அத்தியாயம்: 44, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4526

حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ قَالَ :‏

دَخَلْتُ عَلَى عَائِشَةَ وَعِنْدَهَا حَسَّانُ بْنُ ثَابِتٍ يُنْشِدُهَا شِعْرًا يُشَبِّبُ بِأَبْيَاتٍ لَهُ فَقَالَ حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ فَقَالَتْ لَهُ عَائِشَةُ لَكِنَّكَ لَسْتَ كَذَلِكَ ‏.‏ قَالَ مَسْرُوقٌ فَقُلْتُ لَهَا لِمَ تَأْذَنِينَ لَهُ يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ قَالَ اللَّهُ ‏{‏ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ‏}‏ فَقَالَتْ فَأَىُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى إِنَّهُ كَانَ يُنَافِحُ أَوْ يُهَاجِي عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

حَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، فِي هَذَا الإِسْنَادِ وَقَالَ قَالَتْ كَانَ يَذُبُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَذْكُرْ حَصَانٌ رَزَانٌ ‏.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒரு முறை) சென்றபோது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷா (ரலி) அவர்களைப்) பாராட்டிக்கொண்டுமிருந்தார்கள்.

“நீங்கள் பத்தினி;
அறிவாளி;
சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.
(அவதூறு பேசுவதன்மூலம்)
பேதைப் பெண்களின்
மாமிசங்களைப் புசித்துவிடாமல்
பட்டினியோடு காலையில் எழுபவர்”

என்று ஹஸ்ஸான் (ரலி) (ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து) கவிதை பாடினார்கள்.

அதைக் கேட்ட ஆயிஷா (ரலி), “ஆனாலும், நீங்கள் அப்படியல்லவே? (என்னைப் பற்றி அவதூறு பேசியவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்)” என்று கூறினார்கள்.

அப்போது நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “இவரை உங்கள் இல்லத்துக்கு வர ஏன் அனுமதிக்கின்றீர்கள்? அல்லாஹ் (தனது வேதத்தில்) ‘அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்குக் கடினமான வேதனையுண்டு’ (24:11) எனக் கூறுகின்றானே?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), “பார்வையை, கண் இழப்பதைவிடக் கொடிய வேதனை ஏது?” என்று கூறிவிட்டு, “அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சார்பாக (எதிரிகளைத் தாக்கி) பதில் கவி / வசைக்கவி பாடுபவராக இருந்தார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)


குறிப்பு :

இப்னு அபீ அதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ நீங்கள் பத்தினி; அறிவாளி… என்று தொடங்கும் கவிதை இடம்பெறவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (கவிதையால்) பதிலடி கொடுக்கக் கூடியவராக இருந்தார்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: