و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ قُلْتُ لِعَطَاءٍ أَيُّ حِينٍ أَحَبُّ إِلَيْكَ أَنْ أُصَلِّيَ الْعِشَاءَ الَّتِي يَقُولُهَا النَّاسُ الْعَتَمَةَ إِمَامًا وَخِلْوًا قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ :
أَعْتَمَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ الْعِشَاءَ قَالَ حَتَّى رَقَدَ نَاسٌ وَاسْتَيْقَظُوا وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا فَقَامَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ الصَّلَاةَ فَقَالَ عَطَاءٌ قَالَ ابْنُ عَبَّاسٍ فَخَرَجَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الْآنَ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَهُ عَلَى شِقِّ رَأْسِهِ قَالَ لَوْلَا أَنْ يَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوهَا كَذَلِكَ قَالَ فَاسْتَثْبَتُّ عَطَاءً كَيْفَ وَضَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى رَأْسِهِ كَمَا أَنْبَأَهُ ابْنُ عَبَّاسٍ فَبَدَّدَ لِي عَطَاءٌ بَيْنَ أَصَابِعِهِ شَيْئًا مِنْ تَبْدِيدٍ ثُمَّ وَضَعَ أَطْرَافَ أَصَابِعِهِ عَلَى قَرْنِ الرَّأْسِ ثُمَّ صَبَّهَا يُمِرُّهَا كَذَلِكَ عَلَى الرَّأْسِ حَتَّى مَسَّتْ إِبْهَامُهُ طَرَفَ الْأُذُنِ مِمَّا يَلِي الْوَجْهَ ثُمَّ عَلَى الصُّدْغِ وَنَاحِيَةِ اللِّحْيَةِ لَا يُقَصِّرُ وَلَا يَبْطِشُ بِشَيْءٍ إِلَّا كَذَلِكَ
قُلْتُ لِعَطَاءٍ كَمْ ذُكِرَ لَكَ أَخَّرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَتَئِذٍ قَالَ لَا أَدْرِي قَالَ عَطَاءٌ أَحَبُّ إِلَيَّ أَنْ أُصَلِّيَهَا إِمَامًا وَخِلْوًا مُؤَخَّرَةً كَمَا صَلَّاهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَتَئِذٍ فَإِنْ شَقَّ عَلَيْكَ ذَلِكَ خِلْوًا أَوْ عَلَى النَّاسِ فِي الْجَمَاعَةِ وَأَنْتَ إِمَامُهُمْ فَصَلِّهَا وَسَطًا لَا مُعَجَّلَةً وَلَا مُؤَخَّرَةً
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “மக்கள், ’அல்அதமா’ என்று சொல்லப்படுகின்ற இஷாத் தொழுகையை எந்த நேரத்தில் நான் தலைமை தாங்கித் தொழுவிப்பதை, அல்லது நான் தனியாகத் தொழுவதை நீங்கள் விரும்புவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்: ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஷாத் தொழுகையை நன்கு இருட்டும்வரைத் தாமதப்படுத்தினார்கள். (பள்ளிவாசலில் இருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) எழுந்து, ‘தொழுகை’ என்று (உரத்துக்) கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க, தலையின் ஒரு பகுதியில் தமது கையை வைத்து(தலையிலிருந்த தண்ணீரைத் துடைத்து)க் கொண்டு புறப்பட்டுவந்ததை நான் இப்போதும் மனக்கண்ணால் காண்கிறேன். அப்போது அவர்கள், ‘என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்றில்லாதிருப்பின் அவர்களை இந்த நேரத்திலேயே இத்தொழுகையைத் தொழுமாறு உத்தரவிட்டிருப்பேன்’ என்று சொன்னார்கள்”
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக, அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) வழியாக அப்துல் மலிக் பின் ஜுரைஹ் (ரஹ்)
குறிப்பு :
அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஜுரைஜ் (ரஹ்) தொடர்ந்து கூறுகிறார்கள்:
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் “நபி (ஸல்) தமது தலையில் எவ்வாறு கையை வைத்திருந்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்ததைப் போன்று கூறுங்கள்” என விளக்கம் கேட்டேன். அப்போது அதாஉ (ரஹ்), தம் கை விரல்களைச் சற்று இடைவெளிவிட்டு விரித்து, விரல் நுனிகளை உச்சந்தலையில் வைத்துத் தலையில் அதை தடவிக்கொண்டே சென்றார்கள். இறுதியில் அவர்களது பெருவிரல் முகத்தை ஒட்டியுள்ள காதோரம், நொற்றிப்பொட்டு, தாடியின் ஓரம் ஆகியவற்றில் பட்டது. இவ்வாறு அவர்கள் அதிகம் தாமதியாமலும் அவசரப்படாமலும் (நிதானமாகச்) செய்தார்கள்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் அன்றைய இரவில் எவ்வளவு நேரம் தொழுகையைத் தாமதப்படுத்தியதாக உங்களிடம் கூறப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “எனக்கு சரியாக நினைவில்லை” என விடையளித்தார்கள்.
மேலும் அவர்கள், “நான் தலைமை தாங்கித் தொழுவித்தாலும் தனியாகத் தொழுதாலும் நபி (ஸல்) அன்றிரவு இஷாத் தொழுகையைத் தொழுததைப் போன்று தாமதித்துத் தொழவே விரும்புகின்றேன். நீங்கள் இஷாவைத் தனியாகத் தொழும்போதோ அல்லது மக்களுக்குத் தலைமைத் தாங்கிக் கூட்டுத் தொழுகை நடத்தும்போதோ தாமதித்துத் தொழுவது உங்களுக்குச் சிரமமாகத் தோன்றினால் இதற்கு இடைப்பட்ட மத்திய நேரத்தில் அதைத் தொழுதுகொள்ளுங்கள். அவசரப்படவும் வேண்டாம்; தாமதிக்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள்.