அத்தியாயம்: 23, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3031

حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرٍ النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ، الْمُنْكَدِرِ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ:‏ ‏

مَرِضْتُ فَأَتَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ يَعُودَانِي مَاشِيَيْنِ فَأُغْمِيَ عَلَىَّ فَتَوَضَّأَ ثُمَّ صَبَّ عَلَىَّ مِنْ وَضُوئِهِ فَأَفَقْتُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَقْضِي فِي مَالِي فَلَمْ يَرُدَّ عَلَىَّ شَيْئًا حَتَّى نَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ ‏{‏ يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ‏}

நான் நோயுற்றிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி) அவர்களும் என்னை உடல்நலம் விசாரிக்க நடந்தே வந்தனர். அப்போது எனக்கு மயக்கமேற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உளூச் செய்துவிட்டு எஞ்சிய நீரை என்மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்குப் பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான “(நபியே!) உம்மிடம் (“கலாலா’ குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” (4:176) என்று தொடங்கும் வாரிசுரிமை தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

தாய்-தகப்பன் / பாட்டன்-பாட்டி ஆகிய தலை வாரிசுகளோ, மகன்-மகள் / பேரன்-பேத்தி ஆகிய கிளை வாரிசுகளோ இல்லாமல் இறந்தவரின் சொத்துகள், ‘கலாலா சொத்துகள்’ எனப்படும்.

அல்குர்ஆன்:

‘கலாலா’ பற்றிய மார்க்கத் தீர்ப்பை (நபியே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றார்கள். நீர் கூறும், அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான்:

ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு மக்கள் இல்லாமல் ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவருடைய சொத்தில் சரி பாதி பங்கு உண்டு.

இரு சகோதரிகள் இருந்தால், இறந்தவருடைய சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை இருவரும் அடைவார்கள்.

மக்கள் யாரும் இல்லாது ஒரு பெண் இறந்துவிட்டால், அவளுக்கு (ஒரு சகோதரன் இருந்தால்) அவன் அவளுடைய சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்.

அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குரிய பாகங்கள் உண்டு – நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கின்றான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் (4:176ன் கருத்து).