و حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ الْعُطَارِدِيُّ قَالَ سَمِعْتُ أَبَا رَجَاءٍ الْعُطَارِدِيَّ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ :
كُنْتُ مَعَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ لَهُ فَأَدْلَجْنَا لَيْلَتَنَا حَتَّى إِذَا كَانَ فِي وَجْهِ الصُّبْحِ عَرَّسْنَا فَغَلَبَتْنَا أَعْيُنُنَا حَتَّى بَزَغَتْ الشَّمْسُ قَالَ فَكَانَ أَوَّلَ مَنْ اسْتَيْقَظَ مِنَّا أَبُو بَكْرٍ وَكُنَّا لَا نُوقِظُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَنَامِهِ إِذَا نَامَ حَتَّى يَسْتَيْقِظَ ثُمَّ اسْتَيْقَظَ عُمَرُ فَقَامَ عِنْدَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ وَرَأَى الشَّمْسَ قَدْ بَزَغَتْ قَالَ ارْتَحِلُوا فَسَارَ بِنَا حَتَّى إِذَا ابْيَضَّتْ الشَّمْسُ نَزَلَ فَصَلَّى بِنَا الْغَدَاةَ فَاعْتَزَلَ رَجُلٌ مِنْ الْقَوْمِ لَمْ يُصَلِّ مَعَنَا فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا فُلَانُ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَنَا قَالَ يَا نَبِيَّ اللَّهِ أَصَابَتْنِي جَنَابَةٌ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَيَمَّمَ بِالصَّعِيدِ فَصَلَّى ثُمَّ عَجَّلَنِي فِي رَكْبٍ بَيْنَ يَدَيْهِ نَطْلُبُ الْمَاءَ وَقَدْ عَطِشْنَا عَطَشًا شَدِيدًا فَبَيْنَمَا نَحْنُ نَسِيرُ إِذَا نَحْنُ بِامْرَأَةٍ سَادِلَةٍ رِجْلَيْهَا بَيْنَ مَزَادَتَيْنِ فَقُلْنَا لَهَا أَيْنَ الْمَاءُ قَالَتْ أَيْهَاهْ أَيْهَاهْ لَا مَاءَ لَكُمْ قُلْنَا فَكَمْ بَيْنَ أَهْلِكِ وَبَيْنَ الْمَاءِ قَالَتْ مَسِيرَةُ يَوْمٍ وَلَيْلَةٍ قُلْنَا انْطَلِقِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ وَمَا رَسُولُ اللَّهِ فَلَمْ نُمَلِّكْهَا مِنْ أَمْرِهَا شَيْئًا حَتَّى انْطَلَقْنَا بِهَا فَاسْتَقْبَلْنَا بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهَا فَأَخْبَرَتْهُ مِثْلَ الَّذِي أَخْبَرَتْنَا وَأَخْبَرَتْهُ أَنَّهَا مُوتِمَةٌ لَهَا صِبْيَانٌ أَيْتَامٌ فَأَمَرَ بِرَاوِيَتِهَا فَأُنِيخَتْ فَمَجَّ فِي الْعَزْلَاوَيْنِ الْعُلْيَاوَيْنِ ثُمَّ بَعَثَ بِرَاوِيَتِهَا فَشَرِبْنَا وَنَحْنُ أَرْبَعُونَ رَجُلًا عِطَاشٌ حَتَّى رَوِينَا وَمَلَأْنَا كُلَّ قِرْبَةٍ مَعَنَا وَإِدَاوَةٍ وَغَسَّلْنَا صَاحِبَنَا غَيْرَ أَنَّا لَمْ نَسْقِ بَعِيرًا وَهِيَ تَكَادُ تَنْضَرِجُ مِنْ الْمَاءِ يَعْنِي الْمَزَادَتَيْنِ ثُمَّ قَالَ هَاتُوا مَا كَانَ عِنْدَكُمْ فَجَمَعْنَا لَهَا مِنْ كِسَرٍ وَتَمْرٍ وَصَرَّ لَهَا صُرَّةً فَقَالَ لَهَا اذْهَبِي فَأَطْعِمِي هَذَا عِيَالَكِ وَاعْلَمِي أَنَّا لَمْ نَرْزَأْ مِنْ مَائِكِ فَلَمَّا أَتَتْ أَهْلَهَا قَالَتْ لَقَدْ لَقِيتُ أَسْحَرَ الْبَشَرِ أَوْ إِنَّهُ لَنَبِيٌّ كَمَا زَعَمَ كَانَ مِنْ أَمْرِهِ ذَيْتَ وَذَيْتَ فَهَدَى اللَّهُ ذَاكَ الصِّرْمَ بِتِلْكَ الْمَرْأَةِ فَأَسْلَمَتْ وَأَسْلَمُوا
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ حَدَّثَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ الْأَعْرَابِيُّ عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَسَرَيْنَا لَيْلَةً حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قُبَيْلَ الصُّبْحِ وَقَعْنَا تِلْكَ الْوَقْعَةَ الَّتِي لَا وَقْعَةَ عِنْدَ الْمُسَافِرِ أَحْلَى مِنْهَا فَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ سَلْمِ بْنِ زَرِيرٍ وَزَادَ وَنَقَصَ وَقَالَ فِي الْحَدِيثِ فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَرَأَى مَا أَصَابَ النَّاسَ وَكَانَ أَجْوَفَ جَلِيدًا فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِشِدَّةِ صَوْتِهِ بِالتَّكْبِيرِ فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا ضَيْرَ ارْتَحِلُوا وَاقْتَصَّ الْحَدِيثَ
நபி (ஸல்) மேற்கொண்ட ஒரு பயணத்தில் நானும் அவர்களுடன் கலந்து கொண்டிருந்தேன். அன்று நாங்கள் இரவு முழுவதும் பயணம் செய்தோம். அதிகாலை நேரம் நெருங்கியபோது நாங்கள் (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தோம். அப்போது எங்களையும் அறியாமல் கண்ணயர்ந்து, சூரியன் உதயமாகும்வரை உறங்கிவிட்டோம். எங்களில் அபூபக்ரு (ரலி) அவர்கள்தாம் முதலில் விழித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண் விழிக்காதவரை அவர்களை நாங்கள் உறக்கத்திலிருந்து எழுப்புவதில்லை. பிறகு உமர் (ரலி) எழுந்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று உரத்த குரலில் தக்பீர் கூறலானார்கள். (உமர் (ரலி) அவர்களின் தக்பீரைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விழித்துத் தலையை உயர்த்திப் பார்த்தபோது சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, “இங்கிருந்து புறப்படுங்கள்” என்று கூறினார்கள். பிறகு எங்களுடன் பயணம் புறப்பட்டார்கள். சூரியன் வெண்மையானபோது ஓரிடத்தில் இறங்கி எங்களுக்கு வைகறைத் தொழுகை (ஃபஜ்ருத்) தொழுவித்தார்கள்.
அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் மக்களைவிட்டு விலகியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துத் திரும்பியதும் அவரிடம், “நீங்கள் எங்களுடன் தொழாமலிருக்கக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள், அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு(க்குளியல் கடமையாகி) விட்டது” என்றார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி அவர் மண்ணில் ‘தயம்மும்’ செய்துவிட்டுத் தொழுதார். அப்போது எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டிருந்தது. எனவே, தம் முன்னிருந்த ஒரு பயணக் குழுவினருடன் சேர்ந்து தண்ணீர் தேடிவருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை வேகப்படுத்தினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண் தண்ணீர் நிரம்பிய இரு தோல் பைகளுக்கிடையே தன் கால்களைத் தொங்க விட்டபடி (ஒட்டகத்தில் வந்துகொண்டு) இருந்தாள்.
நாங்கள் அப்பெண்ணிடம், “தண்ணீர் எங்கே (கிடைக்கும்)?” என்று கேட்டோம், அதற்கு அப்பெண், “அது வெகு தொலைவில் உள்ளது. (இங்கு எங்கும்) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது” என்றாள். நாங்கள் “உன் குடும்பத்தா(ர் தங்கியி)ருக்கும் தண்ணீரு(ள்ள இடத்து)க்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது?” என்று கேட்டோம். அதற்கு அப்பெண், “ஒரு பகல் ஓர் இரவு பயண தூரம்” என்று பதிலளித்தாள்.
