அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3607

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ :‏

أَنَّ أَعْرَابِيًّا، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي فِي غَائِطٍ مَضَبَّةٍ وَإِنَّهُ عَامَّةُ طَعَامِ أَهْلِي – قَالَ – فَلَمْ يُجِبْهُ فَقُلْنَا عَاوِدْهُ ‏.‏ فَعَاوَدَهُ فَلَمْ يُجِبْهُ ثَلاَثًا ثُمَّ نَادَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الثَّالِثَةِ فَقَالَ ‏ “‏ يَا أَعْرَابِيُّ إِنَّ اللَّهَ لَعَنَ أَوْ غَضِبَ عَلَى سِبْطٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَسَخَهُمْ دَوَابَّ يَدِبُّونَ فِي الأَرْضِ فَلاَ أَدْرِي لَعَلَّ هَذَا مِنْهَا فَلَسْتُ آكُلُهَا وَلاَ أَنْهَى عَنْهَا ‏”‏ ‏.‏

ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் உடும்புகள் நிறைந்த பள்ளமான பகுதியில் வசிக்கின்றேன். உடும்புதான் என் குடும்பத்தாரின் பொதுவான உணவாகும்” என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளிக்கவில்லை. நாங்கள் அந்தக் கிராமவாசியிடம், “நபியவர்களிடம் மறுபடியும் கேள்” என்று சொன்னோம். அவர் மறுபடியும் கேட்டார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளிக்கவில்லை. இவ்வாறு மூன்று முறை நடந்தது.

மூன்றாவது முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரை அழைத்து, “கிராமவாசியே! அல்லாஹ், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் ஒரு கூட்டத்தாரைச் சபித்தான்; அல்லது கோபப்பட்டான். அவர்களைப் பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளாக மாற்றினான். எனவே, இது (உடும்பு) அவர்களாயிருக்குமோ என்பது எனக்குத் தெரியாது. எனவே, அதை நான் உண்ணவுமாட்டேன்; அதை(உண்ண வேண்டாமென)த் தடை செய்யவுமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3606

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ :‏

قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ مَضَبَّةٍ فَمَا تَأْمُرُنَا أَوْ فَمَا تُفْتِينَا قَالَ ‏ “‏ ذُكِرَ لِي أَنَّ أُمَّةً مِنْ بَنِي إِسْرَائِيلَ مُسِخَتْ ‏”‏ ‏.‏ فَلَمْ يَأْمُرْ وَلَمْ يَنْهَ ‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ قَالَ عُمَرُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَنْفَعُ بِهِ غَيْرَ وَاحِدٍ وَإِنَّهُ لَطَعَامُ عَامَّةِ هَذِهِ الرِّعَاءِ وَلَوْ كَانَ عِنْدِي لَطَعِمْتُهُ إِنَّمَا عَافَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உடும்புகள் நிறைந்த ஒரு பகுதியில் வசிக்கிறோம். எனவே, அதைப் பற்றி எங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றீர்கள்? அல்லது தீர்ப்பளிக்கின்றீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் சிலர் (உயிர்ப் பிராணிகளாக) உருமாற்றப்பெற்றனர் என என்னிடம் கூறப்பட்டது” என்று கூறினார்கள். அதை உண்ணும்படி கட்டளையிடவுமில்லை; உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமில்லை.

அதன் பின்னர் உமர் (ரலி), “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அதன் மூலம் பலருக்குப் பயனளிக்கிறான். இது இடையர்களில் பெரும்பாலோரின் பொது உணவாகும். அது எனக்குக் கிடைத்தால் அதை நான் உண்டிருப்பேன். (தனிப்பட்ட முறையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனம் அதை விரும்பவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3605

وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ جَابِرًا عَنِ الضَّبِّ، فَقَالَ :‏

لاَ تَطْعَمُوهُ ‏.‏ وَقَذِرَهُ وَقَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يُحَرِّمْهُ ‏.‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْفَعُ بِهِ غَيْرَ وَاحِدٍ فَإِنَّمَا طَعَامُ عَامَّةِ الرِّعَاءِ مِنْهُ وَلَوْ كَانَ عِنْدِي طَعِمْتُهُ

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் உடும்புக் கறி (உண்பதைப்) பற்றிக் கேட்டேன். அவர்கள் அதை அருவருப்பாகக் கருதியதால், “அதை உண்ண வேண்டாம்” என்று கூறினார்கள். ஆனால், “நபி (ஸல்) அதைத் தடை செய்யவில்லை. ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அதன் மூலம் பலருக்குப் பயனளிக்கின்றான். இடையர்களின் பொதுவான உணவு அதுதான். அது எனக்குக் கிடைத்தால் அதை நானும் உண்பேன்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) கூறியிருக்கின்றார்கள் என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் முஹம்மது பின் முஸ்லிம் (ரஹ்)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3604

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِضَبٍّ فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهُ وَقَالَ ‏ “‏ لاَ أَدْرِي لَعَلَّهُ مِنَ الْقُرُونِ الَّتِي مُسِخَتْ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சி) கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் உண்ண மறுத்துவிட்டார்கள். மேலும், “எனக்குத் தெரியவில்லை. இது, உருமாற்றப்பட்ட (பழந்) தலைமுறைகளைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3603

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ قَالَ دَعَانَا عَرُوسٌ بِالْمَدِينَةِ فَقَرَّبَ إِلَيْنَا ثَلاَثَةَ عَشَرَ ضَبًّا فَآكِلٌ وَتَارِكٌ فَلَقِيتُ ابْنَ عَبَّاسٍ مِنَ الْغَدِ فَأَخْبَرْتُهُ فَأَكْثَرَ الْقَوْمُ حَوْلَهُ حَتَّى قَالَ بَعْضُهُمْ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ آكُلُهُ وَلاَ أَنْهَى عَنْهُ وَلاَ أُحَرِّمُهُ ‏”‏ ‏.‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ بِئْسَ مَا قُلْتُمْ مَا بُعِثَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مُحِلاًّ وَمُحَرِّمًا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ عِنْدَ مَيْمُونَةَ وَعِنْدَهُ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَامْرَأَةٌ أُخْرَى إِذْ قُرِّبَ إِلَيْهِمْ خِوَانٌ عَلَيْهِ لَحْمٌ فَلَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَأْكُلَ قَالَتْ لَهُ مَيْمُونَةُ إِنَّهُ لَحْمُ ضَبٍّ ‏.‏ فَكَفَّ يَدَهُ وَقَالَ ‏”‏ هَذَا لَحْمٌ لَمْ آكُلْهُ قَطُّ ‏”‏ ‏.‏ وَقَالَ لَهُمْ ‏”‏ كُلُوا ‏”‏ ‏.‏ فَأَكَلَ مِنْهُ الْفَضْلُ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَالْمَرْأَةُ ‏.‏ وَقَالَتْ مَيْمُونَةُ لاَ آكُلُ مِنْ شَىْءٍ إِلاَّ شَىْءٌ يَأْكُلُ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

மதீனாவில் புதிதாக மணமுடித்த (மணமகன்) ஒருவர் எங்களை விருந்துக்காக அழைத்தார். அவர் எங்களிடம் (சமைக்கப்பட்ட) பதின்மூன்று உடும்புகளைக் கொண்டுவந்து வைத்தார். மக்களில் சிலர் உண்டனர். வேறுசிலர் உண்ணவில்லை.

மறுநாள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, அதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் அதிகமாகப் பேசினர். எந்த அளவுக்கென்றால், அவர்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடும்பை உண்ணவுமாட்டேன்; உண்பதைத் தடுக்கவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்” எனக் கூறியுள்ளார்கள் என்று பேசினார்கள்.

இதைக் கேட்ட இப்னு அப்பாஸ் (ரலி), “நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதிக்கப்பட்டவற்றையும் தடை செய்யப்பட்டவற்றையும் அறிவிப்பதற்காகவே அனுப்பப்பட்டார்கள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் துணைவியார்) மைமூனா (ரலி) இல்லத்தில் இருந்தார்கள்.

அப்போது அவர்களுக்கு அருகில் (என் சகோதரர்) ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் மற்றொரு பெண்ணும் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஓர் உணவுவிரிப்பில் இறைச்சி வைக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உண்ண முற்பட்டபோது அவர்களிடம் மைமூனா (ரலி), “இது உடும்புக் கறி” என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தைப் பின்னிழுத்துக்கொண்டார்கள்.

மேலும் “இந்த இறைச்சியை நான் ஒருபோதும் உண்டதில்லை” என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களிடம், “நீங்கள் உண்ணுங்கள்!” என்றார்கள்.

எனவே, அதை ஃபள்லு (ரலி) அவர்களும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் அந்தப் பெண்ணும் உண்டனர். மைமூனா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உண்பதைத் தவிர வேறெதையும் நான் உண்ணமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3602

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ قَالَ ابْنُ نَافِعٍ أَخْبَرَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ :‏

أَهْدَتْ خَالَتِي أُمُّ حُفَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمْنًا وَأَقِطًا وَأَضُبًّا فَأَكَلَ مِنَ السَّمْنِ وَالأَقِطِ وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا وَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

என் தாயாரின் சகோதரி உம்மு ஹுஃபைத் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நெய்யும் பாலாடைக் கட்டியும் உடும்புக் கறிகளும் அன்பளிப்பாக வழங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உண்டார்கள். உடும்புக் கறியை  அவர்களின் மனம் விரும்பாததால் அதை உண்ணாமல் விட்டுவிட்டார்கள்.

ஆனால், உடும்புக் கறி (சமைக்கப்பட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உணவு விரிப்பின் மீது (பிறரால்) உண்ணப்பட்டன. உடும்புக் கறி தடை செய்யப்பட்டதாக இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உணவு விரிப்பில் அவை (பிறராலும்) உண்ணப்பட்டிருக்க மாட்டா.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3601

وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَخْبَرَهُ :‏

أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ وَهْىَ خَالَتُهُ فَقُدِّمَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَحْمُ ضَبٍّ جَاءَتْ بِهِ أُمُّ حُفَيْدٍ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ وَكَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْ بَنِي جَعْفَرٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَأْكُلُ شَيْئًا حَتَّى يَعْلَمَ مَا هُوَ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ وَزَادَ فِي آخِرِ الْحَدِيثِ وَحَدَّثَهُ ابْنُ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ وَكَانَ فِي حَجْرِهَا


وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ فِي بَيْتِ مَيْمُونَةَ بِضَبَّيْنِ مَشْوِيَّيْنِ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمْ وَلَمْ يَذْكُرْ يَزِيدَ بْنَ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ ‏.‏

وَحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنَا أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، أَنَّ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِ مَيْمُونَةَ وَعِنْدَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِلَحْمِ ضَبٍّ ‏.‏ فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் என் தாயின் சகோதரி மைமூனா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உடும்புக் கறி வைக்கப்பட்டது. அதை (மைமூனா (ரலி) அவர்களின் சகோதரி) உம்மு ஹுஃபைத் பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) நஜ்துப் பகுதியிலிருந்து கொண்டு வந்திருந்தார். உம்மு ஹுஃபைத் (ரலி), பனூ ஜஅஃபர் குலத்தைச் சேர்ந்த ஒருவரின் துணைவியாய் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அது என்னவென்று அறியாமல் எதையும் உண்ணுவதில்லை.

அறிவிப்பாளர் : காலித் பின் அல்வலீத் (ரலி)


குறிப்புகள் :

இதற்கு முன்னுள்ள 3600 எண்ணிட்ட ஹதீஸின் “…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தை அந்த உடும்புக் கறியை நோக்கி நீட்டியபோது …“ எனும் விபரங்கள் போன்று இதிலும் இடம்பெற்றுள்ளது. இதன் இறுதியில் “இதை யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்), மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். அவர் மைமூனா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகன் ஆவார்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) மூலம் மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் மைமூனா (ரலி) இல்லத்தில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் பொரிக்கப்பட்ட இரு உடும்புகள் கொண்டுவரப்பட்டன” என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், “யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்), மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்” எனும் குறிப்பு இல்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) மூலம் இப்னுல் முன்கதிர் (வழி) அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மைமூனா (ரலி) இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் இருந்தார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3600

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، جَمِيعًا عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَرْمَلَةُ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ :‏

أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ الَّذِي يُقَالُ لَهُ سَيْفُ اللَّهِ أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ قَلَّمَا يُقَدَّمُ إِلَيْهِ طَعَامٌ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ فَأَهْوَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ إِلَى الضَّبِّ فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الْحُضُورِ أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا قَدَّمْتُنَّ لَهُ ‏.‏ قُلْنَ هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ “‏ لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ ‏”‏ ‏.‏ قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ فَلَمْ يَنْهَنِي

‘அல்லாஹ்வின் வாள்’ என அறியப்படும் காலித் பின் அல்வலீத் (ரலி) என்னிடம் கூறினார்கள்:

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு (ஒரு முறை) சென்றேன். அவர் என் தாய்க்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாய்க்கும் சகோதரி ஆவார்.

