حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :
بَلَغَنَا مَخْرَجُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ بِالْيَمَنِ فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ أَنَا وَأَخَوَانِ لِي أَنَا أَصْغَرُهُمَا أَحَدُهُمَا أَبُو بُرْدَةَ وَالآخَرُ أَبُو رُهْمٍ – إِمَّا قَالَ بِضْعًا وَإِمَّا قَالَ ثَلاَثَةً وَخَمْسِينَ أَوِ اثْنَيْنِ وَخَمْسِينَ رَجُلاً مِنْ قَوْمِي – قَالَ فَرَكِبْنَا سَفِينَةً فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالْحَبَشَةِ فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ وَأَصْحَابَهُ عِنْدَهُ فَقَالَ جَعْفَرٌ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَنَا هَا هُنَا وَأَمَرَنَا بِالإِقَامَةِ فَأَقِيمُوا مَعَنَا . فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا جَمِيعًا – قَالَ – فَوَافَقْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ فَأَسْهَمَ لَنَا – أَوْ قَالَ أَعْطَانَا مِنْهَا – وَمَا قَسَمَ لأَحَدٍ غَابَ عَنْ فَتْحِ خَيْبَرَ مِنْهَا شَيْئًا إِلاَّ لِمَنْ شَهِدَ مَعَهُ إِلاَّ لأَصْحَابِ سَفِينَتِنَا مَعَ جَعْفَرٍ وَأَصْحَابِهِ قَسَمَ لَهُمْ مَعَهُمْ – قَالَ – فَكَانَ نَاسٌ مِنَ النَّاسِ يَقُولُونَ لَنَا – يَعْنِي لأَهْلِ السَّفِينَةِ – نَحْنُ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ
قَالَ فَدَخَلَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ – وَهِيَ مِمَّنْ قَدِمَ مَعَنَا – عَلَى حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم زَائِرَةً وَقَدْ كَانَتْ هَاجَرَتْ إِلَى النَّجَاشِيِّ فِيمَنْ هَاجَرَ إِلَيْهِ فَدَخَلَ عُمَرُ عَلَى حَفْصَةَ وَأَسْمَاءُ عِنْدَهَا فَقَالَ عُمَرُ حِينَ رَأَى أَسْمَاءَ مَنْ هَذِهِ قَالَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ . قَالَ عُمَرُ الْحَبَشِيَّةُ هَذِهِ الْبَحْرِيَّةُ هَذِهِ فَقَالَتْ أَسْمَاءُ نَعَمْ . فَقَالَ عُمَرُ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ فَنَحْنُ أَحَقُّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْكُمْ . فَغَضِبَتْ وَقَالَتْ كَلِمَةً كَذَبْتَ يَا عُمَرُ كَلاَّ وَاللَّهِ كُنْتُمْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُطْعِمُ جَائِعَكُمْ وَيَعِظُ جَاهِلَكُمْ وَكُنَّا فِي دَارِ أَوْ فِي أَرْضِ الْبُعَدَاءِ الْبُغَضَاءِ فِي الْحَبَشَةِ وَذَلِكَ فِي اللَّهِ وَفِي رَسُولِهِ وَايْمُ اللَّهِ لاَ أَطْعَمُ طَعَامًا وَلاَ أَشْرَبُ شَرَابًا حَتَّى أَذْكُرَ مَا قُلْتَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ كُنَّا نُؤْذَى وَنُخَافُ وَسَأَذْكُرُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَسْأَلُهُ وَوَاللَّهِ لاَ أَكْذِبُ وَلاَ أَزِيغُ وَلاَ أَزِيدُ عَلَى ذَلِكَ . قَالَ فَلَمَّا جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّ عُمَرَ قَالَ كَذَا وَكَذَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لَيْسَ بِأَحَقَّ بِي مِنْكُمْ وَلَهُ وَلأَصْحَابِهِ هِجْرَةٌ وَاحِدَةٌ وَلَكُمْ أَنْتُمْ أَهْلَ السَّفِينَةِ هِجْرَتَانِ ” . قَالَتْ فَلَقَدْ رَأَيْتُ أَبَا مُوسَى وَأَصْحَابَ السَّفِينَةِ يَأْتُونِي أَرْسَالاً يَسْأَلُونِي عَنْ هَذَا الْحَدِيثِ مَا مِنَ الدُّنْيَا شَىْءٌ هُمْ بِهِ أَفْرَحُ وَلاَ أَعْظَمُ فِي أَنْفُسِهِمْ مِمَّا قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو بُرْدَةَ فَقَالَتْ أَسْمَاءُ فَلَقَدْ رَأَيْتُ أَبَا مُوسَى وَإِنَّهُ لَيَسْتَعِيدُ هَذَا الْحَدِيثَ مِنِّي
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்துகொள்ள ஹிஜ்ரத் புறப்பட்டோம். அவர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்மு ஆவார். நான்தான் அவர்களுள் இளையவன் ஆவேன்”
“என் (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன், ஐம்பத்திரண்டு (அ) ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்” என்று (என் தந்தை அபூமூஸா) கூறினார்கள். பிறகு பின்வருமாறும் குறிப்பிட்டார்கள்:
நாங்கள் ஒரு கப்பலில் ஏறி(மதீனாவை நோக்கி)ப் பயணம் செய்தோம். எங்கள் கப்பல் (திசை மாறி) அபிஸீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை(க் கொண்டு சென்று) இறக்கிவிட்டது. அங்கு ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் நஜாஷீக்கு அருகில் சந்திக்க நேர்ந்தது. (ஏற்கெனவே அவர்கள் மக்காவிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்தனர்).
அப்போது ஜஅஃபர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை அனுப்பி (இங்கு) தங்கியிருக்கும்படி உத்தரவிட்டார்கள். நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்கிவிடுங்கள்” என்று கூறினார்கள்.
ஆகவே, நாங்களும் அவர்களுடன் (அபிஸீனியாவில்) தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனாவுக்கு) வந்துசேர்ந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபரை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் (கைபர் போரில் கிடைத்த செல்வங்களில்) எங்களுக்கும் அதிலிருந்து பங்கு கொடுத்தார்கள். கைபர் போரில் கலந்துகொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பங்கிட்டுத் தரவில்லை; தம்முடன் அதில் கலந்துகொண்டவர்களுக்கு மட்டுமே பங்கிட்டுத் தந்தார்கள்.
ஆனால், ஜஅஃபர் (ரலி) அவர்களுடனும் அவர்களுடைய சகாக்களுடனும் எங்களது கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் (முஸ்லிம்களிடம் ஆலோசனை கலந்து ஒப்புதல் பெற்றபின்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
அப்போது மக்களில் சிலர் கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, “உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்” என்று கூறலானார்கள்.
-எங்களுடன் (மதீனாவுக்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் அவர்களின் மனைவி) அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஹஃப்ஸா பின்த்தி உமர் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிஸீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார்.
ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா (ரலி) இருந்தபோது, அங்கு உமர் (ரலி) வந்தார்கள். உமர் (ரலி) அஸ்மாவைக் கண்டபோது “இவர் யார்?” என்று (தம் மகள்) ஹஃப்ஸாவிடம் கேட்டார்கள். “இவர் அஸ்மா பின்த்தி உமைஸ்” என்று ஹஃப்ஸா பதிலளித்தார்கள்.
உமர் (ரலி), “இவர் அபிஸீனிய(ஹிஜ்ரத் கார)ரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?” என்று கேட்டார்கள். அதற்கு அஸ்மா (ரலி) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது உமர் (ரலி), “உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் (நெருக்கமானவர்கள்)” என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, ஏதோ சொல்லிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: “உமரே! நீங்கள் தவறாகச் சொல்கின்றீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (உண்மை, நீங்கள் கூறியதைப் போன்று) இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களுக்கு அருகிலேயே) இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவருக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவுரீதியாக அவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்றுவந்தீர்கள்).
நாங்களோ உறவிலும் மார்க்கத்திலும் வெகு தொலைவிலிருக்கும் அபிஸீனிய நாட்டில் / அந்தப் பகுதியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இவ்வாறு செய்தோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ பருகவோமாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம்.
நான் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி அவர்களிடம் (நியாயம்) கேட்கப் போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்லமாட்டேன். திரித்துப் பேசமாட்டேன்; நீங்கள் சொன்னதைவிடக் கூட்டிச் சொல்லவுமாட்டேன்” என்றார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கு) வந்தபோது, அஸ்மா பின்த்தி உமைஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! உமர் (ரலி) இப்படி … இப்படிச்… சொன்னார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர், உங்களைவிட எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத்(செய்த சிறப்பு)தான் உண்டு. (அபிஸீனியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிஸீனியாவுக்கு ஒன்றும், மதீனாவுக்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு” என்று கூறினார்கள்.
அஸ்மா (ரலி) கூறினார்கள்: அபூமூஸாவும் அவர்களுடைய கப்பல் தோழர்களும் கூட்டம் கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய இந்தப் புகழுரையைவிட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரியதாகவோ அவர்களின் மனத்தில் பெருமிதத்துக்குரியதாகவோ இருக்கவில்லை.
என்னிடம் அபூமூஸா (ரலி) இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்பச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அபூபுர்தா ஆமிர் பின் அபீமூஸா (ரஹ்)