நாங்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட!” என்றோம். அதற்கு அவள், “அல்லாஹ்வின் தூதரா? அவர் யார்?” என்று கேட்டாள். நாங்கள் என்ன சொல்லியும் அந்தப் பெண்ணை எங்களால் (தண்ணீர் தர) இசைய வைக்க முடியவில்லை. இறுதியில் அவளை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துக்கொண்டு வந்தோம். அப்பெண்ணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் கொண்டு நிறுத்தியபோது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கேட்டார்கள். அவள் எங்களிடம் சொன்னதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் சொன்னாள். மேலும், அவள் (தண்ணீர் சுமக்கும் தனது ஒட்டகத்திலிருந்தபடி) தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கூறியதற்கிணங்க அவளது ஒட்டகம் மண்டியிட்டுப் படுக்கவைக்கப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாய் கொப்புளித்து அந்தத் தண்ணீர் பைகளின் மேவாயினூடே உமிழ்ந்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தைக் கிளப்பிவிட (அது எங்கள் அருகில் வந்தது) நாங்கள் தண்ணீர் அருந்தினோம். அங்கிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகத்துடன் இருந்தோம். எங்கள் ஒட்டகங்களைத் தவிர நாங்கள் அனைவரும் தாகம் தீர நீரருந்தினோம். மேலும், எங்களிடமிருந்த அனைத்துத் தோல் பைகளிலும் பாத்திரங்களிலும் நீரை நிரப்பிக்கொண்டோம். (குளியல் கடமையாகிருந்த) எங்கள் தோழரைக் குளிக்கவைத்தோம். (ஆயினும்) அவ்விரு தண்ணீர் பைகளும் ஊதி வெடித்துவிடுமளவுக்கு நீர் (குறையாமல்) நிரம்பியிருந்தது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களிடமுள்ள(உணவுப் பண்டத்)தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் அந்தப் பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் திரட்டினோம். பின்னர் அவற்றை ஒரு பையில் வைத்துக் கட்டியபின் அல்லாஹ்வின் தூதர் அவளிடம், “நீ சென்று உன் குடும்பத்தாருக்கு இதை ஊட்டுவாயாக! உனது தண்ணீரில் சிறிதும் நாங்கள் குறைத்துவிடவில்லை என்பதை அறிந்துகொள்வாயாக!” என்று கூறினார்கள்.
அப்பெண் தன் குடும்பத்தாரிடம் சென்று, “நான் (இன்று) சந்தித்தவர் மகாமந்திரவாதியாக இருக்க வேண்டும். அல்லது அவரே கூறியதைப் போன்று அவர் ஓர் இறைத்தூதராக இருக்க வேண்டும். அவர் மூலம் இன்னின்னவாறு (அற்புதம்) நிகழ்ந்தது!” என்று விவரித்துக் கூறினாள். அந்தப் பெண்ணால் அவளைச் சுற்றிலும் வாழ்ந்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினான். அவளும் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர்.
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸெய்ன் (ரலி)
குறிப்புகள் :
அவ்ஃப் பின் அபீஜமீலா அல்அஃராபீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது ஓரிரவில் பயணித்தோம். இரவின் இறுதிப் பகுதியில் அதிகாலைக்கு முன்பாக ஓரிடத்தில் ஒரு தூக்கம் தூங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து) எங்களைச் சூரிய வெப்பம்தான் விழிக்கச் செய்தது …” என்றும்
“..உரத்த குரலுக்கும் நெஞ்சுரத்துக்கும் உரிய உமர் பின் அல்கத்தாப் (ரலி), கண்விழித்து மக்களின் நிலையைக் கண்டபோது உரத்த குரலில் தக்பீர் சொன்னார்கள். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்விழித்தார்கள். அவர்களிடம் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட(உறக்கம் மிகைத்துவிட்ட)தைப் பற்றி முறையிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘போகட்டும், இங்கிருந்து புறப்படுங்கள்’ என்று கூறினார்கள்” என்றும் ஒரிரு சொற்கள் கூடுதல்-குறைவாக இடம்பெற்றுள்ளது.