மைமூனா (ரலி) அருகில் பொரிக்கப்பட்ட உடும்பு இறைச்சி இருப்பதைக் கண்டேன். அதை மைமூனா (ரலி) அவர்களின் சகோதரி ஹுதைஃபா பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) நஜ்துப் பகுதியிலிருந்து கொண்டுவந்திருந்தார். அவர் அந்த உடும்புக் கறியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தார்.

பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏதேனும் உணவு வைக்கப்பட்டால் அதைப் பற்றிச் சொல்லாமலும் அதன் பெயரைத் தெரிவிக்காமலும் அதை அவர்கள் உண்பது அரிதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தை அந்த உடும்புக் கறியை நோக்கி நீட்டியபோது, அங்கிருந்த பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் எதை வைத்துள்ளீர்கள் என்பதை அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அப்பெண்கள், “இது உடும்புக் கறி, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தைப் பின்வாங்கிக் கொண்டார்கள்.

உடனே நான், “உடும்பு தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை; எனினும், அது என் சமுதாயத்தாரின் ஊரில் காணப்பட்டதில்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை” என்று பதிலளித்தார்கள்.

நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்து உண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பார்த்துக்கொண்டுதானிருந்தார்கள். (உண்ண வேண்டாமென) என்னை அவர்கள் தடை செய்யவில்லை” என்று காலித் பின் அல்வலீத் (ரலி) சொல்லி முடித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3599

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ :‏

دَخَلْتُ أَنَا وَخَالِدُ بْنُ الْوَلِيدِ، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ مَيْمُونَةَ فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ فَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللاَّتِي فِي بَيْتِ مَيْمُونَةَ أَخْبِرُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ ‏.‏ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فَقُلْتُ أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ “‏ لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ ‏”‏ ‏.‏ قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ

நானும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதன் பக்கம் தமது கரத்தை நீட்ட, மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உண்ணப் போவதை அவர்களுக்குத் தெரிவித்துவிடுங்கள்” என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தை (உடும்புக் கறியிலிருந்து) எடுத்துவிட்டார்கள்.

அப்போது நான், “உடும்புக்கறி தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் மண்ணில் காணப்பட்டதில்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை” என்று பதிலளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பார்த்துக்கொண்டிருக்க, நான் (உடும்புக் கறியை) என் பக்கம் இழுத்து வைத்து உண்டேன்” என்று காலித் பின் அல்வலீத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3598

وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، سَمِعَ الشَّعْبِيَّ، سَمِعَ ابْنَ عُمَرَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ مَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ سَعْدٌ وَأُتُوا بِلَحْمِ ضَبٍّ فَنَادَتِ امْرَأَةٌ مِنْ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّهُ لَحْمُ ضَبٍّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ كُلُوا فَإِنَّهُ حَلاَلٌ وَلَكِنَّهُ لَيْسَ مِنْ طَعَامِي ‏”‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، قَالَ قَالَ لِي الشَّعْبِيُّ أَرَأَيْتَ حَدِيثَ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَاعَدْتُ ابْنَ عُمَرَ قَرِيبًا مِنْ سَنَتَيْنِ أَوْ سَنَةٍ وَنِصْفٍ فَلَمْ أَسْمَعْهُ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا قَالَ كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهِمْ سَعْدٌ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ ‏‏

நபி (ஸல்) அவர்களிடம் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் இருந்தனர். அப்போது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்(டு பரிமாறப்பட்)டது. உடனே நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் “அது உடும்பு இறைச்சி” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், அது அனுமதிக்கப்பட்டது(ஹலால்)தான். ஆயினும், அது எனக்கான உணவு இல்லை” என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

தவ்பா பின் அபில்அஸத் கைஸான் அல்அம்பரீ (ரஹ்) கூறினார்:

நபி (ஸல்) தொடர்பாக ஹஸன் அல்பஸரீ (ரஹ்) (நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஏறத்தாழ ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் அமர்ந்து(ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன்.

ஆனால், “ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் (நபியவர்களிடம்) இருந்தனர்… “ என்ற (மேற்கண்ட)  ஹதீஸைத் தவிர வேறெதையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அறிவித்து, நான் கேட்டதில்லை என்று என்னிடம் ஷஅபீ (ரஹ்) கூறினார்கள்.