அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 552

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ جَالِسًا مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَأَبِي مُوسَى ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏
‏يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا أَجْنَبَ فَلَمْ يَجِدْ الْمَاءَ شَهْرًا كَيْفَ يَصْنَعُ بِالصَّلَاةِ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَا يَتَيَمَّمُ وَإِنْ لَمْ يَجِدْ الْمَاءَ شَهْرًا فَقَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏فَكَيْفَ بِهَذِهِ الْآيَةِ فِي سُورَةِ ‏ ‏الْمَائِدَةِ ‏ ‏فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا ‏
‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَوْ رُخِّصَ لَهُمْ فِي هَذِهِ الْآيَةِ لَأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَيْهِمْ الْمَاءُ أَنْ يَتَيَمَّمُوا ‏ ‏بِالصَّعِيدِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏أَلَمْ تَسْمَعْ قَوْلَ ‏ ‏عَمَّارٍ ‏ ‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدْ الْمَاءَ فَتَمَرَّغْتُ فِي ‏ ‏الصَّعِيدِ ‏ ‏كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنَّمَا كَانَ ‏ ‏يَكْفِيكَ أَنْ تَقُولَ بِيَدَيْكَ هَكَذَا ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ ضَرْبَةً وَاحِدَةً ثُمَّ مَسَحَ الشِّمَالَ عَلَى الْيَمِينِ وَظَاهِرَ كَفَّيْهِ وَوَجْهَهُ ‏
‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَوَلَمْ تَرَ ‏ ‏عُمَرَ ‏ ‏لَمْ يَقْنَعْ بِقَوْلِ ‏ ‏عَمَّارٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ فَنَفَضَ يَدَيْهِ فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ ‏

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மான்! பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்ட ஒருவருக்கு ஒருமாத காலம்வரை தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எவ்வாறு தொழுவார்?” என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “ஒரு மாத காலம் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் சரியே, அவர் தயம்மும் செய்ய மாட்டார். (அவர் தொழவும் மாட்டார்)” என்று கூறினார்கள். “எனில், அல்மாயிதா அத்தியாயத்தில் வரும் ‘உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்’ எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வது?” என்று அபூ மூஸா (ரலி) கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இந்த வசனத்தின் மூலம் மக்களுக்கு (நெகிழ்ச்சியான) அனுமதி அளிக்கப்பட்டு விடுமானால் தண்ணீர் அவர்களுக்குக் குளிராகத் தெரிந்தால்கூட மண்ணில் தயம்மும் செய்து கொள்ள முயலுவர்” என்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு தேவை கருதி, (படைப்பிரிவொன்றில்) அனுப்பி வைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளியலுக்குப் பகரகாகத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே!’ என்று கூறி, தம் கரங்களால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் தமது இடக்கரத்தால் வலக்கரத்தையும் இரு புறங்கைகளையும் முகத்தையும் தடவிக் காட்டினார்கள்” என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்) சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப் படவில்லையா? என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

“அம்மார் (ரலி) அவர்கள் கூற்றில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பதைத் தாங்கள் அறியவில்லையா?” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அம்மார் (ரலி) வழியாக ஷகீக் பின் சலமா (ரஹ்)

குறிப்பு:

இதே ஹதீஸ் அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள், இப்படிச் செய்திருந்தால் உங்களுக்குப் போதுமானதாகி இருந்திருக்குமே! என்று கூறி விட்டு, தம் கைகளை பூமியில் அடித்து, பின்னர் அவற்றை உதறிவிட்டு, தமது முகத்திலும் முன்கைகளிலும் தடவினார்கள்” என்று ‘முன்கைகள்’ எனும் சொல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

பெருந்துடக்கு என்பது தம்பதியர் உடலுறவு கொள்ளும்போதோ தூக்கத்திலோ விந்து வெளியேறி விடுவதைக் குறிப்பதாகும்.