அத்தியாயம்: 44, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4410

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ – عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ اسْتُعْمِلَ عَلَى الْمَدِينَةِ رَجُلٌ مِنْ آلِ مَرْوَانَ – قَالَ – فَدَعَا سَهْلَ بْنَ سَعْدٍ فَأَمَرَهُ أَنْ يَشْتِمَ عَلِيًّا – قَالَ – فَأَبَى سَهْلٌ فَقَالَ لَهُ أَمَّا إِذْ أَبَيْتَ فَقُلْ لَعَنَ اللَّهُ أَبَا التُّرَابِ ‏.‏ فَقَالَ سَهْلٌ مَا كَانَ لِعَلِيٍّ اسْمٌ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَبِي التُّرَابِ وَإِنْ كَانَ لَيَفْرَحُ إِذَا دُعِيَ بِهَا ‏.‏ فَقَالَ لَهُ أَخْبِرْنَا عَنْ قِصَّتِهِ لِمَ سُمِّيَ أَبَا تُرَابٍ قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ ‏”‏ أَيْنَ ابْنُ عَمِّكِ ‏”‏ ‏.‏ فَقَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَىْءٌ فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لإِنْسَانٍ ‏”‏ انْظُرْ أَيْنَ هُوَ ‏”‏ ‏.‏ فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ ‏.‏ فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُضْطَجِعٌ قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ فَأَصَابَهُ تُرَابٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ ‏”‏ قُمْ أَبَا التُّرَابِ قُمْ أَبَا التُّرَابِ ‏”‏

மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரலி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். அவர் என்னிடம், “நீர் (அலீ என்று சொல்ல) மறுத்தால், “அல்லாஹ், அபுத்துராபை சபிக்கட்டும்! என்றாவது கூறி ஏசுவீராக!” என்று சொன்னார்.

அதற்கு நான், “(தம் பெயர்களில்) அபுத்துராப் (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள்” என்று சொன்னேன். அதற்கு அந்த ஆளுநர், “அபுத்துராப் என (அலீ) ஏன் பெயர் சூட்டப்பெற்றார்? அந்த நிகழ்வை எமக்குச் சொல்வீராக!” என்று என்னிடம் கேட்டார்.

நான் பின்வருமாறு பதிலளித்தேன்: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்தார்கள். அப்போது (மருமகன்) அலீ வீட்டில் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் பெரிய தந்தையின் மகன் (ஆன உன் கணவர்) எங்கே?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஃபாத்திமா (ரலி), “எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அவர் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார்” என்று பதிலளித்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருவரிடம், “அவர் எங்கே என்று பார்” என்று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பள்ளிவாசலுக்கு) அலீயிடம் வந்தார்கள். அப்போது அலீ (ரலி) தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக்கொண்டே, “அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள்” என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)

Share this Hadith:

Leave a Comment