, விசாரணையின்போது ஏனைய குற்ற நிகழ்வைக் கண்ணால் கண்ட சாட்சிகள் இருவர் மட்டும் போதும். ஆனால், விபச்சாரக் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு வாய்மையுடைய நான்கு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். கண்ணியமான ஒரு பத்தினிப் பெண்ணை, இழிவுபடுத்தும் நோக்கத்துடன் உரிய சாட்சிகள் இல்லாமல் பொய்யாக அவதூறு கூறுபவனுக்குத் தண்டனையாக எண்பது கசையடிகள் கொடுக்கப்படவேண்டும் (அல் குர்ஆன் 24:4).

திருமணமான பெண்ணொருத்தியைப் பிறனொருவருவனுடன் உடலுறவு கொள்வதைக் கண்ணால் காணும் அவளின் கணவன், அக் காட்சிக்குச் சாட்சியாக நான்கு பேரை அழைத்துவந்து காட்டமாட்டான். மாறாக, வழக்கின்போது அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, “நான் இந்தப் பெண்ணின் மீது கூறும் விபச்சாரக் குற்றச்சாட்டு, பொய்யாக இருந்தால், என் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்” என்று நான்கு சாட்சிகளுக்காக நான்கு தடவையும், தனக்காக ஒரு தடவையுமாக மொத்தம் ஐந்து தடவைகள் சுய சாபம் வேண்டுவான்.

குற்றம் சுமத்தப்பட்ட பெண், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தால், அவள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, “என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்” என்று நான்கு சாட்சிகளுக்காக நான்கு தடவையும் தனக்காக ஒரு தடவையுமாக மொத்தம் ஐந்து தடவைகள் சுய சாபம் வேண்டுவாள். இவ்வாறு இருவரும் வேண்டுகின்ற சுய சாபம், ‘லிஆன்’ எனப்படும். அத்துடன் இருவருக்குமான கணவன் – மனைவி உறவு முற்றாக அறுந்துவிடும் (அல் குர்ஆன் 24:5-9).

“இந்நிகழ்வே சுய சாபம் (லிஆன்) வேண்டும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆனது” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் அல்அன்ஸாரி (ரலி),  ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் வந்தார் …” என ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும், அதில் “உவைமிர் (ரலி) தம் மனைவியைவிட்டுப் பிரிந்துகொண்ட நிகழ்வு, அதன்பிறகு பரஸ்பரம் சுய சாபம் (லிஆன்) வேண்டுகின்ற தம்பதியருக்கு முன்மாதிரி ஆயிற்று” என்பது விளக்க இடைச் சேர்ப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும், “லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்ன பெண்ணின் மகன் என்று) அழைக்கப்படலாயிற்று. பின்னர் அப்பெண்ணிடமிருந்து மகனும் மகனிடமிருந்து அப்பெண்ணும் அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது” என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் பனூ ஸாயிதா குலத்தவரான ஸஹ்லு பின் ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அன்ஸாரிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் வேறோர் ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால்…’  என்று கேட்டார்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடருகின்றன.

இந்த அறிவிப்பில், “ … எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்து சுய சாபம் (லிஆன்) வேண்டிக்கொண்டனர். அப்போது அங்கு நானும் இருந்தேன்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும், “(லிஆன் வேண்டுதல் முடிந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிடுவதற்கு முன்பே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) முன்னிலையிலேயே அவளை விட்டும் அவர் பிரிந்துகொண்டார். அப்போது நபி (ஸல்) ‘இதுவே லிஆன் செய்யும் ஒவ்வொரு தம்பதியரைப் பிரித்துவைக்கும் வழிமுறையாகும்’ என்று கூறினார்கள்” என்பதும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: