அத்தியாயம்: 32, பாடம்: 22, ஹதீஸ் எண்: 3315

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ :‏

أَنَّ سَعْدًا، قَالَ وَتَحَجَّرَ كَلْمُهُ لِلْبُرْءِ فَقَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنْ لَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَىَّ أَنْ أُجَاهِدَ فِيكَ مِنْ قَوْمٍ كَذَّبُوا رَسُولَكَ صلى الله عليه وسلم وَأَخْرَجُوهُ اللَّهُمَّ فَإِنْ كَانَ بَقِيَ مِنْ حَرْبِ قُرَيْشٍ شَىْءٌ فَأَبْقِنِي أُجَاهِدْهُمْ فِيكَ اللَّهُمَّ فَإِنِّي أَظُنُّ أَنَّكَ قَدْ وَضَعْتَ الْحَرْبَ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَإِنْ كُنْتَ وَضَعْتَ الْحَرْبَ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَافْجُرْهَا وَاجْعَلْ مَوْتِي فِيهَا ‏.‏ فَانْفَجَرَتْ مِنْ لَبَّتِهِ فَلَمْ يَرُعْهُمْ – وَفِي الْمَسْجِدِ مَعَهُ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ – إِلاَّ وَالدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ فَقَالُوا يَا أَهْلَ الْخَيْمَةِ مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ فَإِذَا سَعْدٌ جُرْحُهُ يَغِذُّ دَمًا فَمَاتَ مِنْهَا


وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَانْفَجَرَ مِنْ لَيْلَتِهِ فَمَازَالَ يَسِيلُ حَتَّى مَاتَ وَزَادَ فِي الْحَدِيثِ قَالَ فَذَاكَ حِينَ يَقُولُ الشَّاعِرُ:‏

أَلاَ يَا سَعْدُ سَعْدَ بَنِي مُعَاذٍ فَمَا فَعَلَتْ قُرَيْظَةُ وَالنَّضِيرُ لَعَمْرُكَ إِنَّ سَعْدَ بَنِي مُعَاذٍ غَدَاةَ تَحَمَّلُوا لَهُوَ الصَّبُورُ تَرَكْتُمْ قِدْرَكُمْ لاَ شَىْءَ فِيهَا وَقِدْرُ الْقَوْمِ حَامِيَةٌ تَفُورُ وَقَدْ قَالَ الْكَرِيمُ أَبُو حُبَابٍ أَقِيمُوا قَيْنُقَاعُ وَلاَ تَسِيرُوا وَقَدْ كَانُوا بِبَلْدَتِهِمْ ثِقَالاً كَمَا ثَقُلَتْ بِمَيْطَانَ الصُّخُورُ

ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் (கை நரம்பில் பட்ட அம்புக்) காயம், ஆறும் நிலையை அடைந்தபோது அவர்கள், “இறைவா! உன் தூதரை நம்ப மறுத்து, அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும்விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய்.

இறைவா! குறைஷியருடனான போர் ஏதேனும் எஞ்சியிருந்தால் நான் உன் வழியில் (மீண்டும்) போர் செய்ய என்னை உயிருடன் இருக்கச் செய்.

இறைவா! எங்களுக்கும் (குறைஷியரான) அவர்களுக்கும் இடையிலான போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறு எங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான போரை நீ முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால், (ஆறும் நிலையிலிருக்கும் எனது) காயத்திலிருந்து மீண்டும் குருதி கொப்புளிக்கச் செய்து, அதிலேயே எனக்கு (வீர)மரணத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அவ்வாறே அவரது நெஞ்செலும்பிலிருந்து குருதி கொப்புளித்தது. அவரது கூடாரத்தை ஒட்டி பனூ ஃகிஃபார் குலத்தாரின் கூடாரம் ஒன்றும் பள்ளிவாசலுக்கருகில் அமைக்கப்பெற்றிருந்தது.

ஸஅத் (ரலி) அவர்களது கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வந்த இரத்தம், பனூ ஃகிஃபார் குலத்தாருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது அக்குலத்தார் “கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து எங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறதே, இது என்ன?” என்று கேட்டுக்கொண்டு, அங்குப் பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழியும் நிலையில் ஸஅத் (ரலி) இருந்தார்கள்; அந்தக் காயத்தாலேயே இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்தத்து (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றிரவு அவரது காயத்திலிருந்து குருதி கொப்புளித்தது. குருதி வழிந்தோடிக்கொண்டே இருந்து, முடிவில் அவர் இறந்துவிட்டார்” என்று இடம்பெற்றுள்ளது.

அதில் மேலும், ஸஅத் (ரலி) அவர்களைத் தாக்கியும் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபையைக் கொண்டாடியும் பனூ குறைழாவின் ஜபல் பின் ஜவால் அஸ்ஸஅலவீ எனும் கவிஞரின் கவிதை:

ஸஅத்!
பனூ முஆதின் வழித்தோன்றலே!
குறைழாவும் நளீரும்
என்ன ஆனார்கள்?

உன் வாழ்நாள் மீதாணை!
குறைழாவும் நளீரும்
நாட்டைவிட்டு
வெளியேறியபோது,
ஸஅத் பின் முஆத்
பொறுமை காத்தார்

(அவ்ஸே!) நீங்கள் உங்கள்
பாத்திரங்களைக் காலி
செய்துவிட்டீர்கள்.
ஆனால், அந்த (கஸ்ரஜ்) குலத்தாரின்
பாத்திரமோ (பனூ கைனுகா),
சுடச் சுடக் கொதிக்கிறது
(காப்பாற்றப்பட்டுவிட்டனர்).

மாண்பமை அபூஹுபாப்
(அப்துல்லாஹ் பின் உபை அஸ்ஸலூல்),
“இங்கேயே தங்குவீர்,
கைனுகாவினரே!
எங்கும் சென்றுவிடாதீர்“ என்றார்.

அவர்கள் இன்று
சொந்த ஊரிலேயே
திடமாக அமர்ந்துவிட்டனர்.
(ஹிஜாஸின்) ‘மைத்தான்’ மலைமீது
கற்பாறைகள் அமர்ந்தது போல்!

என்பதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: