அத்தியாயம்: 28, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3173

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ أُخْتَ الرُّبَيِّعِ أُمَّ حَارِثَةَ، جَرَحَتْ إِنْسَانًا فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”الْقِصَاصَ الْقِصَاصَ‏”‏ ‏.‏ فَقَالَتْ أُمُّ الرَّبِيعِ يَا رَسُولَ اللَّهِ أَيُقْتَصُّ مِنْ فُلاَنَةَ وَاللَّهِ لاَ يُقْتَصُّ مِنْهَا ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”سُبْحَانَ اللَّهِ يَا أُمَّ الرَّبِيعِ الْقِصَاصُ كِتَابُ اللَّهِ‏”‏ ‏.‏ قَالَتْ لاَ وَاللَّهِ لاَ يُقْتَصُّ مِنْهَا أَبَدًا ‏.‏ قَالَ فَمَا زَالَتْ حَتَّى قَبِلُوا الدِّيَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏”‏

ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) ஒருவரை(த் தாக்கி)க் காயப்படுத்திவிட்டார். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்), “பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்கொள்க)” என்று கூறினார்கள்.

அப்போது உம்முர் ரபீஉ (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்” என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி), “அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது” என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின், அதை அல்லாஹ் உண்மையாக்கிவிடுகின்றான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3172

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏

غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَزْوَةَ تَبُوكَ – قَالَ وَكَانَ يَعْلَى يَقُولُ تِلْكَ الْغَزْوَةُ أَوْثَقُ عَمَلِي عِنْدِي – فَقَالَ عَطَاءٌ قَالَ صَفْوَانُ قَالَ يَعْلَى كَانَ لِي أَجِيرٌ فَقَاتَلَ إِنْسَانًا فَعَضَّ أَحَدُهُمَا يَدَ الآخَرِ – قَالَ لَقَدْ أَخْبَرَنِي صَفْوَانُ أَيُّهُمَا عَضَّ الآخَرَ – فَانْتَزَعَ الْمَعْضُوضُ يَدَهُ مِنْ فِي الْعَاضِّ فَانْتَزَعَ إِحْدَى ثَنِيَّتَيْهِ فَأَتَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَهْدَرَ ثَنِيَّتَهُ


وَحَدَّثَنَاهُ عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். – என்னைப் பொருத்தவரை என் செயல்களிலேயே அந்த அறப்போர்தான் என்னிடம் மிகவும் வலுவானதாகும் – என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒருவருடன் சண்டையிட்டார். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரின் கையைக் கடித்துவிட்டார்.

கடிபட்டவர் கடித்தவரின் வாயிலிருந்து தமது கையை இழுத்தார். அப்போது அவருடைய முன்பற்களில் இரண்டில் ஒன்று கழன்று(விழுந்து)விட்டது. பிறகு இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தனர். அப்போது நபி (ஸல்) அவரது முன்பல்லுக்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)


குறிப்பு :

“யஅலா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் அவர்களுடைய மகன் ஸஃப்வான் (ரஹ்), கடித்தவர் யார் என்று என்னிடம் அறிவித்தார்கள் (நான் மறந்துவிட்டேன்) என்று அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) கூறினார்கள்” என மேற்காணும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3171

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى ابْنِ مُنْيَةَ عَنْ أَبِيهِ قَالَ :‏

أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ وَقَدْ عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتَاهُ – يَعْنِي الَّذِي عَضَّهُ – قَالَ فَأَبْطَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ ‏ “‏أَرَدْتَ أَنْ تَقْضَمَهُ كَمَا يَقْضَمُ الْفَحْلُ‏”‏ ‏

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு வழக்குடன்) வந்தார். அவர் மற்றொருவரின் கையைக் கடித்தபோது, (கடிபட்ட) அவர் தமது கையை இழுக்க, கடித்தவரது முன்பற்கள் இரண்டு விழுந்து விட்டன. அப்போது நபி (ஸல்) (இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என) அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். மேலும் “நீ அவரை, கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்க முனைந்தாய்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் முன்யா (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3170

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ :‏

 أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتُهُ أَوْ ثَنَايَاهُ فَاسْتَعْدَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏مَا تَأْمُرُنِي تَأْمُرُنِي أَنْ آمُرَهُ أَنْ يَدَعَ يَدَهُ فِي فِيكَ تَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ ادْفَعْ يَدَكَ حَتَّى يَعَضَّهَا ثُمَّ انْتَزِعْهَا‏”‏ ‏

ஒருவர் மற்றொருவரின் கையைக் கடித்தார். கடிபட்டவர் தமது கையை இழுக்க, (கடித்த) அவருடைய முன்பல் / முன்பற்கள் விழுந்துவிட்டன. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உதவியை நாடினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று நீ கடித்துக் கொண்டிருக்கும்வரை அவர் தமது கையை உனது வாய்க்குள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடச் சொல்கிறாயா? நீ உனது கையை அவர் கடித்து முடிக்கும்வரை அவரது வாய்க்குள் விட்டுவை. பிறகு இழுத்துப் பார் (தெரியும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3169

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ بُدَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى :‏

أَنَّ أَجِيرًا، لِيَعْلَى ابْنِ مُنْيَةَ عَضَّ رَجُلٌ ذِرَاعَهُ فَجَذَبَهَا فَسَقَطَتْ ثَنِيَّتُهُ فَرُفِعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَبْطَلَهَا وَقَالَ ‏ “أَرَدْتَ أَنْ تَقْضَمَهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ‏”‏

யஅலா பின் முன்யா (ரலி) அவர்களுடைய ஊழியர் ஒருவரின் முன்கையை ஒருவர் கடித்துவிட்டார். ஊழியர் தனது கையை இழுக்க, கடித்தவரது முன்பல் ஒன்று (கழன்று) விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவ்வழக்கை நபியவர்கள் தள்ளுபடி செய்தார்கள். மேலும், “கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று அவரது கையை நீ கடிக்க முனைந்தாய். (எனவே, உனக்கு இழப்பீடு இல்லை)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் முன்யா (ரலி) வழியாக ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3168

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ، – يَعْنِي ابْنَ هِشَامٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ :‏

أَنَّ رَجُلاً، عَضَّ ذِرَاعَ رَجُلٍ فَجَذَبَهُ فَسَقَطَتْ ثَنِيَّتُهُ فَرُفِعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَبْطَلَهُ وَقَالَ ‏ “‏أَرَدْتَ أَنْ تَأْكُلَ لَحْمَهُ‏”‏

ஒருவர், இன்னொருவரின் முன்கையைக் கடித்தார். அவர் தமது கையை இழுக்க, (கடித்த) அவரது முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார்கள். “நீ அவரது இறைச்சியை உண்ணப் பார்த்தாய் (அதனால் அவர் கையை இழுத்தார். எனவே, உனது பல்லுக்கு இழப்பீடு இல்லை)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3167

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ :‏

قَاتَلَ يَعْلَى ابْنُ مُنْيَةَ أَوِ ابْنُ أُمَيَّةَ رَجُلاً فَعَضَّ أَحَدُهُمَا صَاحِبَهُ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ فَنَزَعَ ثَنِيَّتَهُ – وَقَالَ ابْنُ الْمُثَنَّى ثَنِيَّتَيْهِ – فَاخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏أَيَعَضُّ أَحَدُكُمْ كَمَا يَعَضُّ الْفَحْلُ لاَ دِيَةَ لَهُ”‏ ‏‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ يَعْلَى، عَنْ يَعْلَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏

யஅலா பின் முன்யா / உமய்யா (ரலி) அவர்களுக்கும் மற்றொருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.

