அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4528

حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ اهْجُوا قُرَيْشًا فَإِنَّهُ أَشَدُّ عَلَيْهَا مِنْ رَشْقٍ بِالنَّبْلِ ‏”‏‏.‏ فَأَرْسَلَ إِلَى ابْنِ رَوَاحَةَ فَقَالَ ‏”‏ اهْجُهُمْ ‏”‏ ‏.‏ فَهَجَاهُمْ فَلَمْ يُرْضِ فَأَرْسَلَ إِلَى كَعْبِ بْنِ مَالِكٍ ثُمَّ أَرْسَلَ إِلَى حَسَّانَ بْنِ ثَابِتٍ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ حَسَّانُ قَدْ آنَ لَكُمْ أَنْ تُرْسِلُوا إِلَى هَذَا الأَسَدِ الضَّارِبِ بِذَنَبِهِ ثُمَّ أَدْلَعَ لِسَانَهُ فَجَعَلَ يُحَرِّكُهُ فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لأَفْرِيَنَّهُمْ بِلِسَانِي فَرْىَ الأَدِيمِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ تَعْجَلْ فَإِنَّ أَبَا بَكْرٍ أَعْلَمُ قُرَيْشٍ بِأَنْسَابِهَا – وَإِنَّ لِي فِيهِمْ نَسَبًا – حَتَّى يُلَخِّصَ لَكَ نَسَبِي ‏”‏ ‏.‏ فَأَتَاهُ حَسَّانُ ثُمَّ رَجَعَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ لَخَّصَ لِي نَسَبَكَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِحَسَّانَ ‏”‏ إِنَّ رُوحَ الْقُدُسِ لاَ يَزَالُ يُؤَيِّدُكَ مَا نَافَحْتَ عَنِ اللَّهِ وَرَسُولِهِ ‏”‏ ‏.‏ وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ هَجَاهُمْ حَسَّانُ فَشَفَى وَاشْتَفَى ‏”‏ ‏.‏ قَالَ حَسَّانُ هَجَوْتَ مُحَمَّدًا فَأَجَبْتُ عَنْهُ وَعِنْدَ اللَّهِ فِي ذَاكَ الْجَزَاءُ هَجَوْتَ مُحَمَّدًا بَرًّا تَقِيًّا رَسُولَ اللَّهِ شِيمَتُهُ الْوَفَاءُ فَإِنَّ أَبِي وَوَالِدَهُ وَعِرْضِي لِعِرْضِ مُحَمَّدٍ مِنْكُمْ وِقَاءُ ثَكِلْتُ بُنَيَّتِي إِنْ لَمْ تَرَوْهَا تُثِيرُ النَّقْعَ مِنْ كَنَفَىْ كَدَاءِ يُبَارِينَ الأَعِنَّةَ مُصْعِدَاتٍ عَلَى أَكْتَافِهَا الأَسَلُ الظِّمَاءُ تَظَلُّ جِيَادُنَا مُتَمَطِّرَاتٍ تُلَطِّمُهُنَّ بِالْخُمُرِ النِّسَاءُ فَإِنْ أَعْرَضْتُمُو عَنَّا اعْتَمَرْنَا وَكَانَ الْفَتْحُ وَانْكَشَفَ الْغِطَاءُ وَإِلاَّ فَاصْبِرُوا لِضِرَابِ يَوْمٍ يُعِزُّ اللَّهُ فِيهِ مَنْ يَشَاءُ وَقَالَ اللَّهُ قَدْ أَرْسَلْتُ عَبْدًا يَقُولُ الْحَقَّ لَيْسَ بِهِ خَفَاءُ وَقَالَ اللَّهُ قَدْ يَسَّرْتُ جُنْدًا هُمُ الأَنْصَارُ عُرْضَتُهَا اللِّقَاءُ لَنَا فِي كُلِّ يَوْمٍ مِنْ مَعَدٍّ سِبَابٌ أَوْ قِتَالٌ أَوْ هِجَاءُ فَمَنْ يَهْجُو رَسُولَ اللَّهِ مِنْكُمْ وَيَمْدَحُهُ وَيَنْصُرُهُ سَوَاءُ وَجِبْرِيلٌ رَسُولُ اللَّهِ فِينَا وَرُوحُ الْقُدْسِ لَيْسَ لَهُ كِفَاءُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஹுதைபியா பயணத்தின்போது) “குறைஷியருக்கெதிராக வசைக்கவி பாடுங்கள். ஏனெனில், அது ஈட்டியைவிட பலமாக அவர்களைத் தாக்கக்கூடியதாகும்” என்று கூறினார்கள். “அவர்களுக்கெதிராக வசைக்கவி பாடுங்கள்” என்று அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களுக்குக் கூறியனுப்பினார்கள். அவ்வாறே, அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) குறைஷியருக்கெதிராக வசைக்கவி பாடினார்கள். ஆனால், அது நபியவர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. எனவே, கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள்.

பிறகு ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) வந்தபோது, “தனது வாலை(ச் சுழற்றி) அடிக்கும் இந்தச் சிங்கத்திடம் ஆளனுப்ப இப்போதுதான் உங்களுக்கு நேரம் வந்திருக்கிறது!” என்று கூறிவிட்டுத் தமது நாவை வெளியே நீட்டி அதைச் சுழற்றத் தொடங்கினார்கள். (நபி (ஸல்) அவர்களை நோக்கி) “உங்களைச் சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீதாணையாக! தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களை(அவர்களது குலப் பெருமையை)க் கிழித்தெறிவேன்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவசரப்படாதீர்! அபூபக்ரு, குறைஷியரின் வமிசாவளி குறித்து நன்கறிந்தவர். குறைஷியரோடு எனது வமிசமும் பிணைந்துள்ளது. உம்மிடம் எனது வமிசாவளியை அபூபக்ருத் தனியாகப் பிரித்தறிவிப்பார்” என்று கூறினார்கள்.

ஆகவே, ஹஸ்ஸான் (ரலி) அபூபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, (குறைஷி வமிசாவளி பற்றி கேட்டுத்) திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு (ரலி) உங்களது வமிசாவளியை எனக்குப் பிரித்தறிவித்தார்கள். உங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று அவர்களிடமிருந்து உங்களை நான் உருவி எடுத்துவிடுவேன்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் சார்பாகவும் அவன் தூதர் சார்பாகவும் பதிலடி கொடுக்கும்வரை ‘ரூஹுல் குதுஸ்’ (எனும் தூய ஆத்மா ஜிப்ரீல்) உம்மோடு உறுதுணையாக இருந்துகொண்டிருப்பார்” என்று கூறியதை நான் கேட்டேன். மேலும், நபி (ஸல்), “குறைஷியருக்கெதிராக ஹஸ்ஸான் வசைக்கவி பாடினார். நம்மையும் திருப்திப்படுத்தினார். தாமும் திருப்திகொண்டார்” என்று கூறினார்கள்.

ஹஸ்ஸான் (ரலி) (ஹுதைபியாவில்) பாடிய கவி வருமாறு:

நீ, முஹம்மது (ஸல்) அவர்களை
இகழ்ந்து வசைக்கவி பாடுகிறாய்.
நான் அவர் சார்பாக
எதிர்க்கவி பாடுகிறேன்.
அதற்காக அல்லாஹ்விடமே
நற்பலன் உண்டு (எனக்கு).
நீ
தயாள மனத்தவரும்
இறை பக்தியாளருமான
இறைத்தூதர் முஹம்மதை இகழ்ந்து
வசைக்கவி பாடுகிறாய்!
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதே
அவர்தம் பண்பு.
என் தந்தையும்
என் தந்தையின் தந்தையும்
எந்தன் மானமரியாதையும்
உங்களிடமிருந்து
முஹம்மத் (ஸல்) அவர்களைக்
காக்கும் கேடயம்.
‘கதா’ மலைக்குன்றின்
இரு மருங்கிலிருந்தும்
புழுதி கிளப்பும்
குதிரைகளை நீங்கள் காணாவிட்டால்
என் மகள்
இறந்துபோகட்டும்!
(விறைப்பிலும் வலுவிலும்)
கடிவாளங்களுக்குப் போட்டி போடும்
அக்குதிரைகளின் முதுகுகளில்
(இரத்த) தாகம் கொண்ட
ஈட்டிகளே வீற்றிருக்கும்.
அக்குதிரைகள்
ஒன்றையொன்றை முந்திக்கொண்டு
உங்களை முன்னோக்கி
விரைந்தோடி வரும்.
எங்கள் மங்கையர்
தம் முக்காட்டுத் துணிகளால்
அவற்றுக்கு
முகம் துடைத்துவிடுவர்.
நாங்கள்
(மக்காவுக்குள்) நுழையும்போது
கண்டுகொள்ளாமல்
நீங்கள் விட்டுவிட்டால்
நாங்கள் உம்ரா வழிபாட்டை
நன்கே நிறைவேற்றுவோம்.
அதுவே
எங்களுக்கு வெற்றியாக மாறும்;
திரையும் விலகும்.
இல்லாவிட்டால்
அல்லாஹ், தான் நாடியவர்களை
கண்ணியப்படுத்தும் போர்த் தினத்துக்காக
நீங்கள் பொறுமையோடு காத்திருங்கள்!
“உண்மையை
ஒளிவு மறைவின்றிப் பேசும்
அடியார் ஒருவரை
நான் அனுப்பியுள்ளேன்”
என்று அல்லாஹ் சொன்னான்.
“நான் ஒரு படையைத்
தயாரித்துள்ளேன்;
அவர்களே அன்ஸாரிகள்;
எதிரிகளைச் சந்திப்பதே
அவர்தம் இலக்கு”
என்றும் அல்லாஹ் சொன்னான்.
நாங்கள்
அனுதினமும்
‘மஅத்’ (குறைஷி) குலத்தாரிடமிருந்து
வசை மொழியும்
போர் முனையும்
வசைக் கவியும்
சந்திப்பதுண்டு.
உங்களில்
அல்லாஹ்வின் தூதரை
இகழ்ந்து பாடுபவர் யார்?
அவரைப் புகழ்ந்து
அவருக்கு உதவுபவர் யார்?
அவரைப் பொருத்தவரை
(இருவரும்) சமமே!
இறையின் தூதர் ஜிப்ரீல்
எம்மிடையே உள்ளார்.
அந்தத் தூய ஆத்மாவிற்கு
நிகர் யாருமில்லை (இங்கு).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: