அத்தியாயம்: 28, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3176

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ – قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ:‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏لاَ تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْ دَمِهَا لأَنَّهُ كَانَ أَوَّلَ مَنْ سَنَّ الْقَتْلَ‏”‏


وَحَدَّثَنَاهُ عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ جَرِيرٍ وَعِيسَى بْنِ يُونُسَ ‏ “‏لأَنَّهُ سَنَّ الْقَتْلَ‏”‏ ‏.‏ لَمْ يَذْكُرَا أَوَّلَ ‏

“அநியாயமாக ஒரு கொலை (உலகில்) நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களின் முதலாவது மகனுக்கு ஒரு பங்கு இருக்கும். ஏனெனில், அவன்தான் கொலையை ஆரம்பித்துவைத்த முதல் மனிதனாவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு

ஜரீர் பின் அப்தில் ஹமீத் மற்றும் ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஏனெனில், அவன்தான் கொலையை ஆரம்பித்துவைத்தவன்” என்று இடம் பெற்றுள்ளது. “முதல் மனிதன்“ என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 28, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3175

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، – وَاللَّفْظُ لأَحْمَدَ – قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:‏

قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ لاَ يَحِلُّ دَمُ رَجُلٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ إِلاَّ ثَلاَثَةُ نَفَرٍ التَّارِكُ الإِسْلاَمَ الْمُفَارِقُ لِلْجَمَاعَةِ أَوِ الْجَمَاعَةَ – شَكَّ فِيهِ أَحْمَدُ – وَالثَّيِّبُ الزَّانِي وَالنَّفْسُ بِالنَّفْسِ”‏ ‏.‏ قَالَ الأَعْمَشُ فَحَدَّثْتُ بِهِ، إِبْرَاهِيمَ فَحَدَّثَنِي عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ بِمِثْلِهِ ‏.‏


وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، وَالْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنِ الأَعْمَشِ، بِالإِسْنَادَيْنِ جَمِيعًا ‏.‏ نَحْوَ حَدِيثِ سُفْيَانَ وَلَمْ يَذْكُرَا فِي الْحَدِيثِ قَوْلَهُ ‏ “‏وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடையே (ஒரு நாள்) நின்று (ஆற்றிய உரையில் பின்வருமாறு) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எவரையும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவர்களில்) மூன்று பேரைத் தவிர:

  1. ஜமாஅத் எனும் கூட்டமைப்பைவிட்டு வெளியேறி இஸ்லாத்தைக் கைவிட்டவன்.
  2. திருமணமாகியும் விபசாரம் செய்தவன்.
  3. ஒருவரைக் கொலை செய்ததற்குப் பகரமாக கொல்லப்பட வேண்டியவன்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

இதே ஹதீஸ், அன்னை ஆயிஷா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ…” எனும் வாசகம் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 28, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3174

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ:‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ الثَّيِّبُ الزَّانِ وَالنَّفْسُ بِالنَّفْسِ وَالتَّارِكُ لِدِينِهِ الْمُفَارِقُ لِلْجَمَاعَةِ‏”‏


حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எவரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை.

அவை:

  1. திருமணமானவன் விபசாரம் செய்வது.
  2. ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது.
  3. “ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமது மார்க்கத்தைக் கைவிட்ட(தேச துரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3173

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ:‏

أَنَّ أُخْتَ الرُّبَيِّعِ أُمَّ حَارِثَةَ، جَرَحَتْ إِنْسَانًا فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”الْقِصَاصَ الْقِصَاصَ‏”‏ ‏.‏ فَقَالَتْ أُمُّ الرَّبِيعِ يَا رَسُولَ اللَّهِ أَيُقْتَصُّ مِنْ فُلاَنَةَ وَاللَّهِ لاَ يُقْتَصُّ مِنْهَا ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”سُبْحَانَ اللَّهِ يَا أُمَّ الرَّبِيعِ الْقِصَاصُ كِتَابُ اللَّهِ‏”‏ ‏.‏ قَالَتْ لاَ وَاللَّهِ لاَ يُقْتَصُّ مِنْهَا أَبَدًا ‏.‏ قَالَ فَمَا زَالَتْ حَتَّى قَبِلُوا الدِّيَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏”‏

ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) ஒருவரை(த் தாக்கி)க் காயப்படுத்திவிட்டார். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்), “பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்கொள்க)” என்று கூறினார்கள்.

அப்போது உம்முர் ரபீஉ (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்” என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி), “அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது” என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின், அதை அல்லாஹ் உண்மையாக்கிவிடுகின்றான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3172

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ قَالَ:‏

غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَزْوَةَ تَبُوكَ – قَالَ وَكَانَ يَعْلَى يَقُولُ تِلْكَ الْغَزْوَةُ أَوْثَقُ عَمَلِي عِنْدِي – فَقَالَ عَطَاءٌ قَالَ صَفْوَانُ قَالَ يَعْلَى كَانَ لِي أَجِيرٌ فَقَاتَلَ إِنْسَانًا فَعَضَّ أَحَدُهُمَا يَدَ الآخَرِ – قَالَ لَقَدْ أَخْبَرَنِي صَفْوَانُ أَيُّهُمَا عَضَّ الآخَرَ – فَانْتَزَعَ الْمَعْضُوضُ يَدَهُ مِنْ فِي الْعَاضِّ فَانْتَزَعَ إِحْدَى ثَنِيَّتَيْهِ فَأَتَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَهْدَرَ ثَنِيَّتَهُ


وَحَدَّثَنَاهُ عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். – என்னைப் பொறுத்தவரை என் செயல்களிலேயே அந்த அறப்போர்தான் என்னிடம் மிகவும் வலுவானதாகும் – என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒருவருடன் சண்டையிட்டார். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரின் கையைக் கடித்துவிட்டார்.

கடிபட்டவர் கடித்தவரின் வாயிலிருந்து தமது கையை இழுத்தார். அப்போது அவருடைய முன்பற்களில் இரண்டில் ஒன்று கழன்று(விழுந்து)விட்டது. பிறகு இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தனர். அப்போது நபி (ஸல்) அவரது முன்பல்லுக்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)


குறிப்பு :

“யஅலா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் அவர்களுடைய மகன் ஸஃப்வான் (ரஹ்), கடித்தவர் யார் என்று என்னிடம் அறிவித்தார்கள் (நான் மறந்துவிட்டேன்) என்று அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) கூறினார்கள்” என மேற்காணும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3171

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى ابْنِ مُنْيَةَ عَنْ أَبِيهِ قَالَ:‏

أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ وَقَدْ عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتَاهُ – يَعْنِي الَّذِي عَضَّهُ – قَالَ فَأَبْطَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ ‏ “‏أَرَدْتَ أَنْ تَقْضَمَهُ كَمَا يَقْضَمُ الْفَحْلُ‏”‏ ‏

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு வழக்குடன்) வந்தார். அவர் மற்றொருவரின் கையைக் கடித்தபோது, (கடிபட்ட) அவர் தமது கையை இழுக்க, கடித்தவரது முன்பற்கள் இரண்டு விழுந்து விட்டன. அப்போது நபி (ஸல்) (இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என) அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். மேலும் “நீ அவரை, கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்க முனைந்தாய்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் முன்யா (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3170

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ:‏

 أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتُهُ أَوْ ثَنَايَاهُ فَاسْتَعْدَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏مَا تَأْمُرُنِي تَأْمُرُنِي أَنْ آمُرَهُ أَنْ يَدَعَ يَدَهُ فِي فِيكَ تَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ ادْفَعْ يَدَكَ حَتَّى يَعَضَّهَا ثُمَّ انْتَزِعْهَا‏”‏ ‏

ஒருவர் மற்றொருவரின் கையைக் கடித்தார். கடிபட்டவர் தமது கையை இழுக்க, (கடித்த) அவருடைய முன்பல் / முன்பற்கள் விழுந்துவிட்டன. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உதவியை நாடினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று நீ கடித்துக் கொண்டிருக்கும்வரை அவர் தமது கையை உனது வாய்க்குள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடச் சொல்கிறாயா? நீ உனது கையை அவர் கடித்து முடிக்கும்வரை அவரது வாய்க்குள் விட்டுவை. பிறகு இழுத்துப் பார் (தெரியும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3169

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ بُدَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى:‏

أَنَّ أَجِيرًا، لِيَعْلَى ابْنِ مُنْيَةَ عَضَّ رَجُلٌ ذِرَاعَهُ فَجَذَبَهَا فَسَقَطَتْ ثَنِيَّتُهُ فَرُفِعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَبْطَلَهَا وَقَالَ ‏ “أَرَدْتَ أَنْ تَقْضَمَهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ‏”‏ ‏

யஅலா பின் முன்யா (ரலி) அவர்களுடைய ஊழியர் ஒருவரின் முன்கையை ஒருவர் கடித்துவிட்டார். ஊழியர் தனது கையை இழுக்க, கடித்தவரது முன்பல் ஒன்று (கழன்று) விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவ்வழக்கை நபியவர்கள் தள்ளுபடி செய்தார்கள். மேலும், “கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று அவரது கையை நீ கடிக்க முனைந்தாய். (எனவே, உனக்கு இழப்பீடு இல்லை)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் முன்யா (ரலி) வழியாக ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3168

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ، – يَعْنِي ابْنَ هِشَامٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ:‏

أَنَّ رَجُلاً، عَضَّ ذِرَاعَ رَجُلٍ فَجَذَبَهُ فَسَقَطَتْ ثَنِيَّتُهُ فَرُفِعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَبْطَلَهُ وَقَالَ ‏ “‏أَرَدْتَ أَنْ تَأْكُلَ لَحْمَهُ‏”‏

ஒருவர், இன்னொருவரின் முன்கையைக் கடித்தார். அவர் தமது கையை இழுக்க, (கடித்த) அவரது முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார்கள். “நீ அவரது இறைச்சியை உண்ணப் பார்த்தாய் (அதனால் அவர் கையை இழுத்தார். எனவே, உனது பல்லுக்கு இழப்பீடு இல்லை)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3167

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ:‏

قَاتَلَ يَعْلَى ابْنُ مُنْيَةَ أَوِ ابْنُ أُمَيَّةَ رَجُلاً فَعَضَّ أَحَدُهُمَا صَاحِبَهُ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ فَنَزَعَ ثَنِيَّتَهُ – وَقَالَ ابْنُ الْمُثَنَّى ثَنِيَّتَيْهِ – فَاخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏أَيَعَضُّ أَحَدُكُمْ كَمَا يَعَضُّ الْفَحْلُ لاَ دِيَةَ لَهُ”‏ ‏‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ يَعْلَى، عَنْ يَعْلَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏

யஅலா பின் முன்யா / உமய்யா (ரலி) அவர்களுக்கும் மற்றொருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.

அப்போது நபி (ஸல்), “உங்களில் எவராவது தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா?  (பல்லிழந்த) இவருக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “கடித்தவரின் முன்பற்கள் இரண்டு விழுந்துவிட்டன” என்று இடம்பெற்றுள்ளது.