அப்போது நபி (ஸல்), “உங்களில் எவராவது தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா?  (பல்லிழந்த) இவருக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “கடித்தவரின் முன்பற்கள் இரண்டு விழுந்துவிட்டன” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 28, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3166

وَحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ جَارِيَةً، وُجِدَ رَأْسُهَا قَدْ رُضَّ بَيْنَ حَجَرَيْنِ فَسَأَلُوهَا مَنْ صَنَعَ هَذَا بِكِ فُلاَنٌ فُلاَنٌ حَتَّى ذَكَرُوا يَهُودِيًّا فَأَوْمَتْ بِرَأْسِهَا فَأُخِذَ الْيَهُودِيُّ فَأَقَرَّ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرَضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ ‏

ஒரு சிறுமி இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். மக்கள் அவளிடம், “உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னவனா? இன்னவனா?” என்று கேட்டுவரும்போது, யூதன் ஒருவனின் பெயரை அவர்கள் கூறியதும், அச்சிறுமி (“ஆம்” அவன்தான் என்று) தலையால் சைகை செய்தாள். அந்த யூதன் பிடிக்கப்பட்டு (விசாரிக்கப் பட்டதில்), குற்றத்தை ஒப்புக்கொண்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவனது தலையில் கல்லைப் போட்டு நசுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3165

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَجُلاً مِنَ الْيَهُودِ قَتَلَ جَارِيَةً مِنَ الأَنْصَارِ عَلَى حُلِيٍّ لَهَا ثُمَّ أَلْقَاهَا فِي الْقَلِيبِ وَرَضَخَ رَأْسَهَا بِالْحِجَارَةِ فَأُخِذَ فَأُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهِ أَنْ يُرْجَمَ حَتَّى يَمُوتَ فَرُجِمَ حَتَّى مَاتَ ‏.‏


وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

யூதர்களில் ஒருவன் அன்ஸாரிகளில் ஒரு சிறுமியை, அவள் அணிந்திருந்த நகைக்காகக் கொலை செய்து, அவளை ஒரு பாழடைந்த கிணற்றில் போட்டு, அவளது தலையைக் கல்லால் நசுக்கினான். அவன் பிடிக்கப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். சாகும்வரை அவனைக் கல்லால் அடிக்குமாறு (மரண தண்டனை விதித்து) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவன் கல்லால் எறிந்து கொல்லப்பட்டான்.

அறிவிப்பாளர் : ‏அனஸ் (ரலி)

அத்தியாயம்: 28, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3164

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏ 

أَنَّ يَهُودِيًّا، قَتَلَ جَارِيَةً عَلَى أَوْضَاحٍ لَهَا فَقَتَلَهَا بِحَجَرٍ – قَالَ – فَجِيءَ بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَبِهَا رَمَقٌ فَقَالَ لَهَا ‏ “‏أَقَتَلَكِ فُلاَنٌ‏”‏ ‏.‏ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ ثُمَّ قَالَ لَهَا الثَّانِيَةَ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ ثُمَّ سَأَلَهَا الثَّالِثَةَ فَقَالَتْ نَعَمْ ‏.‏ وَأَشَارَتْ بِرَأْسِهَا فَقَتَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ حَجَرَيْنِ ‏.‏


وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَهُ وَفِي حَدِيثِ ابْنِ إِدْرِيسَ فَرَضَخَ رَأْسَهُ بَيْنَ حَجَرَيْنِ ‏.‏

யூதனொருவன் ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கல் எறிந்து கொன்றுவிட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்), “இன்னவரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டார்கள். அவள் “இல்லை” என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், “இன்னவரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டார்கள். அவள் அப்போதும் “இல்லை” என்று தலையாட்டினாள்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், (ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு) “இன்னவரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டபோது அவள் “ஆம்” என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவன் ஒப்புக்கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை(நசுக்கி)க் கொல்லுமாறு நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு கற்களுக்கிடையே அவனது தலையை வைத்து நசுக்கிக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.