அத்தியாயம்: 32, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3327

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنِي أَبِي قَالَ :‏

غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُنَيْنًا فَلَمَّا وَاجَهْنَا الْعَدُوَّ تَقَدَّمْتُ فَأَعْلُو ثَنِيَّةً فَاسْتَقْبَلَنِي رَجُلٌ مِنَ الْعَدُوِّ فَأَرْمِيهِ بِسَهْمٍ فَتَوَارَى عَنِّي فَمَا دَرَيْتُ مَا صَنَعَ وَنَظَرْتُ إِلَى الْقَوْمِ فَإِذَا هُمْ قَدْ طَلَعُوا مِنْ ثَنِيَّةٍ أُخْرَى فَالْتَقَوْا هُمْ وَصَحَابَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَلَّى صَحَابَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَرْجِعُ مُنْهَزِمًا وَعَلَىَّ بُرْدَتَانِ مُتَّزِرًا بِإِحْدَاهُمَا مُرْتَدِيًا بِالأُخْرَى فَاسْتَطْلَقَ إِزَارِي فَجَمَعْتُهُمَا جَمِيعًا وَمَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُنْهَزِمًا وَهُوَ عَلَى بَغْلَتِهِ الشَّهْبَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لَقَدْ رَأَى ابْنُ الأَكْوَعِ فَزَعًا ‏”‏ ‏.‏ فَلَمَّا غَشُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ عَنِ الْبَغْلَةِ ثُمَّ قَبَضَ قَبْضَةً مِنْ تُرَابٍ مِنَ الأَرْضِ ثُمَّ اسْتَقْبَلَ بِهِ وُجُوهَهُمْ فَقَالَ ‏”‏ شَاهَتِ الْوُجُوهُ ‏”‏ ‏.‏ فَمَا خَلَقَ اللَّهُ مِنْهُمْ إِنْسَانًا إِلاَّ مَلأَ عَيْنَيْهِ تُرَابًا بِتِلْكَ الْقَبْضَةِ فَوَلَّوْا مُدْبِرِينَ فَهَزَمَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَقَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَنَائِمَهُمْ بَيْنَ الْمُسْلِمِينَ ‏.‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்த்து ஹுனைன் போரில் கலந்து கொண்டோம். நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டபோது, நான் முன்னேறிச் சென்றேன். அப்போது நான் ஒரு மலைக் கணவாய்மீது ஏறினேன்; எதிரிகளில் ஒருவன் என்னை எதிர்கொண்டான். உடனே நான் ஓர் அம்பை எடுத்து அவன்மீது எய்தேன். அவன் என்னைவிட்டு மறைந்து (தப்பித்துக்)கொண்டான். பிறகு அவன் என்ன ஆனான் என்று எனக்குத் தெரியவில்லை.

அப்போது எதிரிகளை நான் பார்த்தேன். அவர்கள் மற்றொரு கணவாய்மீது ஏறி விட்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் மோதிக்கொண்டனர். பிறகு நபித் தோழர்கள் பின்வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். நானும் தோல்வி கண்டு திரும்பினேன். அப்போது என்மீது இரு போர்வைகள் இருந்தன. ஒன்றை நான் கீழங்கியாகவும் மற்றொன்றை மேலங்கியாகவும் போர்த்திக்கொண்டிருந்தேன்.

எனது கீழங்கி (நான் திரும்பிக்கொண்டிருந்தபோது) அவிழ்ந்துவிட்டது. உடனே நான் மேலங்கியையும் கீழங்கியையும் சேர்த்து (சுருட்டிப்) பிடித்துக்கொண்டேன். அப்போது நான் தோற்றுப்போனவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது வெள்ளைக் கோவேறு கழுதையில் (நிலைகுலையாமல்) இருந்தார்கள்.

அப்போது அவர்கள், “இப்னுல் அக்வஉ, திடுக்கிடும் நிகழ்வெதையோ கண்டுள்ளார்” என்று கூறினார்கள். எதிரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டதும் அவர்கள் தமது கோவேறு கழுதையிலிருந்து இறங்கி, பூமியிலிருந்து ஒரு கைப்பிடி மண் அள்ளி, அவர்களது முகங்களை நோக்கி எறிந்தார்கள்.

அப்போது “இம்முகங்கள் இழிவடைந்தன” என்று கூறினார்கள். எதிரிகளில் ஒருவரது முகம்கூட விடுபடாமல் அனைவருடைய கண்களையும் அந்த ஒரு பிடி மண்ணால் அல்லாஹ் நிரப்பாமல் விடவில்லை. பிறகு அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்தான். அவர்கள் விட்டுச் சென்ற போர் வெற்றிச் செல்வங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

Share this Hadith: