و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
دَخَلَ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ النَّاسَ جُلُوسًا بِبَابِهِ لَمْ يُؤْذَنْ لِأَحَدٍ مِنْهُمْ قَالَ فَأُذِنَ لِأَبِي بَكْرٍ فَدَخَلَ ثُمَّ أَقْبَلَ عُمَرُ فَاسْتَأْذَنَ فَأُذِنَ لَهُ فَوَجَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا حَوْلَهُ نِسَاؤُهُ وَاجِمًا سَاكِتًا قَالَ فَقَالَ لَأَقُولَنَّ شَيْئًا أُضْحِكُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَ بِنْتَ خَارِجَةَ سَأَلَتْنِي النَّفَقَةَ فَقُمْتُ إِلَيْهَا فَوَجَأْتُ عُنُقَهَا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ هُنَّ حَوْلِي كَمَا تَرَى يَسْأَلْنَنِي النَّفَقَةَ فَقَامَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ يَجَأُ عُنُقَهَا فَقَامَ عُمَرُ إِلَى حَفْصَةَ يَجَأُ عُنُقَهَا كِلَاهُمَا يَقُولُ تَسْأَلْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَيْسَ عِنْدَهُ فَقُلْنَ وَاللَّهِ لَا نَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَبَدًا لَيْسَ عِنْدَهُ ثُمَّ اعْتَزَلَهُنَّ شَهْرًا أَوْ تِسْعًا وَعِشْرِينَ ثُمَّ نَزَلَتْ عَلَيْهِ هَذِهِ الْآيَةُ”يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ …. حَتَّى بَلَغَ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا“
قَالَ فَبَدَأَ بِعَائِشَةَ فَقَالَ يَا عَائِشَةُ إِنِّي أُرِيدُ أَنْ أَعْرِضَ عَلَيْكِ أَمْرًا أُحِبُّ أَنْ لَا تَعْجَلِي فِيهِ حَتَّى تَسْتَشِيرِي أَبَوَيْكِ قَالَتْ وَمَا هُوَ يَا رَسُولَ اللَّهِ فَتَلَا عَلَيْهَا الْآيَةَ قَالَتْ أَفِيكَ يَا رَسُولَ اللَّهِ أَسْتَشِيرُ أَبَوَيَّ بَلْ أَخْتَارُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ وَأَسْأَلُكَ أَنْ لَا تُخْبِرَ امْرَأَةً مِنْ نِسَائِكَ بِالَّذِي قُلْتُ قَالَ لَا تَسْأَلُنِي امْرَأَةٌ مِنْهُنَّ إِلَّا أَخْبَرْتُهَا إِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا وَلَا مُتَعَنِّتًا وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا
அபூபக்ரு (ரலி) (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு) வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர், தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்ரு (ரலி) உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் (ரலி) வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. (அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மைச் சுற்றித் தம் மனைவியர் இருக்க, பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அபூபக்ரு (ரலி), ‘நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான் சொல்லப்போகிறேன்’ என்று (மனத்திற்குள்) சொல்லிக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க, நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்துவிட்டேன் என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள். “இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்” என்று கூறினார்கள். உடனே அபூபக்ரு (ரலி) (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா?” என்று அவ்விருவருமே வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம்” என்று கூறினர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் மனைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் மனைவியரிடம் கூறுங்கள் …” என்று தொடங்கி, “ … உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் இந்த (33:28,29) வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காதவரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி), “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்றத் மனைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறை நெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி