அத்தியாயம்: 31, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3258

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِيُّ، حَدَّثَنَا النَّضْرُ، – يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الْيَمَامِيَّ – حَدَّثَنَا عِكْرِمَةُ، – وَهُوَ ابْنُ عَمَّارٍ – حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ فَأَصَابَنَا جَهْدٌ حَتَّى هَمَمْنَا أَنْ نَنْحَرَ بَعْضَ ظَهْرِنَا فَأَمَرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فَجَمَعْنَا مَزَاوِدَنَا فَبَسَطْنَا لَهُ نِطَعًا فَاجْتَمَعَ زَادُ الْقَوْمِ عَلَى النِّطَعِ قَالَ فَتَطَاوَلْتُ لأَحْزُرَهُ كَمْ هُوَ فَحَزَرْتُهُ كَرَبْضَةِ الْعَنْزِ وَنَحْنُ أَرْبَعَ عَشْرَةَ مِائَةً قَالَ فَأَكَلْنَا حَتَّى شَبِعْنَا جَمِيعًا ثُمَّ حَشَوْنَا جُرُبَنَا فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ فَهَلْ مِنْ وَضُوءٍ ‏”‏ ‏.‏ قَالَ فَجَاءَ رَجُلٌ بِإِدَاوَةٍ لَهُ فِيهَا نُطْفَةٌ فَأَفْرَغَهَا فِي قَدَحٍ فَتَوَضَّأْنَا كُلُّنَا نُدَغْفِقُهُ دَغْفَقَةً أَرْبَعَ عَشْرَةَ مِائَةً ‏.‏ قَالَ ثُمَّ جَاءَ بَعْدَ ذَلِكَ ثَمَانِيَةٌ فَقَالُوا هَلْ مِنْ طَهُورٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ فَرِغَ الْوَضُوءُ ‏”‏ ‏.‏

நாங்கள் (‘ஹவாஸின்’) போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது எங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, நாங்கள் எங்கள் வாகன ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்க முடிவு செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  எங்களிடமிருந்த (எஞ்சிய) உணவுப் பொருட்களைத் திரட்டும்படி உத்தரவிட்டார்கள்.

நாங்கள் அவ்வாறே செய்தோம். அதற்காக நாங்கள் தோல் விரிப்பு ஒன்றை விரித்துப் போட்டோம். அந்த விரிப்பின் மீது மக்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்தனர். அதில் எந்த அளவு உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளன என்பதை மதிப்பிடுவதற்காக நான் எட்டிப் பார்த்தேன். ஓர் ஆடு படுத்திருக்கும் இடம் அளவுக்கு உணவுப் பொருட்கள் குவிந்திருப்பதாக நான் மதிப்பிட்டேன். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்பும் அளவுக்கு அதிலிருந்து உண்டோம். பிறகு எங்கள் தோல் பைகளிலும் நிரப்பிக்கொண்டோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  (எங்களிடம்), “உளூச் செய்வதற்கு நீர் உள்ளதா?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவர் தமது நீர்க் குவளையைக் கொண்டுவந்தார். அதில் சிறிதளவு நீர் இருந்தது. அவர் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். அந்த நீரில் நாங்கள் அனைவரும் உளூச் செய்தோம். நாங்கள் ஆயிரத்து நானூறு பேரும் தாராளமாக ஊற்றிக் கழுவினோம்.

அதன் பிறகு எட்டுப் பேர் வந்து, “உளூச் செய்வதற்கு நீர் உள்ளதா?” என்று கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  “உளூச் செய்வதற்கான நீர் தீர்ந்துவிட்டது” என்று கூறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அம்ரு பின் அல்அக்வஉ (ரலி)

Share this Hadith: