அத்தியாயம்: 32, பாடம்: 39, ஹதீஸ் எண்: 3348

وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ، – يَعْنِي ابْنَ سُلَيْمَانَ – عَنْ زَكَرِيَّاءَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ :‏

بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عِنْدَ الْبَيْتِ وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ وَقَدْ نُحِرَتْ جَزُورٌ بِالأَمْسِ فَقَالَ أَبُو جَهْلٍ أَيُّكُمْ يَقُومُ إِلَى سَلاَ جَزُورِ بَنِي فُلاَنٍ فَيَأْخُذُهُ فَيَضَعُهُ فِي كَتِفَىْ مُحَمَّدٍ إِذَا سَجَدَ فَانْبَعَثَ أَشْقَى الْقَوْمِ فَأَخَذَهُ فَلَمَّا سَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ قَالَ فَاسْتَضْحَكُوا وَجَعَلَ بَعْضُهُمْ يَمِيلُ عَلَى بَعْضٍ وَأَنَا قَائِمٌ أَنْظُرُ ‏.‏ لَوْ كَانَتْ لِي مَنَعَةٌ طَرَحْتُهُ عَنْ ظَهْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدٌ مَا يَرْفَعُ رَأْسَهُ حَتَّى انْطَلَقَ إِنْسَانٌ فَأَخْبَرَ فَاطِمَةَ فَجَاءَتْ وَهِيَ جُوَيْرِيَةُ فَطَرَحَتْهُ عَنْهُ ‏.‏ ثُمَّ أَقْبَلَتْ عَلَيْهِمْ تَشْتِمُهُمْ فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَتَهُ رَفَعَ صَوْتَهُ ثُمَّ دَعَا عَلَيْهِمْ وَكَانَ إِذَا دَعَا دَعَا ثَلاَثًا ‏.‏ وَإِذَا سَأَلَ سَأَلَ ثَلاَثًا ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ ‏”‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ فَلَمَّا سَمِعُوا صَوْتَهُ ذَهَبَ عَنْهُمُ الضِّحْكُ وَخَافُوا دَعْوَتَهُ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُقْبَةَ وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ ‏”‏ ‏.‏


وَذَكَرَ السَّابِعَ وَلَمْ أَحْفَظْهُ فَوَالَّذِي بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ لَقَدْ رَأَيْتُ الَّذِينَ سَمَّى صَرْعَى يَوْمَ بَدْرٍ ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ ‏.‏

قَالَ أَبُو إِسْحَاقَ الْوَلِيدُ بْنُ عُقْبَةَ غَلَطٌ فِي هَذَا الْحَدِيثِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறையில்லம் கஅபா அருகில் (ஒரு முறை) தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனுடைய நண்பர்களும் (அங்கு) அமர்ந்திருந்தனர். அதற்கு முந்தைய நாள் (இறைச்சிக்காக மக்காவில்) ஓர் ஒட்டகம் அறுக்கப்பட்டிருந்தது.

அபூஜஹ்லு, “இன்ன குடும்பத்தார் (நேற்று) அறுத்த ஒட்டகத்தின் கருப்பையைச் சுற்றியுள்ள சவ்வுகளைக் கொண்டுவந்து முஹம்மது (தொழுகையில்) சிரவணக்கத்திற்குச் செல்லும்போது, அவருடைய தோள்கள்மீது வைப்பவர் உங்களில் யார்?” என்று கேட்டான். அங்கிருந்தவர்களில் மாபாதகன் ஒருவன் கிளம்பிச் சென்று, அதைக் கொண்டுவந்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரவணக்கம் செய்தபோது, அவர்களுடைய தோள்களுக்கு மத்தியில் அதை(த் தூக்கி) வைத்தான். அதைக் கண்டு அவனுடைய சகாக்கள் ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கலாயினர். நான் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சக்தி இருந்திருந்தால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து அப்புறப்படுத்தியிருப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரவணக்கத்திலிருந்து தலையை உயர்த்த முடியாமல் இருந்தார்கள்.

இதற்கிடையில், யாரோ ஒருவர் சென்று ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டார். உடனே சிறுமியாயிருந்த ஃபாத்திமா (ரலி) வந்து அதை அப்புறப்படுத்தினார்.

பிறகு அ(ந்தக் கய)வர்களை நோக்கிச் சென்று அவர்களை ஏசினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுது முடித்ததும் உரத்த குரலில் எதிரிகளுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று முறை கூறுவார்கள்.

“இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்” என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள். நபியவர்களது குரலைக் கேட்டதும் எதிரிகளின் சிரிப்பு அடங்கிவிட்டது. அல்லாஹ்வுடைய தூதரின் பிரார்த்தனையைக் குறித்து அவர்கள் அஞ்சினர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! அபூஜஹ்லு பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உக்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரை நீயே கவனித்துக்கொள்” என்று பிரார்த்தித்தார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இந்தப் பிரார்த்தனையில்) பெயர் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் மாண்டு கிடந்ததை நான் கண்டேன். பின்னர் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டு, பத்ரிலிருந்த ஒரு பாழுங் கிணற்றில் தள்ளப்பட்டனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்புகள் :

“இந்த ஹதீஸில் வலீத் பின் உக்பாவின் பெயர், பிழையாக இடம்பெற்றுள்ளது. (வலீத் பின் உத்பா என்பதே சரி) என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) கூறுகின்றார்.

மேலும், “ஏழாவதாக மற்றொருவரின் பெயரையும் நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். ஆனால், அது என் நினைவில் இல்லை” என்று குறிப்பிடுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment