அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1085

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏ ‏

دَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ ‏ ‏بِئْرِ مَعُونَةَ ‏ ‏ثَلَاثِينَ صَبَاحًا يَدْعُو عَلَى ‏ ‏رِعْلٍ ‏ ‏وَذَكْوَانَ ‏ ‏وَلِحْيَانَ ‏ ‏وَعُصَيَّةَ ‏ ‏عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الَّذِينَ قُتِلُوا ‏ ‏بِبِئْرِ مَعُونَةَ ‏ ‏قُرْآنًا قَرَأْنَاهُ حَتَّى ‏ ‏نُسِخَ ‏ ‏بَعْدُ أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘பிஃரு மஊனா’ (எனுமிடத்தில், இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கச் சென்ற தம்) தோழர்களைக் கொன்று, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஃலு, தக்வான், லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கு எதிராக முப்பது வைகறை(த் தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் அல்லாஹ் அருளிய, “நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” எனும் ஒரு வசனத்தை (அவனால் அது) மாற்றப்படும்வரை நாங்கள் ஓதிக்கொண்டிருந்தோம்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்புகள் :

“ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினாலோ மறக்கடித்தாலோ, அதற்கொப்பானதையோ அதைவிடச் சிறந்ததையோ நாம் தருவோம். திண்ணமாக அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆதிக்கப் பேராற்றல் உடையவன் என்பது (நபியே!) உமக்குத் தெரியுமன்றோ?” எனும் (2:106) வசனத்திற்கு ஒப்ப, மாற்றப்பட்ட / மறக்கடிக்கப்பட்ட இறைவசனத்திற்குப் பகரமாக அருளப்பட்ட இறைவசனத்தை அறியும்வரை, இறைவசனம் ஒன்று மாற்றப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இமாம் ஷாஃபியீ (ரஹ்), தமது ஆய்வு நூலான ‘அர்ரிஸாலா’வில் குறிப்பிடுகின்றார்.

மேற்காணும் ஹதீஸுக்கு விளக்கமாக, இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹ்), ஸஹீஹுல் புகாரீக்கான தமது விரிவுரையான ‘ஃபத்ஹுல் பாரீ’யில், “நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” எனும் இறைவசனம், “அல்லாஹ்வின் அறவழியில் கொல்லப்பட்டோரை, இறந்தவர்கள் எனக் கொள்ளாதீர்கள். அவர்கள் திண்ணமாகத் தம் இறைவனிடத்தில் உயிர் வாழ்பவர்கள்; உணவளிக்கப்படுபவர்கள்” எனும் (3:169) இறைவசனத்தால் மாற்றப்பட்டது என்பதை இஸ்ஹாக் பின் அபீதல்ஹா (ரஹ்) வழியாக உமர் பின் யூனுஸ் அறிவிப்பதாகப் பதிவு செய்திருக்கின்றார். இமாம் இபுனு கஸீர் (ரஹ்), தம் இறைமறையின் விரிவுரையில் அதை உறுதி செய்திருக்கின்றார்.

Share this Hadith:

Leave a Comment