حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ كُلُّهُمْ عَنْ أَبِي عَاصِمٍ وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى حَدَّثَنَا الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ قَالَ أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ عَنْ ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ قَالَ :
حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ فَبَكَى طَوِيلًا وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِنِّي كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدْ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ فَبَسَطَ يَمِينَهُ قَالَ فَقَبَضْتُ يَدِي قَالَ مَا لَكَ يَا عَمْرُو قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ تَشْتَرِطُ بِمَاذَا قُلْتُ أَنْ يُغْفَرَ لِي قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَجَلَّ فِي عَيْنِي مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلَأَ عَيْنَيَّ مِنْهُ إِجْلَالًا لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لِأَنِّي لَمْ أَكُنْ أَمْلَأُ عَيْنَيَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِي مَا حَالِي فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلَا تَصْحَبْنِي نَائِحَةٌ وَلَا نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَيَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي
அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அவர்களது மரணத் தருவாயில் நாங்கள் அவரிடம் சென்றோம். நெடுநேரம் அழுத பின்னர் அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது, “அருமைத் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னின்ன நற்செய்திகளைக் கூறியிருக்கிறார்களே! (ஏன் அழுகை)?” என்று அவரின் மகன் கேட்டார். அம்ரிப்னில் ஆஸ் (ரலி) தமது முகத்தை(த்தம் மகனை நோக்கி)த் திருப்பி, “நமது சேமிப்புகளுள் மிகச் சிறந்தது வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறியதுதான். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றேன்.
(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருந்ததில்லை. முடியுமெனில் அவர்களைக் கொன்றுவிடுவது எனக்கு மிக்க விருப்பமானதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.
(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை(ப் பற்றிய சிந்தனையை) ஏற்படுத்தியபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள்; நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன் என்று கூறினேன். நபி (ஸல்) தமது வலது கரத்தை நீட்டினார்கள். ஆனால், நான் என் கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்), அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றேன் என்று கூறினேன். நபி (ஸல்), எதில் நிபந்தனைகளை விதிக்கப்போகிறீர்? என்று கேட்டார்கள். எனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்), முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; (இஸ்லாத்துக்காக நாடுதுறக்கும் தியாகமான) ஹிஜ்ரத்தும் முந்தைய பாவங்களை அழித்து விடும்; (இஸ்லாமியக் கடமையான) ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்து விடும் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அவ்வேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நான் விரும்பும் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் எனது கண்களால் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் என்னால் இயலாமலாகிவிடும். ஏனெனில், அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் நான் அவர்களை ஏறெடுத்து முழுமையாகப் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.
பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்து விட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என்னை நெருங்கக் கூடாது. என்னை (குழிக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும் போது என் மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரமளவுக்கு நீங்கள் என் மண்ணறையைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்)களிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டு கொள்வேன்” என்று அம்ரிப்னில் ஆஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் ஷிமாஸா அல் மஹ்ரீ (ரலி)