அத்தியாயம்: 44, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4409

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَشُجَاعُ بْنُ مَخْلَدٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبُو حَيَّانَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ حَيَّانَ قَالَ :‏

انْطَلَقْتُ أَنَا وَحُصَيْنُ بْنُ سَبْرَةَ وَعُمَرُ بْنُ مُسْلِمٍ إِلَى زَيْدِ بْنِ أَرْقَمَ فَلَمَّا جَلَسْنَا إِلَيْهِ قَالَ لَهُ حُصَيْنٌ لَقَدْ لَقِيتَ يَا زَيْدُ خَيْرًا كَثِيرًا رَأَيْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَمِعْتَ حَدِيثَهُ وَغَزَوْتَ مَعَهُ وَصَلَّيْتَ خَلْفَهُ لَقَدْ لَقِيتَ يَا زَيْدُ خَيْرًا كَثِيرًا حَدِّثْنَا يَا زَيْدُ مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم – قَالَ – يَا ابْنَ أَخِي وَاللَّهِ لَقَدْ كَبِرَتْ سِنِّي وَقَدُمَ عَهْدِي وَنَسِيتُ بَعْضَ الَّذِي كُنْتُ أَعِي مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا حَدَّثْتُكُمْ فَاقْبَلُوا وَمَا لاَ فَلاَ تُكَلِّفُونِيهِ ‏.‏ ثُمَّ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ ‏”‏ أَمَّا بَعْدُ أَلاَ أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ ‏”‏ ‏.‏ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ ‏”‏ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ حُصَيْنٌ وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ قَالَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ ‏.‏ قَالَ وَمَنْ هُمْ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ ‏.‏ قَالَ كُلُّ هَؤُلاَءِ حُرِمَ الصَّدَقَةَ قَالَ نَعَمْ ‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا حَسَّانُ، – يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ – عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ يَزِيدَ بْنِ حَيَّانَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِهِ بِمَعْنَى حَدِيثِ زُهَيْرٍ ‏

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، كِلاَهُمَا عَنْ أَبِي حَيَّانَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَ حَدِيثِ إِسْمَاعِيلَ وَزَادَ فِي حَدِيثِ جَرِيرٍ ‏ “‏ كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ مَنِ اسْتَمْسَكَ بِهِ وَأَخَذَ بِهِ كَانَ عَلَى الْهُدَى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ ‏”‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا حَسَّانُ، – يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ – عَنْ سَعِيدٍ، – وَهُوَ ابْنُ مَسْرُوقٍ – عَنْ يَزِيدَ بْنِ حَيَّانَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ دَخَلْنَا عَلَيْهِ فَقُلْنَا لَهُ لَقَدْ رَأَيْتَ خَيْرًا ‏.‏ لَقَدْ صَاحَبْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَصَلَّيْتَ خَلْفَهُ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ أَبِي حَيَّانَ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ أَلاَ وَإِنِّي تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَحَدُهُمَا كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ هُوَ حَبْلُ اللَّهِ مَنِ اتَّبَعَهُ كَانَ عَلَى الْهُدَى وَمَنْ تَرَكَهُ كَانَ عَلَى ضَلاَلَةٍ ‏”‏ ‏.‏ وَفِيهِ فَقُلْنَا مَنْ أَهْلُ بَيْتِهِ نِسَاؤُهُ قَالَ لاَ وَايْمُ اللَّهِ إِنَّ الْمَرْأَةَ تَكُونُ مَعَ الرَّجُلِ الْعَصْرَ مِنَ الدَّهْرِ ثُمَّ يُطَلِّقُهَا فَتَرْجِعُ إِلَى أَبِيهَا وَقَوْمِهَا أَهْلُ بَيْتِهِ أَصْلُهُ وَعَصَبَتُهُ الَّذِينَ حُرِمُوا الصَّدَقَةَ بَعْدَهُ

நானும் ஹுஸைன் பின் ஸப்ரா (ரஹ்), உமர் பின் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரும் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்றோம். நாங்கள் அவர்கள் அருகில் அமர்ந்தபோது, அவர்களிடம் ஹுஸைன் பின் ஸப்ரா (ரஹ்), “ஸைத் அவர்களே! நீங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டுள்ளீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளீர்கள். அவர்களுடன் சேர்ந்து அறப்போர்களில் கலந்துகொண்டுள்ளீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள். ஸைதே! நீங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். ஸைதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எங்களுக்கு அறிவியுங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி), “என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின்  மீதாணையாக! எனக்கு வயது அதிகமாகிவிட்டது; எனது காலம் கழிந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட சில ஹதீஸ்களை நான் மறந்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்கு அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் அறிவிக்காதவற்றைப் பற்றி என்னிடம் கேட்டு என்னைச் சிரமப்படுத்திவிடாதீர்கள்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள ‘கும்மு’ எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! கேட்டுக்கொள்ளுங்கள். நானும் ஒரு மனிதனே! (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் (வானவத்) தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே பாரம் மிகுந்த இரண்டை விட்டுச்செல்கின்றேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வம் ஊட்டினார்கள்.

பிறகு, “(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகின்றேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகின்றேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகின்றேன்” என்று (மூன்று முறை) கூறினார்கள்.

அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் ஸப்ரா (ரஹ்), “ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யாவர்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி), “நபியவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்கு ஸகாத் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்” என்று கூறினார்கள்.

அதற்கு ஹுஸைன் பின் ஸப்ரா (ரஹ்) “அவர்கள் யாவர்?” என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் (ரலி), “அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)” என்று பதிலளித்தார்கள்.

ஹுஸைன் பின் ஸப்ரா (ரஹ்), “ஸகாத் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி), “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக யஸீத் பின் ஹய்யான் (ரஹ்)


குறிப்புகள் :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “… (அவற்றில் ஒன்று) அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. அதைப் பெற்று அதனைக் கடைப்பிடிக்கின்றவர் நேர்வழியில் இருப்பார். அதைத் தவறவிடுபவர் வழிதவறிவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

ஸயீத் பின் மஸ்ரூக் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று, நீங்கள் பல நன்மைகளைக் கண்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள் என்று கூறினோம் …” என ஆரம்பமாகிறது.

ஆயினும் அதில், “கேட்டுக்கொள்ளுங்கள்! நான் உங்களிடையே பாரம் மிகுந்த இரண்டை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதமாகும். அது அல்லாஹ்வின் கயிறாகும். அதைப் பின்பற்றுபவர் நல்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் தவறான வழியில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

மேலும் அதில், “நபியவர்களின் குடும்பத்தார் யாவர்? அவர்களுடைய துணைவியரா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு ஸைத் (ரலி), “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு பெண் ஓர் ஆணுடன் குறிப்பிட்ட சில காலம் (மனைவியாக) இருப்பாள். பின்னர் அவளை அவன் மணவிலக்குச் செய்துவிட்டால், அவள் தன் தந்தையிடமோ அல்லது தன் குடும்பத்தாரிடமோ திரும்பிச் சென்றுவிடுவாள். நபியவர்களுடைய குடும்பத்தார் என்போர், அவர்களுடைய மூல உறவினரும் அவர்களுக்குப்பின் ஸகாத் பெறுவது தடை செய்யப்பட்ட அவர்களுடைய தந்தை வழி உறவினர்களுமே ஆவர் என்று பதிலளித்தார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment