அத்தியாயம்: 52, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4980

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الْقَيْسِيُّ، قَالاَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، حَدَّثَنِي نُعَيْمُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏ ‏

قَالَ أَبُو جَهْلٍ هَلْ يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ بَيْنَ أَظْهُرِكُمْ قَالَ فَقِيلَ نَعَمْ ‏.‏ فَقَالَ وَاللاَّتِ وَالْعُزَّى لَئِنْ رَأَيْتُهُ يَفْعَلُ ذَلِكَ لأَطَأَنَّ عَلَى رَقَبَتِهِ أَوْ لأُعَفِّرَنَّ وَجْهَهُ فِي التُّرَابِ – قَالَ – فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي زَعَمَ لِيَطَأَ عَلَى رَقَبَتِهِ – قَالَ – فَمَا فَجِئَهُمْ مِنْهُ إِلاَّ وَهُوَ يَنْكِصُ عَلَى عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدَيْهِ – قَالَ – فَقِيلَ لَهُ مَا لَكَ فَقَالَ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا مِنْ نَارٍ وَهَوْلاً وَأَجْنِحَةً ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لَوْ دَنَا مِنِّي لاَخْتَطَفَتْهُ الْمَلاَئِكَةُ عُضْوًا عُضْوًا ‏”‏ ‏.‏ قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لاَ نَدْرِي فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ أَوْ شَىْءٌ بَلَغَهُ ‏{‏ كَلاَّ إِنَّ الإِنْسَانَ لَيَطْغَى * أَنْ رَآهُ اسْتَغْنَى * إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى * أَرَأَيْتَ الَّذِي يَنْهَى * عَبْدًا إِذَا صَلَّى * أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى * أَوْ أَمَرَ بِالتَّقْوَى * أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّى‏}‏ – يَعْنِي أَبَا جَهْلٍ – ‏{‏ أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى * كَلاَّ لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ * نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ * فَلْيَدْعُ نَادِيَهُ * سَنَدْعُ الزَّبَانِيَةَ * كَلاَّ لاَ تُطِعْهُ‏}‏


زَادَ عُبَيْدُ اللَّهِ فِي حَدِيثِهِ قَالَ وَأَمَرَهُ بِمَا أَمَرَهُ بِهِ ‏.‏ وَزَادَ ابْنُ عَبْدِ الأَعْلَى فَلْيَدْعُ نَادِيَهُ يَعْنِي قَوْمَهُ

“உங்களிடையே முஹம்மது (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கின்றாரா?” என்று அபூஜஹ்லு கேட்டான். அப்போது “ஆம்” என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான்.

அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று தன் கைகளால் சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவன், “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் (எனக்குள்) பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்” என்று சொன்னான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இதைப் பற்றிக் கூறுகையில்), “அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.

ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்,

“மனிதன், திண்ணமாக வரம்பு மீறி நடந்து கொள்கின்றான்.
அவனுக்கு (இறைவனிடமிருந்து) எந்தத் தேவையுமில்லை என அகந்தை கொள்கின்றான்.
ஆனால், அவன் உமது இறைவனிடம்தான் வந்து சேர வேண்டும்.
உமக்குத் தெரியுமன்றோ, (உம்மைத்) தடுத்தவனை …?
(என்) அடியார் (ஆகிய நீர் என்னைத்) தொழுது கொண்டிருக்கும்போது.
‘அவர் நேர்வழியில் வாழ்(ந்து, மக்களை அதன்பால் அழைக்)கின்றார்;
இறையச்சத்தைத் தூண்டுகின்றார்’ (என்று அவன் சினந்தெழுந்தான்) என்பது உமக்குத் தெரியுமன்றோ?
சத்தியத்தை (மறுத்து) அவன் பொய்யெனக் கொண்டதும் முகந் திருப்பிக் கொண்டதும் உமக்குத் தெரியுமன்றோ?
திண்ணமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா?
எச்சரிக்கை! அவன் (தனது அத்துமீறும் போக்கிலிருந்து) விலகிக் கொள்ளவில்லை என்றால், திண்ணமாக வன்மையுடன் நாம் பற்றி இழுப்போம் – அவனுடைய நெற்றி மயிரை.
அது, (செருக்குத் தலைக்கேறிய,) சத்தியத்தைப் பொய்யெனக் கொள்கின்ற, (தவறுக்கு மேல்) தவறிழைக்கின்ற (அவனுடைய) நெற்றி மயிர்.
(அவ்வேளை,) தனது ஆதரவுக் கும்பலை அவன் துணைக்கு அழைத்துக் கொள்ளட்டும்;
(நரகத்தின்) காவலர்களை நாம் அழைப்போம்.
எச்சரிக்கை! அவனுக்கு நீர் பணிந்து விடாதீர்! (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து (உமது இறைவனை) நெருங்கிக் கொள்வீராக!” எனும் (96:6-19) வசனங்களை அருளினான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவனுக்கு அவர் எதைக் கட்டளையிட்டாரோ அதை அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. முஹம்மது பின் அப்தில் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவன் தன் ஆதரவுக் கும்பலை அழைக்கட்டும்” என்பதற்கு, “அவன் தன் சமுதாயத்தாரை அழைக்கட்டும் என்று பொருள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: